உள்ளார்ந்த யுத்தம் ஒன்று இந்த நாட்டில் இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கிறது தேசிய சர்வமத மாநாட்டில் தமிழ் நேசன் அடிகளார்

அதுதான் உள்ளார்ந்த யுத்தம், மனித மனங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் யுத்தம். இந்த யுத்தத்தை நாம் எப்படி? எப்போது? நிறுத்தப்போகின்றோம்?.
எரிமலை ஒன்றை வெளியி;லிருந்து பார்த்தால் அது அமைதியாக, சாதாரணமாகவே நமக்குத் தெரியும். ஆனால் அது உள்ளே கனன்றுகொண்டிருக்கும்ளூ குமுறிக்கொண்டிருக்கும். இப்படிப்பட்ட ஒரு நிலையில்தான் இன்று இந்த நாடு இருக்கின்றதுளூ இந்த நாட்டின் மதங்கள், இனங்கள் இருக்கின்றனளூ தனி மனிதர்கள் இருக்கின்றனர் என அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் குறிப்பிட்டார். இம்மாதம் 16ஆம் திகதி சனிக்கிழமை (16.06.2012) கொழும்பில் இடம்பெற்ற தேசிய சர்வமத மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இம்மாநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களில் இருந்து 150ற்கும் அதிகமான பௌத்த, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமய மற்றும் சமூகத் தலைவர்கள் கலந்துகொண்டனர். யுத்தத்தின் பின்னரான சூழ்நிலையில் மக்;களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான முக்கிய பிரேரணை ஒன்றும் இம்மாநாட்டின்போது அரசியல் தலைவர்களிடம் கையளிக்கப்பட்டது.
மன்னார் சர்வமதப் பேரவையின் தலைவரும், மன்னார் தமிழ்ச் சங்கத் தலைவரும், 'மன்னா' என்ற கத்தோலிக்க பத்திரிகையின் ஆசிரியரும், மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மையத்தின் இயக்குனருமான தமிழ் நேசன் அடிகளார் இம்மாநாட்டில் உரையாற்றும்போது மேலும் கூறியதாவதுளூ
'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' அதாவது 'எல்லா ஊரும் என்னுடைய ஊரே, எல்லா மக்களும் என்னுடைய உறவினரே' என்றார் சங்கப்புலவர் கணியன் பூங்குன்றனார். 'எல்லோரும் இன்புற்றிருப்பதன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே' என்று இறைவனைப் பணிகின்றார் தாயுமானவர். 'உன்னைப்போல் உன் அயலானையும் நேசி' என்பது இயேசுவின் வார்த்தையானாலும் இதுவே அனைத்து மதங்களிலும் எதிரொலிக்கின்ற மிக உயர்ந்த மானிட தத்துமாக இன்றுவரை விளங்குகின்றது.
உலகத்திலே இருக்கக்கூடிய நான்கு உயர்ந்த மதங்களைக் கொண்டது இந்த நாடு. இப்படிப்பட்ட ஒரு நாட்டில்தான் வன்முறைகளும், அநீதிகளும், பாரபட்சங்களும் இன்றுவரை தொடர்கதையாக உள்ளன. இந்த மதங்களின் போதனைகளும், படிப்பினைகளும் தோற்றுப்போய்விட்டனவா என்ற கேள்வி இன்று எழுகின்றது. நிச்சயமாக இது மதங்களின் தோல்வி அல்லளூ மாறாக மதங்களைப் பின்பற்றுகின்றவர்களின் தோல்விதான். இன்று மதங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைகளால் – குறிப்பாக சிறுபான்மை மதங்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் போன்றவற்றால் - இந்த நாட்டில் மதவாதம் தலைதூக்கி உள்ளதோ என்ற அச்சம், ஐயம், ஆதங்கம் நல்மனம் கொண்ட அனைவர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. இப்படியான ஒரு சூழ்நிலையில் மதத்தலைவர்கள் மற்றும் சமூகத் தலைவர்களாகிய நாம் நமது வாழ்வை, நமது செயற்பாடுகளை மீள்பரிசீலனை செய்யவேண்டியவர்களாக, சுய விமர்சனத்திற்கு உள்ளாக்கவேண்டியவர்களாக உள்ளோம்.
'உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே தெளிவுண்டாகும்.' என்று பாடினான் மகாகவி பாரதி. இதைத்தான் இயேசுபெருமானும் சொன்னார், 'உள்ளத்தின் நிறைவிலிருந்தே வாய் பேசும்' என்று. சமாதானம் என்பது வெளியிலிருந்து வருவதல்ல. அது உள்ளிருந்து வருவதுளூ உள்ளத்திலிருந்து வருவது! உள்ளத்தில் எது இருக்கின்றதோ அதுவே உதட்டிலும் வெளிப்படும். அதுவே செயல்களிலும் எதிரொலிக்கும்.
யுத்தம் முடிவடைந்து மூன்ற வருடங்களாகியும் உண்மையான சமாதானமும், ஒப்புரவும் இன்னும் இந்த நாட்டில் ஏன் ஏற்படவில்லை? யுத்தம் முடிந்த கையோடு நாம் என்ன நினைத்தோம்? இனி எல்லாம் சரியாகிவிடும், சமாதானம் சாத்தியமாகிவிடும் என்று குதூகலித்தோம். ஆனால் நமது கனவுகள் இன்றுவரை நனவாகவில்லை. இது கவலை அளிக்கின்ற, ஏமாற்றம் அளிக்கின்ற ஒரு சூழ்நிலை ஆகும்.
இன்று எரியும் பிரச்சினைகள் பல நம் அனைவரின் கவனத்தை வெகுவாக ஈர்த்துக்கொண்டிருக்கின்றன. யுத்தத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களின் புனர்வாழ்வு, நிவாரணம், மீள்குடியேற்றம் போன்றவை அவசரமாக, அவசியமாக தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகளாகும். கடத்தப்பட்டவர்களின் கதி, விசாரணை இன்றி தொடர்ந்து சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளின் நிலை போன்றவை நமது ஆழ்ந்த அக்கறைக்குரிய விடயங்களாக உள்ளன. போருக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள சுமுகமான சூழ்நிலையில் இடம்பெற்றுவரும் கலாச்சார சீரழிவு, சிறுவர் துஷ்பிரயோகம் போன்றவை மிகவும் வேதனை அளிக்கும் விடயங்களாக விளங்குகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு எட்டாக் கனியாக இருப்பது ஏமாற்றம் அளிக்கும் நிலையாக உள்ளது. இவ்விடயங்கள் மட்டில் இந்த நாட்டில் இருக்கக்கூடிய சமய, சமூகத் தலைவர்களின் கடமை, பொறுப்பு என்ன என்ற கேள்வி எழுகின்றது. வெறுமனே கைகட்டி வாய் பொத்தி நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கப்போகின்றோமா? அல்லது நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு வலுவான சக்தியாக மாறி இந்நிலைமைகளை மாற்றி அமைக்க முயற்சிசெய்யப்போகின்றோமா?
இந்தப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாதவிடத்து இன்னுமொரு யுத்த சூழ்நிலை இந்த நாட்டில் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும். இந்த நாட்டில் இன்னுமொரு யுத்த ஆறு ஓட நாம் அனுமதிக்கப்போகின்றோமா? நிச்சயமாக இன்னுமொரு யுத்தத்தை இந்த நாடு தாங்காது என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்வோம்.
