அண்மைய செய்திகள்

recent
-

சன்னார் கிராம மக்களின் வெளியேற்றத்தை உடன் நிறுத்துங்கள்!- சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை


மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசத்தின் சன்னார் கிராமத்தில் 1986ம் ஆண்டு காணிக்கச்சேரி வைத்து இப்பொழுதுள்ள மக்களுக்குக் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டதுடன் 16.05.2006 ல் வடக்கு-கிழக்கு மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்தால் 84 குடும்பத்தினருக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இம்மக்களில் பெரும்பான்மையோர்
பெருந்தோட்டப்பகுதியிலிருந்து அடித்துவிரட்டப்பட்டவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அன்றிலிருந்தே இம்மக்கள் தமது பொருளாதார நிலைக்கேற்ப தமது வீடுகளைக் கட்டிக்கொண்டு தமது கடின உழைப்பால் வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்ளும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
கடின உழைப்பிற்கும் தன்னம்பிக்கைக்கும் பெயர்போன இப்பிரதேசத்து மக்கள் தமக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட காணியைத் திருத்தி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இறுதி யுத்தம் மீண்டும் இவர்களை இந்த மண்ணை விட்டும் செட்டிகுளம் முகாம்களின் முட்கம்பி வேலிகக்குப் பின்னால் விரட்டியடித்தது. சர்வதேச அழுத்தங்கள் மற்றும் தொடர்ச்சியாக நாம் கொடுத்தவந்த குரல்கள் ஆகியவற்றின் விளைவாக இந்த மக்கள் மீண்டும் தமது சொந்தக் கிராமத்தில் கொண்டுவந்து கொட்டப்பட்டனர்.
மீள்குடியேற்றம் நடைபெற்ற கையுடன் கரிட்டாஸ் போன்ற தொண்டு நிறுவனங்கள் இவர்களுக்கான வீட்டுத்திட்டம் மற்றும் அத்தியாவசியத் தேவைகளை வழங்க முன்வந்த போதிலும் அரசாங்கம் அவர்களுக்கு அனுமதி மறுத்துவிட்டது. நீண்ட போராட்டத்தின் பின்னர் இப்பகுதியில் தொண்டு சோவா நிறுவனத்தின் உதவியால் நான்கு கிணறுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு ஒரு பாடசாலையும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே வன்னி மக்களின் வாக்குகளை வாங்கிக்கொண்டு அமைச்சராகியிருக்கும் அமைச்சரினால் தனது மார்க்கத்தவர்களுக்குக் காணி வேண்டும் என்பதற்காக மாந்தை மேற்குப் பிரதேச செயலாளரினூடாக இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக அரசாங்கத்தின் அனுமதியுடன் வாழ்ந்துவரும் இப்பிரதேசத்து மக்கள் வெளியேறுமாறு வற்புறுத்தப்பட்டுள்ளனர்.
வடக்கு-கிழக்கில் வாழுகின்ற அனைத்து மக்களுக்கும் சொந்தமாகக் காணிகள் உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் வழங்கப்பட்டு அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் ஒவ்வொரு மனிதனும் சுயமரியாதையுடனும் சுயகௌரவத்துடனும் மனித உரிமைகளுடனும் வாழவேண்டும் என்பதற்காகவே நாங்கள் குரல்கொடுத்து வருகின்றோம்.
