அண்மைய செய்திகள்

recent
-

வடக்கில் தமிழ் மக்களின் பொருளாதாரத்தை கபளீகரம் செய்யும் அரசின் திட்டங்களை ஐ.நா. தடுத்து நிறுத்த வேண்டும்! சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை

வடக்கின் வன்னி மாவட்டத்தில் வெலிஓயா, கொக்கச்சான்குளம், அரியகுண்டான் போன்ற இடங்களில் புதிய சிங்களக் குடியேற்றங்களை இராணுவ உதவியுடன் நடைமுறைப்படுத்திவரும் அரசாங்கம் தற்பொழுது புதிய முஸ்லிம் குடியேற்றத் திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றது.


இதற்கென வன்னியின் மூன்று மாவட்டங்களிலிருந்தும் இரண்டாயிரத்து முந்நூறு ஏக்கர் வன இலாகாக் காணிகளை அரசு ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன், தமிழ் மக்களை அவர்களது தாயகப் பிரதேசங்களிலேயே சிறுபான்மையாக்கும் நோக்குடனான அரசின் இத்திட்டமிட்ட செயலை சர்வதேச சமூகமும் மனித உரிமை அமைப்புக்களும் தடுத்து நிறுத்துவதற்கு விரைந்து செயற்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 இவ்விடயம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முல்லைத்தீவு மாவட்டத்தில் வன இலாகாவிற்குச் சொந்தமான 1060 ஏக்கர் வனமும் மன்னார் மாவட்டத்தில் வன இலாகா மற்றும் குடிநீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபைக்குச் சொந்தமான 1200 ஏக்கர் நிலப்பரப்பும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மீள்குடியேற்றம், அபிவிருத்தி பாதுகாப்புக்கான ஜனாதிபதி செயலணியின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 இது குறித்து இச் செயலணியின் செயலாளர் திரு. திவாரட்ன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு 22.11.2012 திகதிய கடிதமூலம் உத்தரவு பிறப்பித்துள்ளார். அக் கடிதத்தின்படி, நெடுங்கேணி- முல்லைத்தீவு வீதியில் சுமார் முந்நூறு ஏக்கர், மாங்குளம் - முல்லைத்தீவு வீதியின் ஆறாம் மைல்கல்லில் சுமார் ஐநூற்றி ஐம்பது ஏக்கர், முத்தையன்கட்டில் சுமார் எழுபத்தைந்து ஏக்கர் மறறும் ஓட்டுசுட்டானில் சுமார் நூற்றி ஐம்பது ஏக்கர் நிலப்பரப்பினையும் உடனடியாக வனஇலாகாவிடமிருந்து விடுவித்து முஸ்லிம் மக்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

 இந்த 1060 ஏக்கர் நிப்பரப்பும் வனஇலாகாவிற்குச் சொந்தமான காட்டுப் பிரதேசமாகும். காணி மற்றும் வீடு உள்ளவர்களும், திருமணமாகாதோரும் காணி பெற்றுக்கொள்வதற்குத் தகுதியற்றவர்கள் என்னும் விதிமுறை இவர்களுக்கு மட்டும் தளர்த்தப்பட்டுள்ளமை விசேடமாக நோக்கத்தக்கதாகும். இதிலிருந்து இவ்வுத்தரவானது நூறுவீதம் அரசாங்கத்தின் குறுகிய அரசியல் தேவைகருதியே பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது.

 இதேபோன்று ஜனாதிபதி செயலணியின் செயலாளரால் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில், மன்னார் குடிநீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்குச் சொந்தமானதும் பேராயர் இல்லத்திற்கு எதிரேயுள்ளதுமான நூறு ஏக்கரையும், தலைமன்னாரில் நூறு ஏக்கரையும், மாந்தை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சன்னாரில் வனஇலாகாக் காணி ஐநூறு ஏக்கரையும் மற்றும் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் ஐநூறு ஏக்கரையும் உள்ளடக்கி மொத்தம் 1200 ஏக்கர் நிலத்தினை முஸ்லிம் குடியேற்றத்திற்கு விடுவிக்குமாறும் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முசலி பிரதேச செயலக 500 எக்கர் காணியில் தலா அரை எக்கர் வீதம் 1000 முஸ்லிம் மக்கள் குடியமர்த்தப்படவுள்ளனர். இவ்விரு மாவட்டங்களிலும் ஒதுக்கப்பட்டுள்ள 2260 ஏக்கர் காணிகளில் அரை ஏக்கர் குடியிருப்புக்கெனவும் ஒரு ஏக்கர் விவசாயத்திற்கெனவம் ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும் வழங்குமாறும் அரச அதிபர்களிற்கு அறிவுறுத்தப்பட்டுமுள்ளது. இக்கடிதங்களின் பிரதிகள் அமைச்சர்களான பசில் இராஜபக்ச, றிசாட் பதியுதீன், முல்லைத்தீவ மாவட்ட இராணுவத் தளபதி மற்றும் ஒட்டுசுட்டான், கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர், வடமாகாண ஆளுனர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்கள் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