யுத்தம் முடிவடைந்தாலும் யுத்தத்தால் ஏற்பட்ட மனக்காயங்கள் இன்றுவரை எல்லா சமூகங்களிலும் உள்ளன. உயிர் இழப்பு, உடமை இழப்பு, உடல் உறுப்புக்களின் இழப்பு என இழப்பின் பட்டியில் நீண்டுகொண்டே செல்கிறது. இந்த இழப்புக்களால் ஏற்பட்ட மனக்காயங்கள் இன்றுவரை ஆற்றப்படவில்லை. அரசியல்வாதிகளின் ஆவேசப் பேச்சுக்கள், சந்தர்ப்பவாதப் பேச்சுக்கள் போன்றவற்றால் சிலவேளைகளில் இந்த மனக்காயங்கள் பெரிதாகிக்கொண்டு செல்கின்ற சூழ்நிலையே உள்ளது. இந்த நிலையில் மக்கள் மனங்களில், சமூகங்களில் ஏற்பட்டுள்ள இந்த மனக்காயங்களை யார் ஆற்றுவது? இம்மனக்காயங்களுக்கு யார் மருந்திடுவது? இவ்வாறான ஒரு சூழ்நிலையில் அனைத்து சமூகங்களையும் சார்;ந்த மதத்தலைவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். இந்தப் பணி காலத்தின் கட்டாயத்தேவையாகும்.
நாம் நம்மைப் பற்றி மட்டுமே எப்போதும் சிந்தித்துக்கொண்டிருக்கக்கூடாது. 'தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு என்று அடிக்கும்' என்று தமிழ் பழமொழி ஒன்று உண்டு. மற்ற சமூகங்களின் பிரச்சினைகள், அபிலாசைகள், மன ஆதங்கங்கள் என்பவற்றை உள்ளார்ந்த அக்கறையோடு, கரிசனையோடு நாம் அணுகவேண்டும்ளூ புரிந்துகொள்ளவேண்டும். 'எனது மதம், எனது இனம், எனது சமூகம்' என்று மட்டுமே சிந்திக்கின்ற சுயநல சுவர்களுக்குள் இருந்து நாம் வெளியே வரவேண்டும். இப்படிப்பட்ட ஒரு மனநிலை மாற்றம் ஏற்படும்போதே இந்த நாட்டில் உண்மையான அமைதி, ஒப்புரவு சாத்தியமாகும்.
இறுதியாக, இன்று மன்னாரில் ஏற்பட்டுள்ள இன முறுகல் நிலையை நாம் கவலையோடு கண்ணோக்குகின்றோம். மன்னார் மண் மத நல்லிணக்கத்திற்கு பெயர் போன மண். இந்த மண்ணிலே நீண்ட நெடுங்காலமாக தமி;ழ் முஸ்லிம் மக்கள் மிகவும் நெருக்கமாக, அந்நியோன்னியமாக வாழ்ந்தவர்கள். இன்று இந்த இரு இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள உறவு விரிசலை தற்காலிகமான ஒரு பின்னடைவாக மட்டுமே நாம் பார்க்கின்றோம். மன்னார் சர்வமத பேரவையினராகிய நாம் இந்த விடயத்தில் தலையிட்டு சம்மந்தப்பட்ட தரப்பினரோடு பேசி விரைவில் மன்னாரில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த முழு முயற்சி செய்வோம் என்பதை இச்சபையில் தெரிவித்துக்கொள்கிறேன்.
![]() |
மாநாட்டில் கலந்துகொண்ட நூற்றுக்கும் அதிகமான சமய, சமூகத் தலைவர்கள் சபையில் அமார்ந்திருக்கின்றனர். |
![]() |
மேடையில் 12 மாவட்டங்களைப் பிரதிநிதிப்படுத்தும் சமயத் தலைவர்கள் அமர்ந்திருக்கின்றனர். |
![]() |
மாநாட்டின் பிரேரணையை தமிழ் நேசன் அடிகளார் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கரு ஜெயசூரிய அவர்களுக்கு கையளிக்கின்றார். |
உள்ளார்ந்த யுத்தம் ஒன்று இந்த நாட்டில் இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கிறது தேசிய சர்வமத மாநாட்டில் தமிழ் நேசன் அடிகளார்
Reviewed by NEWMANNAR
on
June 18, 2012
Rating:

No comments:
Post a Comment