வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலைக்கு பின்னால் பாதாள குழு
வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலையுடன், பாதாள உலக குழு நடவடிக்கைகள் குறித்த பேச்சு மீண்டும் சமூகத்தில் எழுந்துள்ளது.
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர இன்று (22) காலை 10.20 மணியளவில் வெலிகம பிரதேச சபையில் உள்ள அவரது அறையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவரில் ஒருவர் கடிதம் ஒன்றில் கையெழுத்தை பெற்றுக்கொள்வதை போல் பிரதேச சபைத் தலைவரின் அறைக்குள் நுழைந்து அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதன்போது பலத்த காயமடைந்த தலைவர், மாத்தறை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்தக் கொலை சம்பவத்துடன், பாதாள உலகக் கும்பல்களிடையேயான கொலைகள் குறித்து மீண்டும் சமூகத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
இதற்குக் காரணம், 'சன்ஷைன் சுத்தா' என்ற குற்றவியல் கும்பல் உறுப்பினரின் கொலையில் உயிரிழந்த பிரதேச சபை தலைவர் பிரதான சந்தேகநபராக கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக 6 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவர் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையை அனுபவித்து வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
லசந்த விக்கிரமசேகர, பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் தற்போது சிறையில் உள்ள 'ஹரக் கட்டா' என்ற நதுன் சிந்தகவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
ஹரக் கட்டாவின் கும்பலின் தலைவர்களான 'மிதிகம சூட்டி' மற்றும் மிதிகம ருவானுடனும் அவருக்கு நெருங்கிய தொடர்புகள் இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பின்னர், மிதிகம ருவான் அந்தக் குழுவிலிருந்து பிரிந்ததன் பின்னர், அவரால் லசந்த விக்ரமசேகரவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறையில் இருக்கும் மிதிகம ருவான், அங்கிருந்து பேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
''மாண்புமிகு தலைவரே, நீங்கள் இப்போது வெள்ளை நிறத்தை அணிந்துள்ளீர்கள். நீங்கள் கருப்பு நிறத்தில் அணிந்திருந்த போது நாங்கள் அனைவரும் ஒரே படகில் பயணித்தோம் என்பதை மறவாதீர்கள். பொய்யாக நாடகமாடி என் பையன்களில் எவரையேனும் சிறையில் அடைக்க முற்பட்டால் அது பாரிய விளைவை ஏற்படுத்தும் என மிரட்டல் விட்டு ஒரு பதிவை இட்டிருந்தார்.
அத்தகைய அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட லசந்த விக்ரமசேகர கடந்த ஒகஸ்ட் 29 ஆம் திகதி பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிய கடிதத்தில் தமது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்ததுடன் அதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் கோரினார்.
பல்வேறு தரப்பினரிடமிருந்து அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாகவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
"நான் நீதிமன்றத்திற்கு வரும்போது அல்லது பிரதேச சபைக்குச் செல்லும்போது அவர்கள் என்னைக் கொல்ல முயற்சிக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். இது தொடர்பாக, பல பெரிய பாதாள உலகக் கும்பல்கள் என்னை மிரட்டியுள்ளன. அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று கூறியதாக நம்பகமான தகவல் எனக்குக் கிடைத்துள்ளது என்பதை நான் அறிவேன். மிதிகமவைச் சேர்ந்த ருவான் என்கிற ருவான் ஜெயசேகர என்ற நபர் சமூக ஊடகங்களில் எனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்து பேஸ்புக்கில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார் என்பதை நான் அறிந்தேன். இந்த சூழ்நிலைகள் அனைத்தினாலும் எனது உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல் இருப்பதாக நான் உணர்கிறேன், மேலும் அந்த அச்சுறுத்தல்கள் இப்போது மிக வேகமாக அதிகரித்துள்ளதால், எனது உயிருக்கான பாதுகாப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நான் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அந்த நேரத்தில் அவரது உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இருப்பினும், தலைவர் பல்வேறு இடங்களில் தலைமறைவாகியிருந்த நிலையில் கூட்டங்களுக்காக மட்டுமே வெலிகம பிரதேச சபைக்கு வருகை தந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் லசந்த விக்ரமசேகரின் கொலை மிதிகம ருவானின் தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகித்துள்ளனர்.
சம்பவம் குறித்து தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கித்சிறி ஜெயலத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் 4 குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன
வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலைக்கு பின்னால் பாதாள குழு
Reviewed by Vijithan
on
October 22, 2025
Rating:
Reviewed by Vijithan
on
October 22, 2025
Rating:


No comments:
Post a Comment