 ஜனாதிபதியின் நேரடிக் கண்காணிப்பின் கீழ்வரும் ஜனாதிபதி செயலணியின் செயலாளரால் மன்னார், முல்லைத்தீவு அரசாங்க அதிபர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவினால் இங்கு தற்போது காடழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதடன் இம்மாதம் 14ஆம் திகதியன்று குடியேற்றப்படுவோருக்கென விசேட கூட்டமும் ஏற்பாடு சேய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே வடமாகாணத்தில் நிரந்தர வதிவிடங்களைக் கொண்டிருந்த முஸ்லிம் மக்கள் தாமாகவே தமது ஊர்களுக்கு மீளச்சென்று குடியேறி வருகின்ற இக்காலத்தில், அரசு மேற்கொள்ளும் திட்டமிட்ட புதிய முஸ்லிம் குடியேற்றங்களால் இங்கு வாழும் தமிழ், இஸ்லாமிய மக்களுக்கிடையே தேவையற்ற கசப்புணர்வு ஏற்படுத்தப் படுகிறது.

 வன்னியில் போரினால் இடம் பெயர்ந்தவர்களில் இரண்டரை இலட்சம் தமிழருக்கு வீட்டுத்திட்டம் இன்னமும் வழங்கப்படாததோடு, அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் ஏற்ற நடவடிக்கைகள் அரசினால் முன்னெடுக்கப்படவில்லை. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் 180 நாட்களுக்குள் தமது சொந்த இடங்களில் மீள்குடீயேற்றப்படுவர் என அரசு சர்வதேச நாடுகளுக்குத் தெரிவித்தும் தற்போது மூன்றரை வருடங்களின் பின்னரும் அம்மக்கள் சொந்த இடங்களில் குடியேற்றப்படவில்லை. யாழ்ப்பாணம்,வன்னி, திருகோணமலை மாவட்டங்களில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்கள் இன்னமும் நீக்கப்படவில்லை.

நீதிமன்றத் தீர்ப்பைப் புறந்தள்ளி இன்னமும் தமிழ் மக்களின் நிலங்களை இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. மேலும், இடம் பெயர்ந்தோரில் கணிசமானவர்கள் இன்னமும் தமது உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் இலட்சக்கணக்கானோர் பல்வேறு நாடுகளிலும் தஞ்சம் புகுந்துள்ளனர். இலங்கையின் இனமோதலுக்கான மூலக்கல்லே தமிழர்களுக்கான நிலவுரிமைதான். எனவே அரசியல் தீர்வின் அச்சாணியே காணியுரிமைதான். காணி அபகரிப்பு மற்றும் திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் தமிழ் மக்களை கொத்தடிமையாக்குவதே அரசின் திட்டமாகும்.

 பாலஸ்தீனத்தை இறைமையுள்ள தனிநாடாக அங்கீகரிக்கும் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் விடயத்தில் ஜியோனிஸ்ட்டுகளைப் பின்பற்றியே செயற்படுகின்றது என்று தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர், ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமை அமைப்புகள் மற்றும் சர்வதேச சமூகம் இவ்விடயத்தில் தலையிட்டு, எமது மண்ணில் இடம் பெறும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த காலதாமதமின்றி முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கில் தமிழ் மக்களின் பொருளாதாரத்தை கபளீகரம் செய்யும் அரசின் திட்டங்களை ஐ.நா. தடுத்து நிறுத்த வேண்டும்! சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை Reviewed by NEWMANNAR on December 07, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.