மன்னார் நகர சபை மீது அபாண்டமாக பழி சுமத்தாதீர்கள்: நகர சபை உறுப்பினர்
மன்னார் நகர சபை மீது அபாண்டமாக பழி சுமத்தாதீர்கள் என மன்னார் நகர சபை உறுப்பினர் ரெட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.
மன்னார் நகர சபைக்கு சொந்தமான சந்தை கட்டிட தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தானது பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மன்னார் நகர சபை உறுப்பினர் ரெட்ணசிங்கம் குமரேஸ் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மன்னார் நகர சபைக்கு சொந்தமான சந்தை தொகுதியில் வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட வர்த்தகர்கள் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
மன்னார் நகர சபைக்கு சொந்தமான இந்த சந்தை கட்டிட தொகுதியானது வார சந்தை என்பது இங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும். இந்நிலையில் பல ஆண்டுகளாக நீதிமன்ற உத்தரவினையும் மீறி தொடர்ந்தும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தவர்களுடன் நகர சபை நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது.
இதன் விளைவாக வர்த்தகர்கள் கடைகளை விரைவில் ஒப்படைப்பதாக தெரிவித்தனர். அத்தகைய ஒரு ஆரோக்கியமான சூழலில் கடைத்தொகுதி தீப்பற்றியுள்ளது. இப்பொழுது நகர சபையின் மீது இவ்விபத்து குறித்து சந்தேகம் எழுந்துள்ளது எமக்குக் கவலையளிக்கின்றது.
எந்தவொரு விடயத்தையும் நகர சபை சட்டரீதியில்தான் அனுகுமே தவிர, இப்படிப்பட்ட மிலேச்சத்தனமான செயல்களில் ஈடுபடாது. அவ்வாறு ஈடுபடுவதற்கான அவசியமும் நகர சபைக்கு இல்லை. அத்தகைய சமூகவிரோதிகளை எமது மக்களினால் தெரிவு செய்யப்படவில்லை என்பதை ஊடகங்களின் மூலம் நகர சபையின் மீது சேறுபூச முயற்சித்தவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
நாம் இன்று ஒரு முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றோம் என்பதையும் முன்னெப்பொழுதையும் விடவும் எமது ஒற்றுமை பலப்பட வேண்டிய இத்தருணத்தில், ஒற்றுமையை குலைக்கும் நோக்கில் யாராலோ நன்கு திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்டிருக்கின்றது என்பதையும் நாம் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்..
மன்னார் மண்ணில் புதிதாக முளைத்துள்ள இத்தகைய செயலை நாம் அனைவரும் ஒன்றுபட்டு முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். நகர சபை ஒருபோதும் மக்களின் நலனிலிருந்து விலகிச் செல்லாது. இந்த சம்பவம் தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணைகள் நடைபெற வேண்டும்.
அதற்கான முழு ஒத்துiழைப்பையும் வழங்க நாம் தயாரக இருக்கின்றோம் என்பதையும் சம்பவத்தன்றே தெளிவுபடுத்தியுள்ளோம். குற்றவாளிகளும் சமூக விரோதிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் எத்தகைய மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமில்லை. தீ விபத்து குறித்த முழுமையான அறிக்கையை சபையின் சார்பில் விரைவில் வெளியிடவுள்ளோம்" என்றார்.
மன்னார் நகர சபை மீது அபாண்டமாக பழி சுமத்தாதீர்கள்: நகர சபை உறுப்பினர்
Reviewed by Admin
on
March 07, 2012
Rating:

No comments:
Post a Comment