தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ).இன் ஊடக அறிக்கை
தமிழீழ விடுதலை இயக்கத்தின் 08 ஆவது தேசிய மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் வவுனியாவில் முத்தையா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இந்த மாநாட்டில் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் கிளை உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பங்குபற்றி ரெலோவின் தலைமைக்குழுவும் ரெலோவின் மத்தியகுழுவும் தெரிவு செய்ப்பட்டது.
ரெலோ கட்சியின் தலைவராக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஏகமனதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே ஜிவாஜிலிங்கம் அரசியல் பிரிவுத்தலைவராகவும் மாநாட்டில் தெரிவு செய்ப்பட்டுள்ளனர்.
ரெலோ அமைப்பினை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் எம்முடன் இணைந்து கொண்டது இன்று நடைபெற்ற எமது கட்சியின் 8வது மாநாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது என ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டு பேசியிருந்தார்.
இன்றய 8வது மாநாட்டில் ரெலோ தனது 11 பேரைக்கொண்ட தலைமைக் குழுவினையும் 21 பேரைக்கொண்ட மத்திய குழுவினையும் அமைத்துக் கொண்டனர். தலைமைக் குழுவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறீகாந்தாவும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகாரலிங்கம் ஆகியோரும், மத்தியகுழுவின் செயலாளர் நாயகமாக கென்றி மகேந்திரன், உப தலைவராக பிரசன்னா இந்திரகுமார், பொருளாராக விந்தன் கனகரத்தினம், உதவி அரசியல்துறை உப தலைவராக எம் கருணாகரன் நிர்வாக செயலாளராக கே நித்தியானந்தம், சர்வதேச பொறுப்பாளராக ஆர் இளங்கோவும் தெரிவு செய்ப்பட்டனர்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் 08 ஆவது தேசிய மாநாடு பின்வரும் ஆறு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது அவை பின்வரமாறு..
1) இலங்கைத்தீவுக்கு சுதந்திரம் கிடைத்தது முதல் இரண்டாம்தரப் பிரஜைகளாக தமிழ் இனம் ஆளப்படும் இனமாக வாழ்ந்து வருவதை முடிவு கட்டும் முயற்சிகளாக பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள், போரட்டங்கள் என பல கட்டங்களையும் கடந்தும் இதுவரையும் தீர்க்கப்படாமையால் இம் மகாநாடு ஆழ்ந்த கவலை அடையும் அதேவேளை மேலும் காலத்தை கடத்தாது இனப்பிரச்சனைக்கு தீர்வை முன் வைக்குமாறு அரசாங்கத்தை கோருவதோடு இந்தியா உட்பட சர்வதேச அங்கீகாரத்துடனும், பங்களிப்புடனும் கூடிய தீர்வுத்திட்டத்தை தமிழ் இனம் பெற்றுக்கொள்ள உதவி புரியுமாறு சர்வதேச சமூகத்தை இம் மகாநாடு கோருகின்றது.
2) தமிழ்த்தாயகத்தில் படையினருக்கான வீடமைப்பு, மற்றும் உல்லாச பயணத்துறை, அபிவிருத்தி என்ற போர்வையில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் ஏற்படுத்துவதை இம் மகாநாடு வன்மையாக கண்டிப்பதோடு இவ்வாறான நடவடிக்கைகள் இனப்பிரச்சனை தீர்வினை மேலும் சிக்கலாக்கும் என்பதால் இத்திட்டங்களை கைவிடுமாறு இலங்கை அரசை இம் மகாநாடு கோருகின்றது.
3) போரின் கொடுமையினால் உள்நாட்டில் இடம் பெயர்ந்த சுமார் ஐந்து இலட்;சம் தமிழ் பேசும் மக்களின் மீள் குடியேற்றம் சீராக இடம் பெறாமையால் மக்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருவதை வேதனையுடன் சர்வதேச சமூகத்துக்கு இம் மகாநாடு சுட்டிக்காட்டுவதோடு, இடம் பெயர்ந்த மக்களை அவர்கள் வாழ்ந்த இடங்களில் மாத்திரம் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசையும், சர்வதேச சமுகத்தையும் இம் மகாநாடு கோருகிறது.
4) நீண்டகாலமாக பல்வேறு சிறைச்சாலைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளையும், போரின் பின்னர் சரணடைந்த, கைது செய்யப்பட்ட தடுப்புக்காவல் கைதிகள் உட்பட அனைவருக்கும் பொது மன்னிப்பை வழங்க வேண்டும் என்று இம் மகாநாடு கோருகின்றது.
5) தமிழ் இனத்தின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்புக் கூட விடுக்காமல் அமைக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழு (சித்திரை) 137 தடவைகள் கூடி தயாரித்த தீர்வுத்திட்டங்களை கூட அரசாங்கம் வெளியிடாமல் இனப்பிரச்சனைக்கு தீர்வாக மீண்டும் ஒரு பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்கும் முயற்சிகளை இம் மகாநாடு வன்மையாக கண்டிக்கிறது.
6) அரசாங்கம் தனது காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியலை வெளியிடுவதன் மூலம் தங்களது காணாமல் போன உறவுகளை தேடி அலையும் தமிழ் மக்களின் அவலத்தை போக்க வேண்டும் என்றும், போரில் கொல்லப்பட்ட, காயமடைந்த, அங்கங்களை இழந்த, உறவுகளை இழந்த, விதவைகளான, அனாதைகளான, சொத்துக்களை இழந்த மக்களுக்கு சர்வதேச நியாயங்களுக்கு ஏற்ற வகையில் நட்ட ஈடுகளை வழங்க வேண்டும் என்றும், இம் மகாநாடு அரசாங்கத்தையும், சர்வதேச சமூகத்தையும் கோருகின்றது.
தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ).
இன் ஊடக அறிக்கை
தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ).இன் ஊடக அறிக்கை
Reviewed by NEWMANNAR
on
June 30, 2011
Rating:
No comments:
Post a Comment