அண்மைய செய்திகள்

recent
-

கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் கோவில் விவகாரம்; இணக்கத்திற்கு முரணாக நடந்தால் நீதிமன்றம் செல்வோம்..!

 திருகோணமலை கன்னியா பிள்ளையார் கோவில் இருந்த பகுதியில் தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியோடு வழக்கிலே இணங்கிக் கொண்டதற்கு மாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும், அதனை நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இன்றைய தினம் (04) கன்னியா வெந்நீரூற்று பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

சில வருடங்களுக்கு முன்னர் கன்னியா வெந்நீரூற்றில் இருந்த 150 வருடங்களுக்கு மேல் பழமையான பிள்ளையார் கோவிலை மீளவும் புனரமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது அது தொல்லியல் திணைக்கள்தினால் அந்த பகுதியில் கட்டுமானப் பணிகள் எதுவும் செய்ய முடியாது என தடுக்கப்பட்டிருந்தது. பின்னர் அந்த பகுதியிலே பௌத்த கொடி நடப்பட்டு பௌத்த விகாரை அமைப்பதற்கான பணி முன்னெடுக்கப்பட்டுவந்த வேளையில் குறித்த பிள்ளையார் கோவில் தர்மகர்த்தாவான கோகிலரமணி அம்மையாரினால் திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கில் நான் முன்னிலையாகி குறித்த கட்டுமானப்பணிக்கு இடைக்கால தடை உத்தரவையும் பெற்றிருந்தேன்.

இறுதியிலே தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் இது சம்பந்தமாக நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியபோது அதில் பண்டைய விகாரை ஒன்று இருந்ததாகவும் அதற்குரிய ஆதரங்களும் நீதிமன்றத்திற்கு காண்பிக்கப்பட்டது. இதேவேளை 150 வருடங்களுக்கு மேலாக அவ்விடத்தில் பிள்ளையார் கோவில் இருந்ததற்கான ஆதாரங்களும் எம்மால் நீதிமன்றத்திற்கு காண்பிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் ஒரு இணக்கப்பாடு ஏற்பட்டது. பண்டைய விகாரை அங்கே இருந்திருந்தால் அதனை பேணிப் பாதுகாக்கின்ற பொறுப்பு தொல்லியல் திணைக்களத்திற்கு இருக்கின்றது. ஆனால் மீள் கட்டுமானங்கள் எவையும் செய்ய முடியாது.

இதேவேளை 150 வருடங்களுக்கு மேலாக அவ்விடத்தில் பிள்ளையார் கோவில் இருந்ததன் காரணமாக அந்த இடத்திலேயே இன்னுமொரு இடம் அளவீடு செய்து அடையாளப்படுத்தப்பட்டு அதிலே பிள்ளையார் கோவிலை மீளவும் கட்டலாம் என நீதிமன்றிலே இணக்கப்பாடு எட்டப்பட்டு குறித்த வழக்கு முடிவுறுத்தப்பட்டது. அந்த இணக்கப்பாட்டுக்கு மாறாக இப்பொழுது சில நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதான சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. இது தொடர்பில் காணி உரிமையாளரான கோகிலரமணி அம்மா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருக்கின்றார். அத்துடன் வழக்கிலே இரண்டாவது பிரதிவாதியாக இருந்த அரசாங்க அதிபருக்கு எழுத்து மூலம் முறைப்பாடு அளித்திருக்கின்றார்.

நானும் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்களோடு சென்று அதனை பார்வையிட்டிருந்தேன்.  பண்டைய விகாரை இருந்ததாக சொல்லப்படுகின்ற அந்த மேட்டிலே அதனை பேணிப் பாதுகாப்பதற்கு மேலதிகமாக வேறுசில நடவடிக்கைகள் எடுக்கப்படுவது தென்படுகின்றது. இது நீதிமன்றத்தில் இணங்கிய இணக்கப்பாட்டுக்கு மாறாக தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியோடு இது நடைபெறுவது போன்று தென்படுவதன் காரணத்தினால் உடனடியாக நீதிமன்றத்திற்கு இதனை தெரியப்படுத்துவது என்று தீர்மானத்தை எடுத்துள்ளோம் எனவும், இது தொடர்பாக காணி உரிமையாளரான கோகிலரமணி அம்மாவுடன் பேசியிருப்பதாகவும், இந்த வழக்கிலே பதிவுபெற்ற சட்டத்தரணி பிரசாந்தினி உதயகுமாரும் சமூகமாகியிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.




கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் கோவில் விவகாரம்; இணக்கத்திற்கு முரணாக நடந்தால் நீதிமன்றம் செல்வோம்..! Reviewed by Vijithan on January 04, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.