துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
துருக்கியின் வடமேற்கு மாகாணமான பாலிகேசிரில் நேற்று (10) இரவு சக்திவாய்ந்த நிலைநடுக்கும் ஏற்பட்டுள்ளது.
6.1 ரிக்டர் அளவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 29 பேர் காயமடைந்துள்ளதாகவும் வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிந்திர்கி நகரத்தை மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கம், 16 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இஸ்தான்புல்லின் வடக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது.
சிந்திர்கியில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த வயோதிப பெண்ணொருவர் மீட்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக துருக்கி உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா தெரிவித்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
அந்த கட்டிடத்திலிருந்து மேலும் நான்கு பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பகுதியில் மொத்தம் 16 கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக கூறிய அமைச்சர், அவற்றில் பெரும்பாலானவை பாழடைந்தவை மற்றும் பயன்படுத்தப்படாதவை என கூறியுள்ளார்.
காயமடைந்தவர்களில் யாரும் ஆபத்தான நிலையில் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இடிபாடுகளில் எவரேனும் சிக்கியிருந்தால் அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் மீட்பு குழுவினர் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உட்பட பல பின்னதிர்வுகள் ஏற்பட்டுள்ளதால், சேதமடைந்த கட்டிடங்களுக்குள் நுழைய வேண்டாம் என்று அந்நாட்டு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
Reviewed by Vijithan
on
August 11, 2025
Rating:


No comments:
Post a Comment