நல்லூர் திருவிழாவில் களமிறக்கப்படும் 600 பொலிஸார்; பக்தர்கள் அவதானம்!
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ விசேட திருவிழா காலத்தில் ஆலய சூழலில் , கொழும்பில் இருந்து அளிக்கப்பட்டுள்ள பொலிஸ் விசேட அணி உள்ளிட்ட 600 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.பி.எஸ். ஜெயமகா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்.
திருடர்கள் ஜாக்கிரதை
நல்லூர் ஆலய மகோற்சவம் தற்போது இடம்பெற்று வருகிறது. ஆலயத்திற்கு , வெளிநாடுகளில் இருந்தும் , வடமாகாணத்திற்கு வெளியில் இருந்தும் கூட ஏராளமானவர்கள் வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில் எதிர்வரும் வாரம் ஆலயத்தில் விசேட திருவிழாக்கள் நடைபெறவுள்ளதால் , ஆலயத்திற்கு வருவோரின் எண்னிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே ஆலய சூழலில் திருடர்களின் நடமாட்டங்களும் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் திருட்டுக்கள் ,மற்றும் குற்றச்செயல்கள் ஆலய சூழலில் நடைபெறாது தடுப்பதற்காக ஆலய சூழலில் சிவில் மற்றும் சீருடையுடன் 600க்கும் மேற்பட்ட பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் திருட்டு கும்பல்கள் நல்லூர் திருவிழாவிற்கு வருகை தந்துள்ளதாக கிடைக்கப்பெற்றுள்ள புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் , திருட்டு சந்தேக நபர்களை அடையாளம் காண கூடிய விசேட பொலிஸ் அணியினரை வர வழைத்து கடமையில் ஈடுபடுத்தியுள்ளோம்.
எனவே ஆலய சூழலில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடுபவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் , அவர்கள் தொடர்பில் சீருடையில் கடமையில் இருக்கும் பொலிஸாருக்கு உடனடியாக தெரியப்படுத்துமாறும் மேலும் கேட்டுக்கொண்டார்.
அதேவேளை நல்லூர் கந்தன் ஆலயத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை தேர் திருவிழாவும் , வெள்ளிக்கிழமை தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment