அண்மைய செய்திகள்

recent
-

முஸ்லிம் காங்கிரஸ் முறைப்பாடு

மன்னார், எருக்கலம்பிட்டியிலும் ஏனைய  சில கிராமங்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் சிலரால் தமது கட்சிக்கு ஆதரவாக வாக்குகளை கவர்வதற்காக அரசியல்வாதி ஒருவரின் ஏற்பாட்டில் உணவுப் பொருட்களை குறிப்பிட்ட சில கடைகளிலிருந்து இலவசமாக பெற்றுக் கொள்வதற்காக தேர்தல் சட்டவிதிகளுக்கு முரணாக வறிய மக்களுக்கு 'டோக்கன்' (Token) வழங்கப்பட்ட முறைகேடான செயல் பற்றி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரீ. ஹஸன் அலியிடம் முறையிடப்பட்டதைத் தொடர்ந்து, அவரால் தேர்தல்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் காமினி நவரட்னவின் கவனத்திற்கு வெள்ளிக்கிழமை மாலை  கொண்டுவரப்பட்டு, அதனை தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் செயலாளர் நாயகம் ஹஸன் அலி இந்த சட்டவிரோத செயல்பற்றி தேர்தல் ஆணையாளருக்கும், தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கும் முறைபாடு செய்துள்ளார்.

ஆயினும், அநேகமானோருக்கு இவ்வாறான உணவுப்பொருட்கள் கையூட்டலாக வழங்கப்பட்டு விட்டதாக முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார். அந்த உணவுப்பொருள் அடங்கிய பொதிகளில் சீனி, பருப்பு, அரிசி போன்ற பல்வேறு பொருட்கள் அடங்கியிருந்ததாகவும் அவர் கூறினார்.

எருக்கலம்பிட்டியில் இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் சேர்ந்திருக்கும் சிலரால் உணவு பொருள்களை இலவசமாக பெறுவதற்கான 'டோக்கன்கள்' விநியோகிக்கப்பட்டப்பொழுது அங்குள்ள பள்ளிவாசல் முக்கியஸ்தர்கள் அந்த தகாத செயலை கைவிடுமாறு எச்சரித்துள்ளதோடு அங்கு அமைதியை நிலைநாட்டவும் முயற்சித்துள்ளனர்.

இதன்போது கலைந்து சென்றவர்கள் மீண்டும்; 'டோக்கன்களை' வேறு இடங்களில் வைத்து விநியோகித்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்டவர்களை பொலிசார் தேடி வருவதாகவும் ஹஸன் அலி எம்.பி கூறினார்.

இவ்வாறான செயல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்புகளை தடுப்பதற்காக தேர்தல்களின் போது, வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவரின் வழிகாட்டலில் மீள் குடியேறிய மக்களினதும்,; இடம்பெயர்ந்த மக்களினதும் வாக்குகளை முறைகேடாக பெறுவதற்காக வழமையாக திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதாக தெரிய வந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 
முஸ்லிம் காங்கிரஸ் முறைப்பாடு Reviewed by NEWMANNAR on September 21, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.