ஆகவே அடுத்தவரை வீழ்த்தி வாழ வேண்டிய தேவை எமக்கில்லை. இவ்வாறிருக்க சகோதரச் சமூகங்களுக்கிடையில் பிளவை உருவாக்கும் நோக்குடன் ஏற்கனவே குடியிருந்துவரும் மக்களை எழுப்பி அந்த இடத்தில் மறறொரு சகோதர சமூகத்தவரை இருத்த நினைக்கும் அரசின் கபட நாடகத்தை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.
இந்த விடயம் தொடர்பாக 07.12.2011 புதனன்று மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. அதன்போது ஜனவரி 19க்குப் பிறகு உங்களுக்கு ஒரு நல்ல முடிவைச் சொல்கின்றேன் என்று ஆயரிடமும் சன்னார் கிராம மக்களிடமும் அரசாங்க அதிபர் உறுதிமொழி அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மன்னார் கச்சேரியில் 08.12.2011 வியாழனன்று நடைபெற்ற கூட்டத்தில் அமைசை;சர் றிஷாட் பதியுதீன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மன்னார் அரசாங்க அதிபர், உதவி மாவட்டச் செயலாளர், மாந்தை மேற்கின் உதவி அரசாங்க அபதிர் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில் கௌரவ அமைச்சர் றிஷாட் அவர்கள் பேசுகையில், சன்னார் கிராம மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும். அதற்குப் பதிலாக அவர்களுக்கு வேறு இடத்தில் காணியும் ஐம்பதினாயிரம் ரூபாய் பணமும் வீட்டுத்திட்டமும் தருவதாகக் கூறினார். அத்துடன் மன்னார் ஆயர், மதத்தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களையும், கடுமையாகச் சாடியுள்ளார்.
இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட பிரதிநிதிகள் திருவாளர்கள் சிவகரன் மற்றும் சட்டத்தரணி சிராய்வா ஆகியோர் சன்னார் கிராமத்திற்கு நேரில் சென்று மக்களிடம் நடந்த விபரங்களைக் கேட்டறிந்தனர். அதன்போது மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர், நீங்கள் மலையுடனும் பெரியாட்களுடனும் மோதுகிறீர்கள்.
நீங்கள் அமைச்சர் சொற்படி கேட்டு நடவுங்கள் என்று கூறியதுடன் அந்த மக்களின் கூயமரியாதையைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் பேசியதாகவும் இதனால் தங்களது மனம் மிகவும் வேதனையுற்றிருப்பதாகவும் கிராம மக்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகளிடம் கூறியுள்ளனர்.
நாங்கள் முள்ளிவாய்க்கால்வரை சென்று வந்தவர்கள். மரணத்தின் விளிம்பைப் பார்த்தவர்கள். எது வந்தாலும் நாங்கள் எமது காணிகளை விட்டு எழும்ப மாட்டோம் என்று கூறியதுடன் சன்னார் கிராமத்தைச் சேர்ந்த 145 பேர்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகளிடம் கையொப்பமிட்டும் கொடுத்துள்ளனர்.
தங்களின் உரிமையை நிலைநாட்டுவதற்காக சன்னார் மக்கள் நீதிமன்றம் செல்லவும் தயாராக உள்ளனர். இவையனைத்தையும் மீறி நாங்கள் வெளியேற்றப்பட்டால் இந்தியா செல்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மக்களுக்கென்று அரசினால் 25 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட காணியைப் பறிப்பதற்கு ஏன் இவ்வளவு முனைப்புக் காட்டப்படுகிறது? அவர்களுக்கு உரித்துடையது என்று உத்தரவு பிறப்பித்த காணி தொடர்பாக மீண்டும் முடிவெடுப்பதற்கு என்ன உள்ளது? என்ற கேள்வியை நாம் எழுப்ப விழைகின்றோம்.

சன்னார் கிராமத்தில் மீள்குடியேறியுள்ள மக்களின் காணிகளின் பின்புறமாக சுமார் ஆயிரம் ஏக்கர் அரசகாணி இருப்பதால் அமைச்சர் தனது வாக்கு வங்கியை நிலைநிறுத்திக்கொள்ளும் பொருட்டு அப்பகுதியில் தமது மார்கத்து மக்களைக் குடியமர்த்த எத்தனிக்கிறார் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.
அந்தக்காணியை இப்பொழுது இருக்கும் மக்களுக்குப் பகிர்ந்தளித்தால் அவர்களும் பயிர்செய்து வாழ்வார்களே இதனை ஏன் அமைச்சர் சிந்திக்கவில்லை? என்ற கேள்வியை நாம் முன்வைக்க விரும்புகின்றோம்.
இந்நிலையில் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபரினால் சன்னார் கிராமத்தில் எந்தவித அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுக்க வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே குடியிருந்து வரும் மக்களில் பெரும்பான்மையானோர் பெருந்தோட்டப் பகுதிகளிலிருந்து வெறும் ஷொப்பிங்பேக்குடன் அடித்துவிரட்டப்பட்டவர்கள் என்பது அமைச்சருக்குத் தெரியாதா? அவர்களுக்காக வழங்கப்பட்டு இன்று நல்ல விளைச்சலைத் தருகின்ற வயல்நிலங்களும் அவர்களால் பயிர்செய்யப்பட்டுள்ள மரவகைகளும் அமைச்சரின் கண்களைக் குத்துகின்றதா
அந்த மக்கள் என்ன அடுத்தவர்களுக்கு உழைத்துக்கொடுப்பதற்கென்றும் அடுத்தவர்கள் பயன்பெறுவதற்காகத் தங்களை அழித்துக்கொண்டு வாழ்நாள் முழுவதும் ஒரு வேளை உணவிற்காகக் கையேந்துபவர்களாகவும் நாடோடிகளாகவும் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதுதான் அமைச்சரின் ஆசையா? இதற்கு எமது அதிகாரிகள் துணைபோவதா? சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இதனைப் போன்றே 1977ல் பெருந்தோட்டத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டு வன்னிக்கு வந்த இந்த மக்கள் அங்குமிங்கும் அலைந்து திரிந்து வவுனியா மாவட்டத்தில் சோபாள புளியங்குளம் கிராமத்தில் காட்டை அழித்து தமது இருப்பிடத்தை அமைத்துக்கொண்டு வாழ்வாதாரத்தைத் தேடிக்கொண்டு கௌரவமான வாழ்க்கையை மேற்கொண்டுள்ளனர்.
இங்கும் அமைச்சரினால் சமூகங்களுக்கிடையில் மோதல் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த மக்களுக்கான மின்சார விநியோகத்திட்டப் பணிகளை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் அமைச்சரினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம் திருமுறிகண்டி மக்களும் இதனைப்போன்றே பெருந்தோட்டப் பகுதியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டவர்கள். இவர்கள் வன்னிக்கு வந்து காட்டைத் துப்புரவாக்கித் தங்களது காணிகளில் நல்ல பயன்தரும் பழமரங்கள், தென்னை, வாழை, பலா போன்ற பொருளாதாரத்தை மேம்படுத்தும் மரங்கள் அத்துடன் வயல்காணிகளுடன் வாழ்ந்து வந்த மக்களை யுத்தத்திற்குப் பின்பு மீள்குடியேற அனுமதி மறுத்து மீண்டும் சோற்றுக்குக் கையேந்த வைத்துள்ளது இந்த அரசாங்கம்.
அண்மையில் தலைமன்னார் பியர் பகுதியில் நட்சத்திர விடுதி கட்டும் முயற்சியில் அப்பகுதியில் இருந்த இஸ்லாமிய தமிழ்க் குடும்பங்களை மீள்குடியேற அனுமதி மறுத்தது இந்த அரசாங்கம். அப்பொழுது அதற்கெதிராகவும் நாம் குரல் கொடுத்தோம். இன்று அப்பகுதியில் மக்கள் மீள்குடியமர்த்தப்படுவர் என்று ஜனாதிபதியால் உறுதியளிக்கப்பட்டுள்ளது என்பதைப் பணிவுடன் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
ஆனால் இன்னமும் முள்ளிக்குளம் மக்களை மீள்குடியேறறுவதற்கு அமைச்சரோ ஜனாதிபதியோ இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவர்கள் நான்கு வருடங்களுக்கும் மேலாக தங்களது சொந்தக் காணிகளில் குடியேற முடியாமல் அங்கும் இங்கும் அலைந்தபடி இருக்கின்றனர். அவர்களைத் தங்களது சொந்தக்காணிகளில் குடியேற்றுமாறு நாம் தொடர்ந்து அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றோம்.
இவ்வாறு வன்னியில் மீள்குடியேற்றம் நடைபெறாமல் உள்ள அனைத்து இடங்களிலும் ஏற்கனவே வாழ்ந்த மக்களை மீள்குடியமர்த்தும் நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று நாம் அரசாங்கத்திடம் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றோம்.
அண்மையில் நானாட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பள்ளம்கோட்டம் கிராம சேவையளர் பிரிவிற்குக் கீழ் அறுவைகுண்டு என்னுமிடத்தில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த 50பேருக்கு நிரந்தரவீடு வழங்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்படுவதுடன் 100பேருக்கு தற்காலிக வீடும் வழங்கப்பட்டுள்ளது. இதே பிரதேசத்தில்தான் முள்ளிக்குளம் மக்களும் இருப்பதற்கு இடமின்றி அங்குமிங்கும் அலைந்து திரகின்றனர்.
சகோதர சமுதாயத்தினர் அமைச்சரின் இத்தகைய செயல்களின் பின்னணியிலுள்ள அரசியலை விளங்கிக் கொள்ள வேண்டும். உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் பிளவுகளை உருவாக்கி அதன் மூலம் அரசியல் தீர்வைப் பிற்போடும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அதற்கு அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் தங்களது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
அரசினதும் அமைச்சரினதும் இந்த முயற்சிக்கு நீங்கள் ஒருபோதும் துணைபோய்விடாதீர்கள் என்று உங்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சன்னார் கிராம மக்களின் வெளியேற்றத்தை உடன் நிறுத்துங்கள்!- சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை Reviewed by Admin on December 12, 2011 Rating: 5

