முதன்மை வேட்பாளர் விக்னேஸ்வரன்! தமிழர்களின் இன்றைய காலத்திற்கேற்ற தெரிவு: மன்னார் ஆயர்
இதுகுறித்து மன்னார் ஆயர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
விக்னேஸ்வரனைத் முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்தமையானது, தமிழினத் தலைவர்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்களின் சிந்தனை வல்லமையை காண்பித்துள்ளதுடன், காலத்தை நுணுக்கமாக நோக்கி முடிவெடுக்கும் திறனையும் அவர்கள் கொண்டிருப்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.
இன்றைய நிலையில் தமிழர்களுக்கு எவர் தேவையோ அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவ்வாறான ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மக்களிடையேயும் இருந்தது. அதற்கேற்ப அவரது தெரிவும் அமைந்துள்ளது.
நீதியான, நேர்மையான, இறைபக்தி மிகுந்த, இலஞ்சம் ஊழல் போன்றவற்றை தனது வாழ்க்கையில் முழுமையாகத் தோற்கடித்த இவரது தெரிவு கடவுளின் தெரிவென்றுதான் சொல்ல வேண்டும்.
இன்றைய நிலையில் இவரது தெரிவை எல்லாம் வல்ல ஆண்டவனும் விரும்பியுள்ளார். உள்நாட்டிலும் அனைத்துலகமெங்கிலும் வாழும் தமிழ் மக்களின் பிரதிநிதியாக நீதியரசர் செயற்பட அனைவரும் உதவ வேண்டும்.
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான தனது தூரநோக்கை அவர் உடனடியாகவே வெளிப்படுத்தியுள்ளார்.
யுத்தத்தாலும் இடம்பெயர்வுகளாலும் பெரும் இழப்புகளை சந்தித்து நிற்கும் தமிழ் மக்களை இவற்றின் தாக்கத்திலிருந்து தூக்கிவிடும் பெரும் பொறுப்பை நீதியரசர் ஏற்றுள்ளார்.
தமிழ் மக்கள் தற்போது மிகப்பெரும் சவால்களையும் நெருக்குதல்களையும் வடக்கு கிழக்கில் எதிர்கொண்டுள்ளனர்.
தாங்கள் வாழும் மண்ணில் இந்த சவால்களிலிருந்து அவர்கள் மீள வேண்டும்.
இந்தத் தேர்தலை அதற்கொரு வாய்ப்பாக அனைவரும் பயன்படுத்த வேண்டுமென்பதுடன் தமிழ் மக்கள் தமது உணர்வுகளுக்கு அப்பால் சலுகைகளுக்கு என்றுமே விலைபோகாதவர்கள் என்பதை இந்தத் தேர்தலில் நிரூபிக்க வேண்டும்.
பொருத்தமான தருணத்தில் நீதியரசரின் தேர்வு தமிழ் மக்களுக்கு வழிகாட்டியாக அமையும் என்று கருதுகிறேன்.
அனைத்து மக்களும் அனைத்து மதத்தினரும் சமூக அமைப்புகளும் கல்விமான்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து இவரது வெற்றிக்கு பாடுபட வேண்டும்.
நாம் அடிமைகளோ அல்லது இரண்டாம்தர குடிமக்களோ அல்லது ஒதுக்கபட்டவர்களாக வாழவேண்டியவர்களோ அல்லர் என்பதை நீதியரசரின் தேர்வின் மூலம் முழு உலகிற்கும் உணர்த்துவது வடபகுதி மக்களின் கடமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முதன்மை வேட்பாளர் விக்னேஸ்வரன்! தமிழர்களின் இன்றைய காலத்திற்கேற்ற தெரிவு: மன்னார் ஆயர்
Reviewed by Admin
on
July 19, 2013
Rating:

No comments:
Post a Comment