இ.போ.ச. சாரதிகளின் அசமந்தப் போக்குகள்! அதிக வேகத்தில் பேருந்துகளை ஓட்டுவதால் பயணிகள் அச்சம்!
இலங்கை போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை - கொழும்பு சேவையில் ஈடுபடுகின்ற சாரதிகள் பேருந்துகளை மிக வேகமாகச் செலுத்தி வருவதால் விபத்துக்கள் ஏற்படக் கூடிய நிலை காணப்படுவதாகவும், இதனால் தாம் மிகுந்த அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை, இச் சேவைக்குரிய பேருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே சேவையினை ஆரம்பிப்பதாலும் தாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இலங்கை போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறைச் சாலைக்குரிய பயணிகள் பேருந்துச் சேவையில் ஈடுபடுகின்ற சாரதிகள் குறித்த பேருந்துகளை கட்டுபாட்டு வேகத்தினை விட அதிகவேகத்தில் செலுத்தி வருவதால் விபத்துக்கள் ஏற்படக் கூடிய சூழல் காணப்படுவதாகப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக பருத்தித்துறை - கொழும்பு செல்லும் பேருந்துகள் மிகவேகமாகச் செலுத்தப்படுவதாக பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனால் குறித்த பேருந்தில் பயணிக்கின்ற பயணிகளும் மிகுந்த அச்சத்துடனேயே பிரயாணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மையில் ஆனையிறவுப் பகுதியில் இப்பேருந்து சேவையில் ஈடுபட்ட பேருந்து ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இப் பேருந்தில் பயணித்த பயணிகள் பலரும் படுகாயமடைந்துள்ளனர்.
இதேவேளை பருத்தித்துறை – யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபடுகின்ற இச் சாலைக்குரிய பேருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே சேவைகளை ஆரம்பிப்பதாலும், மக்கள் பாதிப்படைகின்றனர்.
குறிப்பாக காலையில் சேவையில் ஈடுபடுகின்ற பேருந்துகள் எந்தவொரு நேரவரையறைகளுமின்றி சேவையில் ஈடுபடுவதாகவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே வீதி விபத்துக்களைக் கட்டுப் படுத்தி உயிராபத்துக்களைத் தடுப்பதற்கு இப்பேருந்துகளின் வேகத்தினை உரிய அதிகாரிகள் தலையிட்டு கட்டுப்படுத்த வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இ.போ.ச. சாரதிகளின் அசமந்தப் போக்குகள்! அதிக வேகத்தில் பேருந்துகளை ஓட்டுவதால் பயணிகள் அச்சம்!
Reviewed by Admin
on
September 19, 2013
Rating:

No comments:
Post a Comment