அறிவும் ஆளுமையும், ஆற்றலும் உள்ளதாக அமைய தாய்ப்பாலை மட்டும் ஊட்ட வேண்டும்: சுகாதார வைத்திய அதிகாரி
“தாய்மையும் அலுவலகக் கடமையும் தாய்ப்பாலூட்டலும்” எனும் தலைப்பில் ஏறாவூர்ப் பற்று பிரதேச சபைக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற உலக தாய்ப்பாலூட்டல் வாரத்தினை ஒட்டிய விழிப்புணர்வு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சர்வதேச உலக தரிசன (World Vision) நிறுவனத்தின் அனுசரணையுடன் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் பிரதேச சபையும் இணைந்து நடத்தும் தாய்ப்பாலூட்டலும் ஆரோக்கியமும் எனும் விழிப்புணர்வில் அலுவலகங்களில் பணியாற்றும் பாலூட்டும் தாய்மார் சுமார் 60 பேர் பங்கு பற்றியிருந்தனர்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.சதுர்முகம், உலக தரிசன நிறுவன நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் ரீ.ரொஷாந்தன், பொதுச் சுகாதார தாதிய சகோதரி தேவகி ஜெயகரன், செங்கலடி பிரதேச சபை செயலாளர் குமுதா ஜோன்பிள்ளை, குடும்பநல தாதி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
சுகாதார வைத்திய அதிகாரி ஆர்.ரவிச்சந்திரன் விழிப்புணர்வூட்டல் நிகழ்வில் தொடர்ந்து விளக்கவுரை நிகழ்த்தியதாவது!
உடல் உள ஆரோக்கியத்தை வழங்கக் கூடிய சிறந்த அரு மருந்தாகவும், உணவாகவும் தாய்ப்பாலே கருதப்படுகின்றது. இதனை தாய்மார் மகப்பேறு இடம்பெற்ற அரை மணித்தியால காலப்பகுதிக்குள் தொடங்கி ஆறு மாதம் வரையிலும் தாய்ப்பாலூட்டலைக் கைக்கொள்ள வேண்டும்.
தாய்ப்பாலூட்டலின் மூலம் தாயும் சேயும் ஆரோக்கியமாக வாழக்கிடைப்பது ஒரு புறமும் மறு புறம் அறிவும், ஆற்றலும், ஆரோக்கியமும், ஆளுமையும் கொண்ட எதிர்கால சந்ததி உருவாகுவது இந்த தாய்ப்பாலூட்டலின் மூலம் மனித குலத்திற்குக் கிடைத்த ஒரு பெருங்கொடையாகும்.
அலுவலகம் சென்று உத்தியோகம் பார்க்கும் பெண்கள் முடிந்தளவு தங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட அரசு வழி செய்து கொடுத்திருக்கின்றது. ஓய்வும் சம்பளத்துடனான கடமை விடுவிப்பும் அவர்களுக்குண்டு. இந்த உரிமையையும் சலுகையையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
குழந்தைக்குக் கொடுத்தது போக தாய்மார் தம்மிடமிருந்து சுரக்கும் தாய்ப்பாலை 24 மணி நேரம் தமது வீட்டில் வெறுமனே பாதுகாத்து வைக்க முடியும். ஒரு வாரம் குளிரூட்டியில் வைத்துப் பாதுகாத்து தமது குழந்தைகளுக்கு ஊட்டவும் முடியும்.
தாய்ப்பாலுக்குப் பதிலாக பெருந்தொகைப் பணத்தைக் கொடுத்து வெளிநாட்டுப் பால்மாவை வாங்கி குழந்தைக்கு உணவும் போஷணையும் என்று நினைத்துக் கொண்டு நாம் நோயைத்தான் குழந்தைகளுக்கு ஊட்டுகின்றோம். இதனைத் தாய்மார் சிந்திக்க வேண்டும்” என்றார்.
விழிப்புணர்வூட்டலின் பின்னர் தாய்ப்பாலூட்டலின் மகிமையைப் பற்றிய வீதி ஊர்வலமும் இடம்பெற்றது.
அறிவும் ஆளுமையும், ஆற்றலும் உள்ளதாக அமைய தாய்ப்பாலை மட்டும் ஊட்ட வேண்டும்: சுகாதார வைத்திய அதிகாரி
Reviewed by Admin
on
August 13, 2013
Rating:
No comments:
Post a Comment