அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை-

 மன்னார் மாவட்டத்தில் முருங்கன்  மற்றும் ஆட்காட்டி வெளியில் உள்ள  நெல் சந்தைப்படுத்தல் சபையினரின் களஞ்சிய சாலைகள் ஊடாக  நெல் கொள்வனவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.


மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (24) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,


மன்னார் மாவட்டத்தில் நெற்செய்கை மிகவும் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக காணப்படுகிறது. கடந்த டிட்வா புயல் காரணமாக மன்னார் மாவட்ட விவசாயிகள் ஜனவரி (தை) மாதத்திற்கு பின்னரே செய்கை மேற்கொண்டு, அதற்குரிய அறுவடைகளை மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மேற்கொண்டிருந்தார் கள்.


அதன் பின்னர் அவர்கள் இந்த வருடத்திற்குரிய சிறுபோக செய்கையையும் மேற்கொண்டிருக்கிறார்கள். இந்த வருடம் ஜனவரிக்குப் பின் விதைத்த விவசாயிகளின் 3,000 மெட்ரிக் தொன் அளவிலான சிவப்புச் சம்பா மற்றும் ஆட்டக்காரி போன்ற நெல் இனங்களும் மன்னார் மாவட்டத்தில் விவசாயிகளினால் பேணிப் பாதுகாத்து வரப்படுகிறது.


இதனையும் நாங்கள் நியாயமான விலையில் அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டிய நிலைமை காணப்படுகிறது.


  தற்போது அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக, நாட்டு அரிசியின்(நெல்) விலை 120 ரூபாய், சம்பா அரிசியின்(நெல்) விலை 130 ரூபாய்க்கு கொள்வனவு செய்வதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. 


அதேபோல் கீரிச் சம்பா வாக (நெல்) இருந்தால் 140 ரூபாய்க்கு கொள்வனவு செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.


தற்போது நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2,000 மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 


முருங்கன்  மற்றும் ஆட்காட்டி வெளியில் உள்ள அவர்களது களஞ்சியங்கள் ஊடாக நெல் சந்தைப்படுத்தல் சபையினரால் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 


ஏற்கனவே 250 மெட்ரிக் தொன் அளவில் நெல்லை அவர்கள் கொள்வனவு செய்திருக்கிறார்கள். இன்னும் 1,750 மெட்ரிக் தொன் அளவில் கொள்வனவு அவர்கள் செய்ய இருக்கிறார்கள்.


இதனைவிட, தற்போது மன்னார் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள், அதேபோன்று சிறிய மற்றும் நடுத்தர அளவிலான மில் உரிமையாளர்கள் ஒவ்வொருவருக்கும் 25 மில்லியன் ரூபாய் நிதி வழங்கி,  அவர்கள் ஊடாகவும் விவசாயிகளிடம் உள்ள நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


அந்த வகையில் இன்றைய தினம்  திங்கட்கிழமை(24) 4 நெல் உரிமையாளர்கள் வருகை தந்து தமது உடன்படிக்கையை கையப்பமிட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு உடனடியாக நிதி விடுவிக்கப்பட்டு, அவர்கள் ஊடாகவும் தற்பொழுது விவசாயிகளிடம் உள்ள நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.


அதனைவிட விசேட ஏற்பாடாக, மன்னாரில் விளைவிக்கப் படுகின்ற சிவப்புச் சம்பா மற்றும் ஆட்டக்காரி நெல் இனங்கள் யாழ்ப்பாண மாவட்ட மக்களின் பிரதான உணவாக இருப்பதன் காரணமாக, அங்குள்ள மில் உரிமையாளர்கள் மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்து அந்த நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


எனவே, யாழ்ப்பாண மாவட்ட மில் உரிமையாளர்கள் தொடர்பு கொண்டு மன்னாரில் நெல் கொள்வனவுச் செய்வதற்குரிய வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் 25 மில்லியன் என்ற அரசாங்கத்தின் முற்பணம் வழங்கப்படவிருக்கிறது.


 அவர்கள் 8 மாதங்களுக்குள்   முற் பணத்தினை வட்டி இல்லாமல், எந்தத் தரகு கட்டணமும் இல்லாமல் திருப்பிக் கொடுக்க இருக்கிறார்கள்.


  இந்தச் செயல் திட்டத்தில் இணைய ஆர்வமுள்ள மில் உரிமையாளர்கள் தொடர்பு கொண்டு முறை பணத்தைப் பெற்றுக் கொண்டு தங்களது நெல் கொள்வனவினை மேற்கொள்ள முடியும் என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


அதேபோல், நெல்லை வைத்திருக்கும் மக்கள் வெகுவிரைவில் நெல் சந்தைப்படுத்தல் சபைக்குக் கொடுப்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


இன்னும் இரண்டு வாரங்களில் சிறுபோக த்திற்குரிய அறுவடை நடைபெற இருக்கிறது. எனவே, விவசாயிகள் நேரடியாக நெல் சந்தைப்படுத்தும் நிலையத்திற்கு சென்று, தங்களுடைய நெல்லை வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


கடந்த காலங்களில் நெல் சந்தைப்படுத்தும் நிலையத்தில்தான் இந்தப் படிவத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்ற கட்டுப்பாடு இருந்தது. 


ஆனால், தற்போது சம்பந்தப்பட்ட விவசாய சேவை மையங்களில் இந்தப் படிவங்களைப் பெற்று நிரப்பி, அதை மாதிரி நெல்லினை (sample) நெல் சந்தைப்படுத்தும் நிலையத்திற்கு எடுத்துச் சென்று, அதன் ஈரப்பதம் உறுதிப்படுத்திய பின், நேரடியாகச் சம்பந்தப்பட்ட நெல் சந்தைப்படுத்தும் களஞ்சியசாலையில் உங்களுடைய நெல்லை விற்பனை செய்ய முடியும் என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் அறியத் தருகிறோம்.


அதேபோல், தனிப்பட்ட நெல் உரிமையாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாகவும் எதிர்காலத்திலே நெல்லை கொள்முதல் செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.என அவர் மேலும் தெரிவித்தார்.






மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- Reviewed by Vijithan on August 24, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.