நோர்வேயில் வெளிநாட்டு சிறுவர்களுக்கு 18 வருடகால தண்டனை! ஐநா மௌனம் காப்பது ஏன்?
உலக நாடுகளும் ஐ.நா.வும் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையும் ஏன் நோர்வேயின் அப்பட்டமான மனித உரிமைமீறல் விடயத்தில் தாமதப் போக்கினைக் கடைப்பிடித்து வருகின்றன என்றும் கேட்டுள்ளனர்.
எந்த அடிப்படையிலான சட்டம்
நோர்வே சிறுவர் காப்பக விவகாரம் தொடர்பில் உலக நாடுகளின் மத்தியில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் கொலைக்குற்றவாளிக்கும் சில சந்தர்ப்பங்களில் மன்னிப்பு வழங்கப்படுகின்ற இன்றைய உலகில் பருவம் அறியாத சிறுவர்களை பெற்றோரிடமிருந்து பிரித்து 18 வருடங்களுக்கு பெற்றோர் பிள்ளைகளது உறவுகளையும் கலாசார ஒழுக்க முறைகளையும் அழித்து தனித்திருக்கச் செய்து தண்டனை அனுபவிக்கச் செய்வது நோர்வேயின் எந்த அடிப்படையிலான சட்டடத்தின் கீழ் செயற்படுத்தப்படுகின்றது என்பது தெரியாதுள்ளது.
நோர்வே வாழ் வெளிநாட்டு வதிவாளர்களின் குழந்தைகளை மாத்திரமே குறிவைத்திருப்பதன் மூலம் நோர்வேயில் ஓர் திட்டமிடப்பட்ட இனச்சுத்திகரிப்பு இடம்பெறுகின்றதாகவும் தஞ்சம் புகுந்த தம்மை இவ்வாறுதான் பழிவாங்க வேண்டுமா என்றும் தமது குழந்தைகளை நோர்வே சிறுவர் காப்பகங்களிடம் பறிகொடுத்து தவித்து நிற்கும் வெளிநாட்டுப் பெற்றோர் தமது ஆதங்கங்களை வெளியிடுகின்றனர்.
தண்டனை வழங்கப்பட்டவர்களாக
இவ்வாறு இலங்கையிலிருந்து நோர்வேயில் தஞ்சம் புகுந்துள்ள
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாமோதரம்பிள்ளை ஆனந்தாசா - ரஜிந்தா ஆனந்தராசா ஆகியோரின் நான்கு பிள்ளைகள்,
எரிக் ஜோசப் - டிலாந்துதினி ஜோசப் ஆகியோரின் மூன்று பிள்ளைகள்,
மகாத்மா ஜோதி செல்லத்துரை - சித்திராதேவி செல்லத்துரை ஆகியோரின் மூன்று குழந்தைகள்,
வசந்தகுமாரன் - சியாமலா வசந்தகுமாரன் ஆகியோரின் இரு குழந்தைகள்
என நான்கு குடும்பங்களின் 12 குழந்தைகள் இதுவரையில் இரண்டு வருடங்களுக்கும் மேலாக தண்டனை வழங்கப்பட்டவர்களாக பெற்றோரிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா, போலந்து ரஷ்யா நேரடி தலையீடு
இந்நிலைமைகளைக் கருத்திற்கொண்டே இந்தியா , போலந்து மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் நோர்வே சிறுவர் விவகாரத்தில் நேரடி தலையீடுகளை மேற்கொண்டு சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்ததுடன் தமது நாட்டுப் பிரஜைகளின் பிள்ளைகள் அவர்களிடத்தில் சென்றடைவதற்கும் நடவடிக்கை எடுத்திருந்தது. இதேபோன்று ரஷ்ய நாட்டு ஜனாதிபதி இவ்விடயத்தில் நேரடியாக தலையீடு செய்து மூன்று குழந்தைகளைப் பெற்றோரிடம் மீட்டுக் கொடுத்தமையும் மேலும் போலந்து நாட்டு பாதுகாப்புத் துறை நோர்வேக்குள் நுழைந்து காப்பகத்தின் பாராமரிப்பில் இருந்து அந்நாட்டுக் குழந்தையை மீட்டுச் சென்றமை நோர்வேயின் ஊடகங்களில் செய்திகளாக வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மூடிமறைப்பு
இவ்வாறான நிலையில்தான் நோர்வே அரசாங்கம் வெளிநாட்டு பிள்ளைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்து அவர்களை பெற்றோரிடத்தில் திருப்பிக் கொடுப்பதற்கு ஏற்ற வழிவகைகளை மூடிமறைத்தும் செயற்பட்டு வருகின்றது. இது குறித்து ஐ.நா. முதல் அனைத்து உலக நாடுகளும் அறிந்தே வைத்துள்ளன.
மன்னிக்க முடியாத தண்டனை
தமது நாட்டு சட்டத்தில் தலையீடு செய்ய முடியாது என நோர்வெ கூறுமானால் சிறுவர்களுக்கும் குழந்தைகளுக்கும் அந்நாட்டில் மன்னிக்க முடியாத தண்டனை வழங்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நோர்வேயின் இத்தகைய தான்தோன்றித்தனமான போக்கினை சர்வதேச நாடுகள் கண்டித்து தமது பிள்ளைகளை தம்மிடத்தில் பெற்றுக்கொடுப்பதற்கு வழி செய்ய வேண்டும் என்றும் கேட்கின்றனர்.
இலங்கை அரசாங்கத்திடமும் ஜனாதிபதியிடமும் கோரிக்கை
இந்தியா, ரஷ்யா, போலந்து உள்ளிட்ட நாடுகள் தமது பிரஜைகளுக்காக நோர்வே சிறுவர் காப்பக விடயத்தில் தலையிட்டது போன்று இலங்கைப் பிரஜைகளான தமது நிலைமையையும் அறிந்து ஆராய்ந்து உதவ முன்வருமாறு நோர்வேயில் வதியும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெற்றோர் இலங்கை அரசாங்கத்திடமும் ஜனாதிபதியிடமும் மனித உரிமை ஆணைக்குழுவிடமும் கோரிக்கை முன்வைக்கின்றனர்.
மனித உரிமைகள் குறித்து பேசும் நோர்வேயில் 16, 000 சிறுவர்கள் குற்றம் அறியாதவர்களாக இருந்து பயங்கரமான தண்டனையை அனுபவித்து வருவதை உலக நாடுகள் ஏன் கண்டு கொள்ளாதிருக்கின்றன.
ஐக்கிய நாடுகள் மையம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் பேரவை இவ்விடயத்தில் தாமதப்போக்கினை கடைப்பிடித்து வருவதற்கான காரணம் என்ன?
இவ்விடயத்தில் இலங்கை அரசு கரிசனை காட்டுமா? தமக்கும் தமது பிள்ளைகளுக்கும் வழங்கப்பட்டு அனுபவித்து வருகின்ற கொடூர தண்டனையிலிருந்து விடுதலை பெற்றுக் கொடுக்கப்படுமா?
நோர்வேயில் மனிதாபிமான, மனித உரிமைகள், சிறுவர் உரிமைகள் பாதுகாக்கப்படுமா என்றும் பரவலாக கேள்வி எழுப்பப்படுகின்றது.
நோர்வேயில் வெளிநாட்டு சிறுவர்களுக்கு 18 வருடகால தண்டனை! ஐநா மௌனம் காப்பது ஏன்?
Reviewed by Admin
on
August 02, 2013
Rating:

No comments:
Post a Comment