அண்மைய செய்திகள்

recent
-

'பெண்களின் வாழ்வில் ஒளியேற்றுவோம்' : மகளிர் தின சிறப்புக் கட்டுரை _

 இன்று 101 ஆவது சர்வதேச பெண்கள் தினத்தைக் கொண்டாடுகிறோம்.

1911 ஆம் ஆண்டு, முதன் முதலாக ஜெர்மனியில் மார்ச் 19 அன்று நூற்றுக் கணக்கான உழைக்கும் மகளிர், ஆடவருக்கு இணையான ஊதியம் கோரி வீதியில் இறங்கி நடத்திய போராட்டத்தின் விளைவே மகளிர் தினம் உதயமாகக் காரணமானது. 1977ஆம் ஆண்டு ஐ.நா.பொதுச்சபையில் சர்வதேச பெண்கள் தினத்தை ஐக்கிய நாடுகள் தினமாகக் கொண்டாட முடிவெடுக்கப்பட்டது.



இவ்வருடம் 'கிராமியப் பெண்களை வலுவூட்டல் - பட்டினி, வறுமை ஒழிப்பு' என்பதை தொனிப்பொருளாகக் கொண்டு இந்நாள் கொண்டாடப்படுகிறது.

இன்று சகல துறைகளிலும் ஆணுக்கு நிகராக மகளிர் கோலோச்சுவதைக் காண்கின்றோம். வீட்டினுள் பெண்களைப் பூட்டி வைத்த காலம் இன்று மலையேறி விட்டது. ஏட்டுக் கல்வியுடன் நின்று விடாது அதன் மூலம் சிறந்த நல் தொழில் துறைகளில் தம்மை ஈடுபடுத்தி வெற்றி வாகை சூட மகளிர் முனைப்புக் காட்டுகின்றனர்.

மேலும் பெண்கள் தமது ஆளுமையை வளர்த்து முடிவெடுக்கும் தன்மை கொண்டோராகவும் மிளிர்கின்றனர். தரை, கடல், ஆகாயம் என துறைசார் ரீதியாக அதீத வளர்ச்சி பெற்றோராகவும் உலகின் சில நாடுகளது ஆட்சியாளர்களாகவும் விளங்குகின்றனர்.

இதேவேளை பால்நிலைச் சமத்துவம் பற்றியும் இங்கு நோக்குதல் தகும். அடக்குமுறைகளுக்கு எதிராகச் செயற்பட வேண்டிய நிலையில் பெண்கள் உள்ளனர். இலங்கையைப் பொறுத்த வரை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் சொல்லுந்தரமன்று. அண்மையில் நெடுந்தீவில் இடம்பெற்ற பாடசாலைச் சிறுமி லக்ஷினி மீதான வல்லுறவுப் படுகொலை வக்கிர உணர்வு கொண்ட மனிதர்(?)களும் வாழும் உலகில் மனித உரிமை பற்றிப் பேச வேண்டிய நிலையில் மகளிர் உரிமை பற்றிப் பேச முடியுமா என்ற கேள்வி எழுகின்றது.

பெண்களைக் கொடுமைப்படுத்துவோருக்குக் கடூழிய சிறைத்தண்டனை வழங்கும் சட்டவிதியைக் கொண்டுவரவுள்ளதாக எமது நாட்டின் பெண்கள்,சிறுவர் அபிவிருத்தி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த கூறியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

போரின் பின்னரான வாழ்க்கைச் சூழலில் வட,கிழக்கில் வாழும் பெண்கள் தமது வாழ்வாதாரத்தை நிலைநிறுத்த தினந்தோறும் ஒரு போராட்டமே நடத்துகின்றனர்.

போர் மற்றும் இதர காரணிகளால் இலங்கையில் 5,03684 விதவைகள் வாழ்வதாகக் கணக்கெடுப்பு கூறுகின்றது. தமது ஜீவனோபாயத்துக்காக கோழி, ஆடு வளர்ப்பு, தையல் தொழில், கயிறு திரித்தல், கைப்பணிப் பொருள் தயாரித்தல் போன்ற சுயதொழில்களில் ஈடுபட்டு பொருளாதார மீட்சிக்கும் இவர்கள் பாடுபடுகின்றனர். இத்தகைய விதவைகளுக்கு உதவி செய்திடும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள் போற்றுதற்குரியவர்கள்.

மலையக யுவதிகளில் பலர் பொருளாதார நலன் கருதி தலைநகருக்கும் வெளிநாடுகளுக்கும் படையெடுக்கின்றனர். தலைநகரில் ஆடைத் தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்களில் தொழில் புரிகின்றனர்.

சமீப காலமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப் பெண்களாகச் சென்று உயிரிழந்தவர்களும் பாலியல் ரீதியான கொடுமைகட்கு உள்ளாகியவர்களும் கிராமப் புறங்களிலிருந்து சென்ற பெண்களாகவே உள்ளனர். இவர்களால் இவர்களைச் சார்ந்து வாழ்ந்த குடும்பங்கள் பணத்தையும் உறவையும் இழந்து வேதனையுடன் காலம் கடத்துகின்றன. வறுமையில் வாடும் கிராமியப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்ற சமூகத் தொண்டு நிறுவனங்கள் முன்வரல் வேண்டும்.

மேலும் பெண்களை போகப் பொருளாகக் காட்டி பணமீட்டும் தொழில்துறையாக தென்னிந்திய சினிமா மாறி விட்டது. ஆடைக் குறைப்பு, கவர்ச்சி உடை என சினிமாப் பாடல் காட்சிகள், பாலியல் உணர்வைத் தூண்டி பெண்களுக்கெதிரான வன்முறைகளைப் புரியக் காரணமாகின்றன. இவ்வாறான காட்சிகளைத் தடைசெய்ய சட்ட விதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

கிராமப் புறப்பெண்களுக்கு தொழில் நிறுவனங்களில் தொழில் பாதுகாப்பும் வறுமையில் உழலும் பெண்களுக்கு சுய தொழில் ஊக்குவிப்பு, வங்கிக் கடன் வழங்கிட சம்பந்தப்பட்டோர் ஆவன செய்தால்தான் இத்தினத்தின் நோக்கம் அர்த்தமுள்ளதாகும்.

தமிழகத்தில் ஒரு வங்கி அதிகாரி கிராமமொன்றில் வீடு வீடாகச் சென்று துணையின்றி வாழும் பெண்களுக்கு வங்கிக் கடன் வழங்கி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய வீடியோ காட்சியை அண்மையில் பார்க்க நேர்ந்தது. இவ்வாறான நிலை அபிவிருத்தியடைந்து வரும் இலங்கை போன்ற நாடுகளிலும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இன்றைய தினத்தின் தொனிப்பொருளுக்கு ஒப்ப கிராமியப் பெண்களை வலுவூட்டி வறுமையை ஒழிக்க கை கொடுக்கும் கைகளாக மாற நாம் ஒவ்வொருவரும் திடசங்கற்பம் பூணுவோம்.

கி.லக்ஷ்மன் சிசில்
'பெண்களின் வாழ்வில் ஒளியேற்றுவோம்' : மகளிர் தின சிறப்புக் கட்டுரை _ Reviewed by Admin on March 08, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.