அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கதவு தமிழ் முஸ்லிம் உறவுக்காக திறந்தே இருக்கிறது!- ஜனா


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கதவு தமிழ் முஸ்லிம் உறவுக்காக திறந்தே இருக்கிறது என தெரிவித்துள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா)  கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அழைப்புகளை நிராகரித்த முஸ்லிம் அரசியல் தலைமைகள் தற்போதாவது உணர்ந்துள்ளதை வரவேற்பதாகவும் தெரிவித்தார். 

தமிழ் பேசும் சமூகங்கள் ஒற்றுமை குறித்து சம்பந்தன் ஐயா எங்களோடு பேச முன்வர வேண்டும் என்று கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பின் உறுகாமத்தில் அமைச்சர் றிசாத் உரையாற்றியமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
கிழக்கு மாகாண தேர்தல் முடிந்தவுடன் முதலமைச்சர் பதவியையும், தேவைப்பட்டால் அமைச்சுகள் அனைத்தையும் தருகிறோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அழைப்பு விடுத்தார்.
இருந்த போதும் அதனைப் பொருட்படுத்தாது முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் ஆட்சி அமைத்துக் கொண்டது. இந்த விடயம் ஞாபகத்தில் இல்லாதது போல் அமைச்சர் றிசாத் பதியுதீன் உறுகாமத்தில் உரையாற்றியிருக்கிறார்.

அவரது பேச்சில் தமிழ் முஸ்லிம் சமூகங்களின் ஒற்றுமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அக்கறையற்றிருப்பது போன்ற தோரணை தெரிகிறது. பழியைச் சுமத்துவது போன்றதொரு பாங்கில் அவரது கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளதுடன், இப்போது அவர்தான் தமிழ் முஸ்லிம் ஒன்றுமை குறித்த கருத்தை வெளியிடுவதாகவே அவருடைய பேச்சு அமைந்திருக்கிறது.
அரசாங்கத்தின் செயற்பாடுகளில் தற்போதுதான் நம்பிக்கையற்ற நிலை முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு வந்திருக்கிறது என்பது கவலைக்குரியதுதான். அதனை தமிழர் தரப்பு எப்போதோ உணர்ந்து விட்டது. அதனால்தான் சிறுபான்மை இனங்களின் ஒன்றுமை தொடர்பில் பல தொடர் முயற்சிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட வண்ணமிருக்கிறது.
ஒரு மனிதனுக்கு முக்கிய தேவைகளாக உணவு, உடை, உறையுள் என்பனவே அமைந்திருக்கின்றன. பொதுப்பலசேனா ஊடாக முதலில் உணவில் கை வைத்த அரசாங்கம் முஸ்லிம்களின் உடையிலும் கையை வைத்திருக்கிறது, அடுத்தது உறையுள் என்ற வகையில் அதுவும் ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகவே தெரிகிறது.

தமிழர்கள் சிறுபான்மை இனங்களின் ஒற்றுமைக்காக எதனையும் விட்டுக் கொடுப்பதற்கும் இழப்பதற்கும் தயாராக இருக்கிறார்கள் என்பதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன. இவற்றினை மறந்து முஸ்லிம் தலைவர்கள் கருத்துகளை வெளியிடுவது தவிர்க்கப்படவேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே விடுத்த அழைப்புகளைப் பொருட்படுத்தாத முஸ்லிம் அரசியல் தலைவர்கள், தற்போதேனும் ஞானம் பிறந்தது போன்று கருத்து வெளியிட்டுள்ளமை பாராட்டத்தக்கதுதான்.

ஆனாலும் அழைப்புகளை விடுப்பதற்கான தேவையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் விடுத்த அழைப்புக்கள் இல்லாமல் செய்து விட்டன.
அந்த வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கதவு தமிழ் முஸ்லிம் உறவுக்காக திறந்தே இருக்கிறது என்பதனை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.


தொடர்பு பட்ட செய்தி

த.தே.கூட்டமைப்புடன் பேசுவதற்கு எந்நேரமும் தயாராக உள்ளோம்: றிசாத் பதியுதீன்



தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கதவு தமிழ் முஸ்லிம் உறவுக்காக திறந்தே இருக்கிறது!- ஜனா Reviewed by NEWMANNAR on April 02, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.