அண்மைய செய்திகள்

recent
-

மகேஸ்வரன் கொலை வழக்கு ; குற்றவாளிக்கான மரண தண்டனை உறுதி

 ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி. மகேஸ்வரன் படுகொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் உறுப்பினர் என்று கூறப்படும் ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.



'வசந்தன்' என்ற ஜோன்சன் கொலின் வலன்டினோ என்ற குற்றவாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை, முன்னதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்திருந்தது.


இந்தநிலையில், மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவை இரத்து செய்யக் கோரி குற்றவாளி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.



நீதியரசர்களான யசந்த கோதாகொட, அச்சல வெங்கப்புலி மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற ஆயத்தின் முன் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


அதன்போது, மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவிந்திர பெர்னாண்டோ, வழக்கின் போது முன்வைக்கப்பட்ட இரண்டு உண்மைகளை நிரூபிக்கவோ அல்லது நிராகரிக்கவோ முடியாததால் மனுவை மீளப் பெற அனுமதிக்குமாறு கோரினார்.


2008 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி கொழும்பு - பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலில் வைத்து மகேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டார்.


அதன்போது சுடப்பட்ட மகேஸ்வரன், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில், சுட்டுக் கொன்றவர் இவர்தான் என்று குற்றவாளியை அடையாளம் காட்டியிருந்தார்.


அத்துடன், இந்த சம்பவத்தின்போது மகேஸ்வரின் மெய்ப்பாதுகாவலர் நடத்திய பதில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குற்றவாளியின் இரத்த மாதிரி மரபணு சோதனை மூலம் குற்றத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.


இந்த உண்மைகளை மறுக்க முடியாது என்பதை ஏற்றுக்கொண்ட சட்டத்தரணி, மனுவை மீளப் பெற அனுமதி கோரினார்.


இதனை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையை அனுமதித்தது.




மகேஸ்வரன் கொலை வழக்கு ; குற்றவாளிக்கான மரண தண்டனை உறுதி Reviewed by Vijithan on December 14, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.