இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை கண்டறிய நடவடிக்கை
இறுதிப் போரின்போது காணாமல் போனவர்களும் சரணடைந்தவர்களில் பலரும் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக உறவினர்கள் தமக்கு முறையிட்டிருப்பதாக காணாமல்போனவர்களை தேடியறியும் குழுவினர் சுட்டிக்காட்டினர்.
பல ஆண்டுகளாக காணாமல்போயிருந்த பலர் முகாம்களிலிருந்து விடுதலையாகி வந்துள்ளதாகவும் காணாமல்போன பலர் இவ்வாறு இரகசிய முகாம்களில் இருப்பதாக உறவினர்கள் முன்வைக்கும் முறைப்பாட்டை ஐநாவின் மனித உரிமைகள் ஆணையரிடம் சுட்டிக்காட்ட இருப்பதாகவும் காணாமல்போனவர்களை தேடியறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் கூறினார்.
அரசாங்கத்திடம் அனுமதி பெற்று முகாம்களுக்கு நேரடியாகச் சென்று பார்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நவநீதம்பிள்ளையிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நவநீதம்பிள்ளையுடனான சந்திப்பு பற்றி தெரிவித்த இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் பிரதிபா மஹநாமஹேவா, தாம் ஏற்கனவே நவநீதம்பிள்ளையின் பிரதிநிதிகளுக்கு அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாகக் கூறினார்.
வடக்கு கிழக்குப் பிரதேசங்களிலிருந்து ஆட்கடத்தல்கள், காணாமல்போதல்கள் தொடர்பில் தமக்கு கிடைத்த முறைப்பாடுகள் பற்றி 6 மாதங்களுக்கு முன்னரே தமது விசாரணைக் குழு விசாரணைகளை நடத்தி விட்டதாகவும் அதன் முன்னேற்றம் குறித்து நவநீதம்பிள்ளையிடம் எடுத்துக் கூறவுள்ளதாகவும் பிரதிபா மஹநாமஹேவா கூறினார்.
இதேவேளை, கடத்தப்பட்டு காணாமல் போனோர் மற்றும் போரின் பின்னர் இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் காணாமல் போனோர் சார்பில் பரந்தனில் நாளை மறுதினம் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி செல்லும் வேளையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டமானது நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு பரந்தன் சந்திக்கு அண்மையில் இடம்பெறவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தினை கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட அன்னையர் முன்னணி மற்றும் காணாமல் போனோர் சங்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் உறவுகளை இழந்தவர்கள், காணாமல் போனவர்கள் உரிய ஆவணங்களுடனும் புகைப்படங்களுடனும் கலந்து கொண்டு உண்மை நிலையினை உலகிற்கு எடுத்துச் சொல்லுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை கண்டறிய நடவடிக்கை
Reviewed by Admin
on
August 26, 2013
Rating:

No comments:
Post a Comment