அண்மைய செய்திகள்

recent
-

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி - நால்வர் கைது!

 வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், நேற்று (28) ஒரே நாளில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட நால்வரை விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 


கனடாவில் தாதியர் சேவை வேலைவாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி, எட்டுப் பேரிடம் இருந்து ஒரு கோடியே இருபத்தெட்டு இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த ஒருவரை பணியகத்தின் விசாரணை அதிகாரிகள் நேற்று மஹரகம பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர். 

சந்தேகநபர் YR Immigration என்ற பெயரில் கம்பஹா வோட் சிட்டி பிரதேசத்தில் சர்வதேச ஆலோசனையகம் ஒன்றை நடத்தி வந்துள்ளதுடன், அதன் மூலம் ஆலோசனை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக இளைஞர் யுவதிகளை இணைத்து வந்துள்ளார். 

பணியகத்தின் செல்லுபடியான அனுமதிப்பத்திரம் இன்றி வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காகப் பணம் பெற்றமை என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இன்று (29) கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதேவேளை, இஸ்ரேலில் வேலைவாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி, நாட்டின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களிடம் இருந்து 20 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த ஒருவரை விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் நேற்று கொட்டாவ பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர். 

சந்தேகநபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களில் தொழிற் பயிற்சி ஆலோசகராகப் பணியாற்றி வந்துள்ளதுடன், அந்த நிறுவனத்திற்கு வரும் இளைஞர் யுவதிகளை ஏமாற்றி, உடனடியாக இஸ்ரேலுக்கு அனுப்ப முடியும் என்று கூறி பணம் பெற்றுள்ளமை தெரிய வந்துள்ளது. 

இந்த சந்தேக நபருக்கு எதிராக மேலும் முறைப்பாடுகள் கிடைத்து வருவதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று ஹோமகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். 

அங்கு சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டு, முறைப்பாட்டாளர்களுக்கு பணத்தை மீண்டும் செலுத்த ஒப்புக்கொண்டதால், 8 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார். 

அதேநேரம் பணியகத்தின் 24 மணி நேர தகவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய, பணியகத்தின் செல்லுபடியான அனுமதிப்பத்திரம் இன்றி ஜப்பானில் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்து, கொழும்பு கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பிரபல ஹோட்டலொன்றில் நேர்காணல்களை நடத்திய ஒருவரையும் நேற்று பணியகத்தின் விசாரணைப் பிரிவின் பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் கைது செய்தனர். 

ஜப்பானிய மொழிப் பயிற்சிப் பாடசாலைகளில் கல்வி பயிலும் இளைஞர் யுவதிகள் இதில் கலந்துகொண்டதுடன், ஹோட்டலினுள் வைத்தே சந்தேகநபரை விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், வழக்கு விசாரணை நவம்பர் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், ஜப்பானில் தொழில்புரியும் ஒருவரின் மனைவி, ஜப்பானில் வேலைவாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி 20 இலட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டதாக கிடைத்த முறைப்பாட்டின் பேரில், குறித்த பெண் விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் நேற்று கைது செய்யப்பட்டார். 

இந்த சந்தேக நபர் இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு, முறைப்பாட்டாளர்களுக்கு பணத்தை மீண்டும் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்தார். 

அதன்படி, அவர் 10 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார். வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு பெப்ரவரி 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் இவ்வாறான விளம்பரங்கள் தொடர்பில் பணம் அல்லது கடவுச்சீட்டைக் கையளிப்பதற்கு முன்னர், குறித்த நிறுவனம் பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட செல்லுபடியான அனுமதிப்பத்திரம் கொண்ட நிறுவனமா?, சட்டபூர்வமான நிறுவனமாக இருந்தால், குறித்த வேலைவாய்ப்புக்காக பணியகத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆராயுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்ப்போரிடம் பணியகம் கோரிக்கை விடுக்கின்றது. 

அத்துடன், மோசடி நிறுவனங்கள் அல்லது மோசடி நபர்கள் குறித்து தகவல் தெரிந்தால், பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் பிரிவின் 0112882228 என்ற இலக்கத்திற்கோ அல்லது 1989 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கோ அறிவிக்குமாறும் பணியகம் மேலும் அறிவித்துள்ளது.



வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி - நால்வர் கைது! Reviewed by Vijithan on October 29, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.