பெப்ரவரி 02 முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த GMOA தீர்மானம்!
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி முதல் தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த ஜனவரி 26 ஆம் திகதி முதல் நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளை உள்ளடக்கிய வகையில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது கூடிய சங்கத்தின் மத்திய செயற்குழு, தமது பிரச்சினைகளுக்கு முறையான தீர்வை முன்வைக்க சுகாதார அமைச்சருக்கு 48 மணிநேர கால அவகாசம் வழங்கியிருந்தது.
இருப்பினும், சுகாதார அமைச்சு உரிய தீர்வுகளை வழங்கத் தவறியுள்ளதால், போராட்டத்தை மேலும் வலுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அவசர செயற்குழு கூட்டம் இன்று (31) காலை நடைபெற்றது.
பெப்ரவரி 02 காலை 8.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்:
வைத்தியசாலையில் கையிருப்பில் இல்லாத மருந்துகள் மற்றும் உபகரணங்களை வெளியில் இருந்து பெற்றுக்கொள்ளுமாறு நோயாளர்களுக்கு பரிந்துரைத்து மருந்துச் சீட்டுகளை வழங்குவது நிறுத்தப்படும்.
வைத்தியசாலையில் மேற்கொள்ள முடியாத ஆய்வகப் பரிசோதனைகளை வெளியில் செய்துகொள்ளுமாறு பரிந்துரைப்பது நிறுத்தப்படும்.
அரசியல் குழுக்களினால் ஏற்பாடு செய்யப்படும் சுகாதார முகாம்கள் மற்றும் கிளினிக்குகளில் வைத்தியர்கள் தன்னார்வமாக கலந்துகொள்வதிலிருந்து விலகுவர்.
போதிய வைத்தியர்கள் இல்லாத நிலையில், வைத்தியசாலைகளில் புதிதாக திறக்கப்படும் வார்டுகள் அல்லது பிரிவுகளுக்கு வைத்தியர்களை இணைப்பது நிறுத்தப்படும்.
நோயாளிகளின் பாதுகாப்பு, தனிப்பட்ட இரகசியத்தன்மை மற்றும் போதுமான ஊழியர் வசதிகள் இல்லாத சூழலில் நோயாளிகளைப் பரிசோதிப்பதிலிருந்து வைத்தியர்கள் விலகுவர்.
விசேட வைத்திய நிபுணர்கள் தாம் நியமிக்கப்பட்ட வைத்தியசாலையில் மட்டுமே சேவையாற்றுவர். விசேட நிபுணர்கள் இல்லாத பிற வைத்தியசாலைகளுக்குச் சென்று மேலதிக கடமைகளை ஆற்றுவதிலிருந்து அவர்கள் விலகிக்கொள்வர்.
இவ்வாறான கடும் நடவடிக்கைகளை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
பெப்ரவரி 02 முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த GMOA தீர்மானம்!
Reviewed by Vijithan
on
January 31, 2026
Rating:
Reviewed by Vijithan
on
January 31, 2026
Rating:


No comments:
Post a Comment