வெளிநாட்டு வேலைவாய்ப்பின் காரணமாகவே அதிகளவிலான சிறுவர் துஷ்பிரயோகங்கள்
‘‘றூவிஷன்’’அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பிரதேச சிறுவர் மற்றும் பரிந்துரைத்தல் குழுவின் குழுக் கூட்டம் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பரிந்துரைத்தல் குழுவின் தலைவரும் பிரதேச செயலாளருமான ஐ.எம்.ஹனிபா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரைநிகழ்த்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;-
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் பெண்களுக்கு ஆரம்ப முற்கொடுப்பனவாக ஒரு இலட்சம் ரூபா முகவர்களினால் வழங்கப்படுவது கஷ்டநிலையிலுள்ள குடும்பங்களை ஊக்குவிப்பதாக அமைகின்றது.இவ்வாறு வழங்கப்படும் பணத்திற்காகவே அதிகளவிலான பெண்கள் தமது பிள்ளைகளையும் குடும்பங்களையும் இழந்து செல்வதற்கு காரணமாக அமைந்துள்ளது.
இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக அதிகம் பாதிக்கப்படுகின்றவர்கள் சிறுவர்களே ஆவார். பெற்றோர்களின் பாதுகாப்பிலில்லாத அதிகமான சிறுவர்கள் தமது உறவினர்களினாலும் அயலவர்களினாலும் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகிவருவதை நாம் நாளாந்தம் ஊடகங்கள் வாயிலாக அறியக் கூடியதாக இருக்கின்றது.
தற்போது ஐந்து வயதிற்குட்பட்ட பிள்ளைகள் இருக்கும் எந்தவொரு தாயும் வெளிநாடு செல்ல முடியாது என அரசாங்கம் கண்டிப்பான உத்தரவை வழங்கியுள்ளது. அதற்காக பிரதேச செயலாளர்கள், சிறுவர் நன்நடத்தை அதிகாரிகள், கிராமசேவை அதிகாரிகள் ஆகியோர் பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்லும் போது சிறுவர்கள் தொடர்பில் உறுதிப்படுத்தல் வேண்டும். இதற்காக தியாக மனப்பாங்குடன் அனைத்து தரப்பினரும் உதவ முன் வருதல் வேண்டும்.
பெற்றோர்களினால் பாதுகாப்பளிக்கப்படாத சிறுவர்களை நேர்வழிப்படுத்துவதும் அவர்களுக்கு உதவுவதும் சமூகத்தின் கடமையாகும். இதேவேளை, சமுகத்தை வழிநடத்துபவர்கள் பாதுகாவலர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் சிலர் சிறுவர்கள் தொடர்பில் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்வதும் துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். இவ்வாறானவர்களை சமூகம் ஒரு போதும் அங்கீகரிக்காது என்றார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பின் காரணமாகவே அதிகளவிலான சிறுவர் துஷ்பிரயோகங்கள்
Reviewed by Admin
on
August 23, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment