மன்னார் திருக்கேதீஸ்வரம் மஹா சிவராத்திரி பெரு விழாவில் கலந்து கொள்ள நாட்டின் பல பாகங்களில் இருந்தும் 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பு-
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் எதிர்வரும் 15 ஆம் திகதி இடம் பெற உள்ள மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தர இருப்பதால் பக்தர்கள் நலன் கருதி சகல நடவடிக்கை களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முன்னாயத்த கலந்துரையாடலின் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.
-மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (27) காலை சிவராத்திரி நிகழ்வையொட்டி முன்னாயத்த கலந்துரையாடல் இடம் பெற்றது.
இதில் திருக்கேதீஸ்வர ஆலய பரிபாலன தலைவர் எஸ்.எஸ்.இராமகிருஷ்ணன் மேலதிக அரசாங்க அதிபர்கள் பாதுகாப் படை அதிகாரிகள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா பிப்ரவரி மாதம் 15 ந் திகதி மிகவும் சிறப்பாக நடைபெற இருக்கிறது.
எனவே இது திருவிழாவை முன்னிட்டு இதனை மிகவும் சிறப்பான முறையில் நடாத்துவதற்காக இவ் ஆலயத்திற்கு வரும் பொது மக்களின் தேவையான வசதிகளையும் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்தும் முகமாக பாதுகாப்பு தரப்பினர் திணைக்களத் தலைவர்கள் மற்றும் திருக்கேதீஸ்வர கோவில் தரப்பினருடன் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் விசேட கூட்டம் நடைபெற்றது.
வருகின்ற பக்தர்களுக்கு தேவையான வசதிகள் சுகாதாரம் , மின்சாரம் ,நீர் விநியோகம் வருகை தரும் அடியார்களுக்கு உணவு வழங்கல் ,பாதுகாப்பு இவற்றுடன் பாலாவி தீர்த்தம் தொடக்கம் நடைபெற இருக்கும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ளும் போது ஏற்படுகின்ற ஒழுங்கு முறைகளை மேற்கொள்ள வேண்டிய ஒழுங்கு ,பாதுகாப்பு போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
பொலிஸாரின் பாதுகாப்புக்கு மேலதிகமாக முப்படைகளின் பாதுகாப்பு வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது.
கடந்த வருடத்தை போன்று இந்த வருடம் ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் இந்த சிவராத்திரி விழாவுக்கு மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் கலந்து கொள்ள இருப்பதாக எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆகவே இதற்கேற்றவாறு தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சேவைகளும் இணைந்து கூட்டு போக்குவரத்து சேவைகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன், வழிபாடுகள் மேற்கொள்வதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.
Reviewed by Vijithan
on
January 27, 2026
Rating:


No comments:
Post a Comment