தனிநாயகம் அடிகளாரின் தமிழ்த்தாகம் எமது முயற்சிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழவேண்டும்
தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் தமிழ்த்தாகம், தமிழ்வேகம் எமது முயற்சிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழவேண்டும். தமிழ் மொழி, தமிழ்ப்பண்பாடு, தமிழ்க் கலைகள், தமிழ் இலக்கியம் சார்ந்த அவருடைய கனவுகள் மெய்ப்பட உழைக்க வேண்டும். இதுவே இப்பெருமகனாருக்கு நாம் செய்யும் நிறைவான நன்றியாக, அஞ்சலியாக இருக்க முடியும் என மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் குறிப்பிட்டார். மன்னார் தமிழ்ச்சங்கத்தினால் மன்னாரில் மூன்று நாட்கள் (ஓகஸ்ட் 2 – 4ஆம் திகதிகள் வரை) இடம்பெற்ற தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழாவின் தொடக்க விழாவில் தலைமை உரை ஆற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, கடந்த 2010ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் மன்னார் தமிழ்ச் சங்கம் முன்னெடுத்த 'மன்னார் தமிழ்ச் செம்மொழி விழா' மன்னாருடைய கலை இலக்கிய வரலாற்றில் தடம் பதித்த ஓர் அற்புத நிகழ்வு. தேசிய ரீதியிலும், சர்வதேசிய ரீதியிலும் பேசப்பட்ட ஓர் இனிய நிகழ்வு. அதைப்போன்றதொரு பெருவிழாவைத்தான் இம்முறையும் நாம் முன்னெடுக்கின்றோம். இவ்விழாவுக்கு மன்னார் மக்கள் அனைவரது ஒத்துழைப்பும் எமக்குக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.
மன்னார் தமிழ்ச் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இந்த மூன்று நாள் விழா எட்டு அரங்குகளைக் கொண்டுள்ளது. தொடக்க விழா நிறைவு விழா ஆகியவற்றோடு இரண்டு ஆய்வரங்குகள், இரண்டு இலக்கிய அரங்குகள், இரண்டு கலை அரங்குகள் என இவ்விழா அமைக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கான போட்டிகள், அடிகளாரின் சிலை திறப்பு, வீதிக்கு அடிகளாரின் பெயரிடல், 'தமிழாழி' என்ற நூற்றாண்டு விழா மலர் வெளியீடு என இந்த விழா பரந்துபட்ட விடயங்களை உள்ளடக்கியுள்ளது.
அத்துடன் இந்த விழாவின்போது தமிழ் மொழிக்கும், தமிழ் பேசும் மக்களுக்கும் பணியாற்றிய சில சான்றோர்கள் கௌரவிக்கப்படுகின்றனர். 60ற்கும் மேற்பட்ட விருந்தினர்கள் இந்த விழாவில் பங்கேற்கின்றனர். 20ற்கும் மேற்பட்ட வெளிமாவட்ட தமிழ் அறிஞர்கள் இதில் பங்கேற்கின்றனர். 100ற்கும் மேற்பட்ட கலை நிகழ்வுகள், 500ற்கும் அதிகமான கலைஞர்கள் இவ்விழாவில் பங்கேற்கின்றனர்.
எமது விழாவில் ஆய்வரங்குகள் முக்கியமானவை, தனித்துவமானவை. தனிநாயகம் அடிகளாரைப் பற்றி மட்டுமே இங்கு ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெறுகின்றன. நூற்றாண்டு விழாவையொட்டி நாம் ஏற்பாடு செய்திருக்கும் ஆய்வரங்கு அடிகளாரைப் பற்றிய, அவருடைய பணிகளைப் பற்றிய சில தெளிவுகளை, உண்மைகளை வெளிக்கொணரும் என நம்புகின்றோம்.
உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தந்தையும் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு வித்திட்டவருமான தனிநாயகம் அடிகளார் 'தமிழ்ப் பண்பாடு' என்ற ஆங்கில முத்திங்கள் ஏட்டை நிறுவி தமிழின் பெருமைய வெளிநாட்டு அறிஞர்களும் உணரும் வகை செய்தார். தன்னுடைய வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் தமிழின் தொன்மையை, மேன்மையை, சிறப்பை வெளிநாட்டவரும் அறிந்துணரச் செய்தார். இதனால் 'தமிழ்த்தூது' என்ற பெயரால் அழைக்கப்படுகின்றார்.
தனிநாயகம் அடிகளாருடைய பணிகளை, முயற்சிகளை இன்றைய இளம் தலைமுறையினருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி அவர்கள் மொழிப்பற்றும், இனப்பற்றும் உள்ளவர்களாக வளர ஊக்குவிக்கவேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயத்தேவையாகும்.
தனிநாயகம் அடிகளாரின் தமிழ்த்தாகம் எமது முயற்சிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழவேண்டும்
Reviewed by NEWMANNAR
on
August 13, 2013
Rating:

No comments:
Post a Comment