அண்மைய செய்திகள்

recent
-

முஸ்லிம்கள் கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தை கைவிட்டு இன்று பரிதவிக்கின்றனர்


கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசுக்கு பாடம் கற்பிக்கக்கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தை தவற விட்டுவிட்டு இன்று பரிதவிக்கும் நிலை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது என முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.


கல்முனையில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பின் போதே இவ்வாறு அவர் கூறினார். அவர் தொடர்ந்து கூறியதாவது,
தம்புள்ள பள்ளிவாயல், தெஹிவல, குருணாகல் பள்ளிவாயல் தாக்குதல், அதனை நடத்தியவர்கள் எவருமே கைது செய்யப்படவில்லை என்பதன் மூலம் எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு ஏற்படப்போகும் விபரீதத்தை அறியும் அறிவை எமக்கு இறைவன் தந்தான். இதனாலேயே நாம் அரச ஆதரவிலிருந்து விலகினோம்.

அத்தோடு கிழக்கு மாகாண சபை தேர்தல் வந்த போது இந்த அரசுக்கும் பள்ளிவாயல் தாக்குதல்களை கட்டுப்படுத்தாத அரசின் கைக்கூலிகளாக விளங்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் ஏனைய காங்கிரஸ்களுக்கும் பாடம் படிப்பிப்பதாயின் அரசுக்கு எதிரான ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் மட்டுமே நமது எதிர்ப்பை உலகுக்கு காட்ட முடியும் என மிக தெளிவாக கூறினோம்.

தேர்தல் முடிந்ததும் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைக்க வேண்டும் என கூறினோம்.
இவ்வாறு கூறியதற்காக நாம் கடுமையாக மிரட்டப்பட்டோம். அதையும் கூட முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சுப் பதவிகளுக்காக விட்டுக்கொடுத்து சோரம் போய்விட்டது.

இப்பொழுது கிழக்கு மாகாண சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்போவதாக மக்களை மீண்டும் உஷார் மடையர்களாக்க முனைகிறார்கள். பாராளுமன்றத்தில் ஒரு கண்டனத்தை கொண்டு வர வக்கில்லாத இவர்கள் மாகாண சபையில் கண்டனம் கொண்டு வருவது என்பது முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றும் நடவடிக்கையாகும்.

ஒரு சிறிய கட்சியாக இருந்து கொண்டே பொது பலசேனாவை கண்டித்து கூட்டம் நடாத்தி கண்டன தீர்மானத்தையும் பகிரங்கமாக நிறைவேற்றிக்காட்டிய முதாவது முஸ்லிம் கட்சியினர் நாமே. இப்படி ஒரு கண்டனக்கூட்டத்தை தமது கட்சித் தலைமையின் தலைமையில் நடாத்த துணிவற்ற இவர்கள் மாகாண சபையில் தீர்மாணம் நிறைவேற்றுவது என்பது பச்சையான ஏமாற்று நடவடிக்கையாகும். முடிந்தால் இவர்கள் பாராளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வாருங்கள் என நாம் இவர்களுக்கு சவால் விடுகிறோம்.

இன்று சிலர் சுயநல ஏமாற்றுக்கட்சிகளுடன் இணைந்து மக்களை ஏமாற்றிவிட்டு அமைச்சர்களை ராஜினாமா செய்யக்கோரும் கோமாளித்தனத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். அதே போல் முஸ்லிம்களும் சந்தர்ப்பத்தை தவற விட்டுவிட்டு வானத்திலிருந்து விமோசனம் வருமா என தவித்துக்கொண்டிருக்கிறது.

ஆகக்குறைந்தது இப்படிப்பட்ட ஏமாற்றுக்கட்சிகளின் உயர் பீட அங்கத்தவர் அல்லது சாதாரண அங்கத்தவர் என்ற பதவிகளையாவது பகிரங்கமாக ராஜினாமா செய்ய முடியாத நிலையில் பொது மக்கள் இருக்கும் போது எவ்வாறு அமைச்சர்கள் தமது உல்லாச அமைச்சுப்பதவிகளை ராஜினாமா செய்வதை எதிர் பார்க்க முடியும்?

இன்று அனைத்து சமூகத்தின் மத்தியிலும் ஆளுங்கட்சியும் உண்டு, எதிர் கட்சியும் உண்டு. இதனால் இருபக்க நன்மைகளை அவர்கள் அடைகிறார்கள். முஸ்லிம் சமூகத்தில் தான் முஸ்லிம்களின்´ வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட எதிர் கட்சி ஒன்று இல்லை. இதனால் இருபக்க நன்மை என்ன ஒரு பக்க நன்மையுமின்றி அடிமை வாழ்க்கை வாழ வேண்டியுள்ளது. ஆகவேதான் எம்மோடு இணைந்து சுயநல ஏமாற்றுக்கட்சிகளை எதிர்க்க முன்வரும்படி மக்களை அழைக்கிறோம் என முபாறக் மௌலவி தெரிவித்தார்.
முஸ்லிம்கள் கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தை கைவிட்டு இன்று பரிதவிக்கின்றனர் Reviewed by NEWMANNAR on April 02, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.