1 comment:

othukkappaddavan said...

சன்னாரில் இனப்பாகுபாடு
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம்
ஊடக அறிவுறுத்தலை தனிப்பட்ட
முறையில் சத்தி ஆனந்தனுக்கும் அறியத்தரவும்.
அவரோடு விவாதத்தை முடித்து விட்டு
கெளரவ அமைச்சர் றிஷாட்டின் பக்கம் வரலாம்.
சன்னாரில் இருக்கும் அதிகமானவர்கள்
பெரும் தோட்டப் பகுதியில் இருந்து அடித்து விரட்டப்பட்டவர்கள்:-
சத்தி ஆனந்தன்
சன்னாரில் இருக்கும் அனைவரும் மன்னார் மாவட்டமக்கள்:-
மன்னார் மாவட்டபொது அமைப்புக்களின் ஒன்றியம்

இனபாகு பாடு என்னிடம் இல்லை.எந்த இனத்திற்க்கும் உரித்துடய காணியில்
எந்தஒரு அங்குலம் சரி அபகரிக்கப்படமாட்டாது:-
றிஷாட் பதியுதீன்
எந்த பொது அமைப்பும் இன,மத,சாதி
அடிப்படையில் செயல் படுவது பொது அமைப்பை கொச்சைப் படுத்துவதாகும் .றிஷாட்
பதியுதீன் அவர்களும் பிரதேசசபை மந்திரி சனூஸ் அவர்களும் இனவாதமற்ற தமிழ்
ஆசிரியர் களிடமும் கல்வி கற்றதால் தமிழ் மக்களுடன் ஒன்று பட்டே வாழ்கின்றனர்.
இனங்களுக்கிடயில் ஒற்றுமைக்காகவே அயராது பாடு படுகின்றனர்.
தமிழ் பேசும் மக்கள்களுக் கிடையில்
பிரிவினயை ஊக்கு விப்பதை விட்டு விட்டு ஒற்றுமைக்காகஒன்று படுவோம்.
இப்பதிவர் இருக்கும்முகாம் பகுதியில் மொத்தம் 81 வீடூகள்.இவற்றில் ஏறக்குறய 50பேருக்கு
அதிகமானவர் களுக்கு இரு இனத்திலும்,சன்னாரிலும், சொந்தபந்தங்கள் உண்டு.எவரையும்
தாழ்த்தியோ உயர்த்தியோ இல்லை.இந்த நிலயில் நாம் எப்படி இனவாதம் பேசுவது?
மன்னார் பொது அமைப்பு ஒன்றியம் ஊடக அறிவித்தலாக றிஷாட் பதியுதீன் அவர்களை
அவர் இனத்து மக்களுக்கு மட்டும் சேவை செய்ய அறிவித்துள்ளது.அவர் வன்னி மக்களின்
அமைச்சரே அன்றி மத போதகரல்ல உபதேசம் செய்ய..எனவே அவர் சேவை தமிழ் மக்களுக்கு
கிடைப்பதைஎவராலும் தடுத்து நிறுத்தி விட முடியாது.இது தேர்தல் காலமல்ல.ஆகவே
அவர் சேவையை எல்லாமக்களும் பெற ஒத்தாசை வளங்குவது தமிழ் பேசும் மக்களது
கடமையாகும்.
பேசி தீர்கமுடிந்த 42 வீட்டு விடயத்தை விட்டு விட்டு 154 வீடு களுக்கும்
பிரச்சனை இருப்பதாக ஊடகங்களுக்கு தவறான கருத்தை பரப்பாதிருக்க மக்களின் நலன்
விரும்பிகள் கவனத்தில் எடுக்கவும்.
ஒதுக்கப்ப்ட்டவன்

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.