அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு. மன்னார் அரச அதிபர்களின் இடமாற்றத்தை ரத்து செய்க! சிவசக்தி ஆனந்தன், வினோ எம்.பி. ஜனாதிபதிக்கு அவசர கடிதம்


முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்களை இடமாற்றம் செய்யப்படவுள்ளதாகத் தங்களுக்குத் தெரியவந்துள்ளதாகவும், அதனை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அவசர கடிதம் அனுப்பியுள்ளதாகவும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசகதி ஆனந்தன் மற்றும் வினோ ஆகியோர் தெரிவித்துள்ளனர். 
இது தொடர்பாக அவர்கள் விடுத்
துள்ள அவர்களது குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
தற்பொழுது வன்னியில் மீள்குடியேற்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மக்களுக்கான வீட்டுத் திட்டங்கள், வாழ்வாதார உதவிகள் என்பவை மந்தகதியில் நடைபெற்று வருகின்றன.
இத்தருணத்தில் வன்னி மக்களுக்கு ஏராளமான மனக்குறைகள் உள்ளன. தங்களது மனப்பாரத்தை தங்களது மொழியில் இறக்கி வைப்பதற்கு எமது மக்களுக்கு அனுசரணையாக உள்ள உயரதிகாரிகளே தேவை.
மேலும், தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுவரும் மாவட்ட எல்லை மீள்நிர்ணயம் போன்ற செயல்கள் வடக்கில் உள்ள அனைத்துத் தரப்பினரதும் மனங்களில் பெரும் அச்சத்தையும் மனக்கிலேசத்தையும் உருவாக்கியுள்ள சூழலில், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர் என்றும் மன்னார் மாவட்டத்திற்கு தென்பகுதிப் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் அரசாங்க அதிபராக நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இத்தகைய செயல் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு எதிரானது என்பதுடன் வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சும் நடவடிக்கையுமாகும்.
அரசாங்க அதிபர்கள் நாட்டின் எப்பாகத்திலும் பணிபுரியக் கடமைப்பட்டவர்கள் என்ற நியதியின் அடிப்படையில் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் இன்றைய சூழலில் வன்னியில் மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கை எமக்குப் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.
சுமார் முப்பது வருடங்களுக்கும் மேலாக வடக்கு-கிழக்கில் தமிழ் அதிகாரிகளே அரசாங்க அதிபர்களாகக் கடமையாற்றி வருகின்றனர்.
யுத்தம் நடைபெற்ற காலத்தில்கூட இலங்கை அரசு தனது மேலாண்மையைக் காட்டுவதற்கு இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
ஆனால் இன்று யுத்தம் முடிவுற்று மீள்குடியேற்றம் நடைபெறுகையில் மக்களின் உணர்வுகளைப் புறந்தள்ளிவிட்டு மேற்கொள்ளப்படும் இச்செயல் நல்லிணக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்தாது என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மீள்குடியேற்றம், அபிவிருத்தி, புனர்வாழ்வு என்பவை எமது மக்களின் பூரண ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டுமேயன்றி, அவர்களை ஒதுக்கிவைத்துவிட்டு நடைமுறைப்படுத்த முடியாது என்றும் இடமாற்றத்தை இரத்து செய்யமாறு ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியிருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
அவர்களது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.பத்திநாதன் மொனராகலவுக்கும், மன்னார் அரசாங்க அதிபர் திரு.வேதநாயகம் முல்லைத்தீவிற்கும் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக அறிகின்றோம்.
மன்னார் மாவட்டத்திற்கு தெற்கிலிருந்து பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் அரசாங்க அதிபராகப் பொறுப்பேற்க உள்ளதாகவும் தெரியவருகிறது.
இத்தகைய திடீர் இடமாற்றங்களால் அரசாங்க அதிபர்களும் (வடமாகாணம்) பொதுமக்களும் குறிப்பாக இடம்பெயர்ந்த மக்களும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர். இத்தகைய இடமாற்றங்கள் மீள்குடியேறுகின்ற மக்களின் மனவலிமையைச் சோதிப்பதாக உள்ளன.
ஏற்கனவே மன்னார் அரசாங்க அதிபராக இருந்த திரு. நீக்கிலாஸ்பிள்ளை அவர்கள் ஓய்வு பெறும் நேரத்தில் அரசியல் பழிவாங்கலுக்காக பொதுநிர்வாக அமைச்சுக்கு மாற்றப்பட்டார்.
அதனைப்போன்றே தனது கடும் உழைப்பால் இலங்கை நிர்வாக சேவைகளில் தேர்ச்சி பெற்று மன்னாரில் திட்டப்பணிப்பாளராகக் கடமையாற்றி, முல்லைத்தீவில் அரசாங்க அதிபராகப் பதவியேற்று நன்கு சேவையாற்றி வருகின்ற திரு. பத்திநாதன் அவர்களை எதுவிதக் காரணமுமின்றி தென்பகுதிக்கு மாற்றுவதன் மூலம் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த அரசாங்க அதிபர்கள் தொடர்ந்தும் அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இருந்தபோதிலும் திரு.பத்திநாதன் அவர்கள் மன்னாரில் எவ்வளவு ஈடுபாட்டுடன் செயற்பட்டாரோ அதேயளவு ஈடுபாட்டுடன் முல்லைத்தீவிலும் செயற்பட்டு வருகின்றார். நியமனம் பெற்று முழுமையாக ஒன்பது மாதங்கள்கூட பூர்த்தியடையாத நிலையில் அவர் இடமாற்றம் செய்யப்படவுள்ளார்.
திரு.வேதநாயகம் அவர்கள் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராகக் பொறுப்பேற்றுக்கொண்டு, இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் நடைபெற்றுக்கொண்டிருக்கையில் அவசர அவசரமாக மன்னாருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
மன்னாரிலும் இந்த ஆண்டு பெய்த மழை வெள்ள அனர்த்த நிவாரணப்பணிகளில் முழு அர்ப்பணிப்புடன்; நன்கு கடமையாற்றி மக்களின் நன்மதிப்பைப் பெற்ற திரு.வேதநாயகம் அவர்கள் ஒன்பது மாதத்திற்குள் மீண்டும் முல்லைத்தீவிற்கு இடமாற்றம் பெறவுள்ளார் என்று தெரியவருகிறது.
மேற்படி நடவடிக்கைகள் அபிவிருத்திப் பணியையும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளையும் பெரிதும் பாதிக்கும். தற்பொழுது மன்னாருக்கு வரவிருப்பவர் தென்பகுதிப் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவருகின்றது.
இதனால் எமது மக்கள் பாரதூரமான தொடர்பாடல் பிரச்சினைகளை எதிர்நோக்குவர்.
ஆகவே நாட்டில் நல்லிணக்கத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையில் இத்தகைய இடமாற்றங்களைக் கைவிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம். என்று அவர்களது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு. மன்னார் அரச அதிபர்களின் இடமாற்றத்தை ரத்து செய்க! சிவசக்தி ஆனந்தன், வினோ எம்.பி. ஜனாதிபதிக்கு அவசர கடிதம் Reviewed by NEWMANNAR on November 09, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.