மக்களை கொன்று விட்டு மின்சாரம் எதற்கு?-மன்னாரில் காற்றாலை கணிய மணல் அகழ்வுக்கு எதிராக 19வது நாளாக தொடரும் போராட்டம்
மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் வியாழன் (21) 19 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்து சங்க உறுப்பினர்கள் மற்றும் மன்னார் முச்சக்கர வண்டி சங்கத்தினர் ஆதரவு வழங்கிய நிலையில் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
குறித்த போராட்டமானது மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம் பெற்று வருகிறது.போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவை முழுமையாக நிறுத்தும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இன்றைய தினம் வியாழக்கிழமை(21) இடம்பெற்ற குறித்த போராட்டத்தின் போது வெளிநாட்டு பிரஜை ஒருவர் கலந்து கொண்டு மக்களின் போராட்டம் குறித்து கேட்டறிந்து கொண்டார்.
ஜனாதிபதி ஒரு மாத கால அவகாசம் கோரியுள்ள நிலையில் மக்களுக்கு நிரந்தரமான ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன் வைத்துள்ளனர்.
போராட்டத்தை தொடர்ந்து மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இருந்து மாவட்ட செயலகம் வரை ஊர்வலமும் முன்னெடுக்கப்பட்டது.

No comments:
Post a Comment