இலங்கையில் தினமும் 100 புற்றுநோய் நோயாளிகள் பதிவு
இலங்கையில் தினமும் சுமார் 100 புற்றுநோய் நோயாளிகள் பதிவாவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 35,000 புற்றுநோய் நோயாளிகள் பதிவாகின்றனர். இவர்களில் 35% (அதாவது, சுமார் 13,000 பேர்) மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக அவர் கூறினார்.
கண்டி மாவட்டம், பொல்கொல்லவில் நேற்று (02) நடைபெற்ற நான்காவது ஆரோக்கிய நல மையத்தின் திறப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றிய அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
வருடாந்த மருந்து செலவில் 30% புற்றுநோய் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படுவதாகவும், இதைக் கட்டுப்படுத்த ஆரம்ப கட்டத்தில் நோயைக் கண்டறிவது ஒரே வழி எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
30 முதல் 70 வயதுக்குட்பட்ட ஆண்களிடையே மரணத்திற்கு தொற்றாத நோய்கள் முக்கிய காரணமாகவும், அதே வயதுடைய பெண்களிடையே புற்றுநோய் முக்கிய காரணமாகவும் உள்ளதாக சுகாதாரத் தரவுகள் வெளிப்படுத்துவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இருப்பினும், இந்த நிலைமை மாறி வருவதாகவும், தொற்றாத நோய்களால் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் மக்களின் உயிர்கள் இழக்கப்படுவது வருந்தத்தக்கது எனவும் அவர் கூறினார்.
இந்த சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்கள், மக்களுக்கு சுகாதார ஆலோசனை மற்றும் மருந்துகளை வழங்குவது மட்டுமல்லாமல், உள்ளூர் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை சேவைகளையும் படிப்படியாக அறிமுகப்படுத்தும் என்றும், உடற்பயிற்சி, யோகா, இசை சிகிச்சை போன்றவற்றை உள்ளடக்கிய இடமாக மாற்றப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
Reviewed by Vijithan
on
October 03, 2025
Rating:


No comments:
Post a Comment