மன்னாரில் டெங்கு தாக்கத்தை தடுப்பதில் நகரசபை தீவிரம்!
அண்மையில் மன்னாரில் 20பேர் வரை டெங்குநோய்த் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முழுவீச்சில் முன்னெடுத்து வருவதாகவும் மன்னார் நகரசபை துணைத்தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாசன் தெரிவித்தார்.
கடந்த 4ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை மன்னாரில் டெங்கு ஒழிப்பு வாரம் அனுட்டிக்கப்படுகிறது.
இதன்போது டெங்கு நுளம்புகளை இல்லாமல் செய்து, சூழலைச் சுத்தமாக வைத்திருப்பது, டெங்கு நோய் அறிகுறி தென்பட்டால் நடந்துகொள்ள வேண்டிய வழிமுறைகள் போன்ற சமூக விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மன்னார் நகரசபை நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக நகரசபைத் தலைவர் ஞானப்பிரகாசம் தலைமையில் கட்சி வேறுபாடின்றி அனைத்து உறுப்பினர்களும் ஓரணியில் திரண்டு சுகாதாரப் பணிகளையும் நகரில் குப்பைகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
வடக்கு-கிழக்கில் வேறு எங்கும் காண இயலாதவாறு மன்னார் மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அவர்களும் களத்தில் நின்று உறுப்பினர்களுடனும் ஊழியர்களுடனும் இணைந்து பணியாற்றுகின்றார்.
தங்களிடம் உள்ள உழவு இயந்திரத்தைத் தவிர மாந்தை மேற்கு மற்றும் மன்னார் பிரதேசசபை ஆகியவற்றில் உள்ள உழவு இயந்திரங்களையும் வரவழைத்து மொத்தம் 15 உழவு இயந்திரங்களின் உதவியுடனும் 50 ஊழியர்களுடனும் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் மேற்கொள்ளப்படுவதாக மன்னார் நகரசபைத் தலைவர் தெரிவித்தார்.
விடுமுறை நாட்களைக்கூடப் பாராமல் ஊழியர்களும் அலுவலர்களும் நகரசபை உறுப்பினர்களும் காலை முதல் மாலைவரை வீதியில் நின்று பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு உறுதுணையாக பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் என்பவையும் செயற்படுகின்றன.
சுமார் 10,000 குப்பை சேகரிக்கும் பைகள், 100 சோடி கையுறைகள் மற்றும் உணவு உபசாரம் என்பனவற்றை வழங்கும் பொறுப்பினை மன்னார் வர்த்தக சங்கத்தினர் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று நகரசபை உறுப்பினர் ரெட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அபிவிருத்தியிலும் சளைத்தவர்கள் அல்லர் என்றும் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் எமது தாரக மந்திரமாக ஏற்றுச் செயல்படுகின்றோம் என்றும் அவர் மேலும் கூறினார்.
டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை நேரில் பார்வையிட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அனைவரையும் மனதாரப் பாராட்டினார்.
மன்னாரில் டெங்கு தாக்கத்தை தடுப்பதில் நகரசபை தீவிரம்!
Reviewed by NEWMANNAR
on
November 08, 2011
Rating:
No comments:
Post a Comment