எமது உறவுகளின் அவல வாழ்வை என்னால் வார்த்தைகளில் கூறமுடியாது - அனந்தி சசிதரன்
நான் உட்பட தமிழ் பெண்கள் தங்கள் கணவன்மாரையும் தமிழ் தாய்கள் தங்கள் பிள்ளைகளையும் இந்த நாட்டின் இராணுவத்திடமே ஒப்படைத்தோம்.
எனவே எங்கள் கணவன்மாரையும் எங்கள் பிள்கைளையும் மீள ஒப்படைக்க வேண்டியது இந்த நாட்டு இராணுவத்தினதும் அரசாங்கத்தினதும் பொறுப்பாகும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை வேட்பாளர் திருமதி அனந்தி சசிதரன் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பில் மேலும் அவர் உரையாற்றுகையில்,
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் நானும் என்போன்ற பல தமிழ் பெண்கள் தங்கள் கணவன் பிள்ளை சகோதரன் சகோதரி என அனைவரையும் இராணுவத்திடம் ஒப்படைத்தோம்.
அவர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்ற தகவல்கள் எமக்கு வேண்டும்.
தங்களுடைய உறவுகள் காணாமல்போன நிலையில் கடந்த 4வருடங்கள் காணாமல் போனவர்களின் உறவுகள் வாழ்ந்து கொண்டிருக்கும் அவல வாழ்வை என்னால் வார்த்தைகளில் கூறமுடியாது.
நாங்கள் யுத்தத்தின் சாட்சிகள். யுத்தம் நிறைவடைந்து 4வருடங்களில் இலங்கை அரசாங்கத் திடமிருந்து எமக்கு எந்த நியாயமும் கிடைக்கவில்லை.
எனவே எப்படி தமிழர்களுடைய இனப்பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டதோ அப்படியே காணாமல்போன உறவுகளின் பிரச்சினைகளும் சர்வதேச மயப்படுத்தப்படவேண்டும். அதனைச் செய்வதற்காகவே நான் தேர்தலில் போட்டியிடுகின்றேன்.
எங்கள் இழப்புக்களுக்கும் நாங்கள் பட்ட அவலங்களுக்கும் நிச்சயமாக நியாயம் கிடைக்கவேண்டும். அந்த நியாயத்தை அடையும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை. நாங்கள் தோற்றுப்போன ஒரு இனம் அல்ல.
ஐ.நா.மனிதவுரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை வருகை தரவுள்ள நிலையில் அவரைச் சந்திப்பதற்கும் நேரம் பெற்றுத்தர கேட்டிருக்கின்றோம். அது கிடக்கும் பட்சத்தில் நிச்சயமாக
எங்கள் உணர்வுகளை நாங்கள் சொல்லுவோம்.
எமக்கு இலங்கை அரசாங்கம் கடந்த 4வருடங்களில் எந்த தீர்வினையும் தரவில்லை. மாறாக மரணச் சான்றிதழ் தருவதாக கூறுகின்றது என்பதையும் நாங்கள் சொல்லுவோம்.
எமக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதேபோன்று யுத்தத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த பெண்கள் சிறார்கள் தொடர்பில் இதுவரை யாரும் கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.
அவர்களுடைய நலனடிப்படையிலான திட்டங்களை நடைமுறைப்படுத்துவோம். அச்சுறுத்தல்களும் எதிர்ப்புக்களும் தாராளமாகவே வருகின்றன. ஆனால் அவற்றுக்காக நாம் பின்தங்கிவிடப் போவதில்லை.
தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பெண்கள், சிறார்களுக்காக நாங்கள் தொடர்ந்தும் பாடுபடுவோம் என்றார்.
எமது உறவுகளின் அவல வாழ்வை என்னால் வார்த்தைகளில் கூறமுடியாது - அனந்தி சசிதரன்
 
        Reviewed by Admin
        on 
        
August 17, 2013
 
        Rating: 
      
 
        Reviewed by Admin
        on 
        
August 17, 2013
 
        Rating: 


No comments:
Post a Comment