தவறாது வாக்களியுங்கள் யாருக்கு என்ற முடிபு உங்களிடமே
தென்பகுதி மக்கள் ஆட்சி அதிகாரத்தை அனுபவிப்பவர்கள். சிறுபான்மைத் தமிழ் மக்களை நசுக்குவதில் இன்பமடையும் அவர்கள், இலங்கை தங்கள் நாடு என்பதில் கர்வம் அடைபவர்கள். ஆனால் தமிழ் மக்களின் நிலைமை அப்படியல்ல.
எங்களுடைய சொத்துக்களையும் சொந்த மண்ணில் இழந்தவர்கள் நாங்கள். அகதி என்ற பெயரோடு அலைந்து திரிபவர்கள். எனவே எங்களுக்கு ஆட்சியில் பங்குகொள் ளும் விருப்பம் குறைவு அல்லது இல்லை எனக் கூறலாம் இந்நிலைமை முன்னைய காலங்களில்- சில சந்தர்ப்பங்களில் சரியானதாக இருந்தாலும் இப்போது அதனை நியாயப்படுத்த முடியாது.
எங்களுடைய வாக்குரிமையை சரியான முறையில் பிரயோகிக்க வேண்டும். இதற்கு நாம் பழகிக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஆட்சி அதிகாரம் என்பதில் இருந்து நாம் விலகிக் கொள்ளும் ஒவ்வொரு கணமும் எங்கள் உரிமை தொடர்பிலும் நாம் விலக்கு நிலையடைகின்றோம் என்ற யதார்த்தம் உணரப்பட வேண்டும்.
எனவே எங்கள் வாக்குரிமையை நாங்கள் பயன்படுத்துவோம் என்ற முடிபில் உறுதி பூணுவோமாக. இதற்கு அப்பால் யாருக்கு வாக்களிப்பது என்ற கேள்வி எங்கள் முன் எழுகின்றது. சில வேளைகளில் யாருக்கு வாக்களிப்பது என்ற கேள்வி முன்னெழுவதனால், அதற்கு சரியான விடை காணமுடியாத போது வாக்களிப் பதில்லை என்ற தீர்மானத்திற்கு வருகின்ற சந்தர்ப்பங்களும் உண்டு. இதன் காரணமாகவே வாக்களிப்பது என்ற தீர்மானத்தை முதலில் எடுக்குமாறு கூறியிருந்தோம்.
யாருக்கு வாக்களிப்பது என்ற தீர்மானத்திற்கு வரமுடியாமையினால் வாக்களிக்காமல் விடுவதென்பது மகா தவறு. எனவே வாக்களிப்பது என்ற முடிபை எடுத்துக் கொண்டு வேட்பாளர்களைத் தெரிவு செய்யுங்கள். எந்த வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது என்ற முடிபை எடுக்கும் முழு அதிகாரமும் உங்களுக்கே உரியது. யாரும், எவரும் உங்களைத் திசை திருப்ப முடியாது.
உண்மையில் நீங்கள் மிகச் சிறந்த அறிவாளிகள். அவருக்கு வாக்களியுங்கள். இவருக்கு வாக்களியுங்கள் என நாம் ஆலோசனை கூறுவது எங்களை அறிவிலிகள் என நிரூபிப்ப தாகவே அமையும். ஆதலால் நீங்கள் முடிபு எடுங்கள். உங்கள் முடிபு உங்களுடையதாகவே இருக்கட்டும். அதுவே உங்களுக்கு ஆத்ம திருப்தியை தரும்.
நன்றி -வலம்புரி
தவறாது வாக்களியுங்கள் யாருக்கு என்ற முடிபு உங்களிடமே
Reviewed by NEWMANNAR
on
November 04, 2009
Rating:
No comments:
Post a Comment