வடக்கில் பெண்கள் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட வன்கொடுமைச் சம்பவங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன: சுமந்திரன் எம்.பி.
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை எதிர்க் கட்சித் தலைவரினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட 'பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும் ஆணைக்குழு"வின் நிகழ்வில் கலந்துகொண்டு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பற்றி கருத்துத் தெரிவிக்கையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மற்றும் வன்கொடுமைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவென எதிர்க் கட்சித் தலைவரினால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ள ஆணைக்குழுவுக்கு எனது ஆதரவினை தெரிவித்துக் கொள்கின்றேன். வடக்கு - கிழக்கில் எத்தனை பெண்கள் இராணுவத்தால் வன்கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தநிலை தற்போதும் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள வடபகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இவ்வாறு வடக்கில் இராணுவத்தினரால் பெண்கள் தமது சுகத்திற்காக வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாக கடந்த 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பாராளுமன்றத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பித்திருந்தேன்.
ஆனால் அந்த அறிக்கை தற்போது தூசு படிந்த நிலையில் பாராளுமன்ற வாசிகசாலையின் மூலையில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் வடக்கில் பெண்கள் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட வன்கொடுமைச் சம்பவங்கள் பல மூடி மறைக்கப்பட்டுள்ளன. இந்த மூடிமறைக்கப்பட்ட வட பகுதி பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள், இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ள ஆணைக்குழுவின் மூலம் வெளிக்கொணரப்படுமா? அல்லது குற்றமிழைத்தவர்கள் இராணுவ வீரர்கள் என்பதால் அதனை இந்த ஆணைக்குழு தட்டிக்கழித்து விடுமா? என அவர் மேலும் தெரிவித்தார்.
வடக்கில் பெண்கள் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட வன்கொடுமைச் சம்பவங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன: சுமந்திரன் எம்.பி.
Reviewed by Admin
on
March 08, 2013
Rating:

No comments:
Post a Comment