மறுஅறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை
வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், சப்ரகமுவ, மத்திய, தென், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு சுமார் 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து “மோந்தா” என்ற புயலாக தீவிரமடைந்து, அக்டோபர் 26, 2025 அன்று இரவு 11.30 க்கு தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாவில், முல்லைத்தீவிலிருந்து வடகிழக்கே சுமார் 610 கிமீ தொலைவில், நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலை வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, அக்டோபர் 28, 2025 அன்று காலை ஒரு புயலாக மேலும் தீவிரமடைந்து அக்டோபர் 28 அன்று மாலை/இரவு ஆந்திரப் பிரதேச கடற்கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை வழியாக மட்டக்களப்பு வரையிலான கடற்கரைக்கு அப்பாற்பட்ட ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை, மன்னார் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு திசையிலிருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன், காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன், அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
Reviewed by Vijithan
on
October 27, 2025
Rating:


No comments:
Post a Comment