அருட்தந்தை பிரான்சிஸ் வழக்கு ஒத்திவைப்பு
இறுதிப்போரின் முடிவில் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அரசாங்கத்தின் அழைப்பையேற்று இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளுடன், இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்ட அருட்தந்தை பிரான்சிஸ் உட்பட்டவர்கள் தொடர்பாக வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 7 ஆட்கொணர்வு மனு வழக்குகள் தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம்
திகதிக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி ஒத்திவைத்துள்ளார்.
மேலும் இரண்டு வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா நீதவான் நீதிமன்றத்திற்கு இந்த நீதிமன்றத்தினால் கட்டளையிடப்பட்டுள்ளது.
பொது மன்னிப்பளிக்கப்படும் என்ற அரசாங்கத்தின் உத்தரவாதத்தையடுத்து, இறுதி யுத்தம் முடிவடைந்ததும், முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் சிங்கள மொழியை மொழிபெயர்த்து உதவியதாகத் தெரிவிக்கப்படும் அருட்தந்தை பிரான்சிசும் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டதன் பின்னர் அவரைப் பற்றிய தகவல்கள் எதுவுமில்லாத நிலையில் அவர் தொடர்பில் ஆட்கொணர்வு மனு ஒன்று வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டிருந்தது.
இதேபோன்று இராணுவத்திடம் சரணடைந்து, தகவல்கள் எதுவுமற்ற நிலையில் இருப்பவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேலும் 6 வழக்குகள் இன்று புதன்கிழமை வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுக்கப்பட்டபோது, அரச தரப்பினர் விளக்கமளிப்பதற்கான கால அவகாசம் கோரியதையடுத்து, இந்த வழக்குகளை அடுத்த மாதம் 27 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இதேவேளை, அருட்தந்தை பிரான்சிஸ் தொடர்பான ஆட்கொணர்வு மனு தொடர்பான விசாரணைகளை அவதானிப்பதற்கும், ஏனைய ஆட்கொணர்வு மனுக்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்குமாக, சுமார் 20 பேர் வரையிலான அருட்தந்தையர் மற்றும் அருட்சகோதரிகள் ஆகியோர் இந்த வழக்கு விசாரணையின்போது, நீதிமன்றத்தில் பார்வையாளர் பகுதியில் ஆஜராகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது,
மன்னார் மற்றும் யாழ் மறைமாவட்டங்களைச் சேர்ந்த அருட்தந்தையர்களும், அருட்சகோதரிகளுமே இவ்வாறு வருகை தந்திருந்தார்கள்.
இந்த வழக்குகளில் சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் மற்றும் சட்டத்தரணிகளான அன்ரன் புனிதநாயகம் மற்றும் நிசாந்தன் ஆகியோர் மனுதாரர்கள் சார்பில் ஆஜராகியிருந்தனர். அரச தரப்பில் அரச சட்டத்தரணி ஆஜராகியிருந்தார் என்று பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருட்தந்தை பிரான்சிஸ் வழக்கு ஒத்திவைப்பு
Reviewed by Admin
on
October 24, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment