யாழ். வலிகாமம் கல்வி வலயத்தை அழிக்க முற்படாதீர்? - இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்
பெருந்தொகையான மாணவர்களையும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்களையும், நூற்றுக்கணக்கான அதிபர்களையும், நூற்றுக்கணக்கான பாடசாலைகளையும் கொண்டு தேசிய மட்டத்தில் வடமாகாணத்திற்குத் தொடர்சாதனைகளைப் பெற்றுத்தருகின்ற யாழ்ப்பாணம் வலிகாமம் கல்வி வலயத்தின் அவல நிலை நீடிக்க அனுமதிக்க முடியாது. என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கூறியுள்ளது.
இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த காலங்களில் திணைக்களத்திற்கும், அதிபர் ஆசிரியர்களுக்கும் நல்ல உறவுகள் பேணப்படாத நிலையில் தற்போது படிப்படியாக அந்த உறவு நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுவருகின்றது. புதிய புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படுவதனை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
மாறாக அதனை விரும்பாத சில விசமிகள் திணைக்களத்தின் ஒட்டுமொத்த செயற்பாடுகளையும் குழப்பி வலிகாமம் வலய மாணவர்களின் கல்வியை அழிக்கப்பார்க்கின்றார்கள். ஒருசிலர் அரசியல் சார்ந்த செல்வாக்குகளை வைத்துக்கொண்டு உண்மையாக உழைக்கின்ற ஊழியர்களையும், அவர்களின் செயற்பாடுகளையும் மானபங்கம் செய்கின்றார்கள்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வாயில்மட்டும் எடுத்துக்கொண்டு எதேச்சாதிகாரமாக நடந்துகொள்கின்றார்கள். இது ஒன்றும் மற்றவர்களுக்கு முன்மாதிரியான காரியங்கள் அல்ல. பிள்ளைகளுக்காக தம்மை அர்ப்பணித்துப் பணியாற்றும் அதிபர்களையும், ஆசிரியர்களையும் அவமதிக்கும் செயலாகவே நாம் பார்க்கின்றோம்.
வலிகாமம் கல்வி வலயம் பல மாற்றங்களுடன் ஏனைய மாகாணங்களில் உள்ள கல்விசார் தொழிற்பாடுகளுக்கு ஒத்தாற்போல் புதிய விடயங்களை நடைமுறைப்படுத்தி வருவதனை அதிபர்களும், ஆசிரியர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதனால் பல்வேறு தொழிற்பாடுகளில் முன்னேற்றத்துடன் கூடிய வெற்றிகளையும் அவர்கள் கண்டுவருகின்றனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாத சிலர் சட்டரீதியிலான நடைமுறைகளை கையில் எடுத்துக்கொண்டு பலரையும் அச்சுறுத்தி வருவதனை நாம் இனிமேலும் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. எமது அதிபர்களையும், ஆசிரியர்களையும் தொலைபேசிகளிலும், நேரடியாகவும் அச்சுறுத்தி வருவதாகவும் நாம் அறிகின்றோம்.
திணைக்களம் சார்ந்த விடயங்களை அத்துறைசார் உயர் அதிகாரிகளுக்கு ஆதாரங்களுடன் முறையிடுவதனை விட்டுவிட்டு நாகரிகமில்லாத செயல்களில் ஈடுபடுவதனை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. இதுதொடருமாக இருந்தால் வலயத்தில் உள்ள ஒட்டுமொத்த அதிபர்கள், ஆசிரியர்களை ஒன்றுதிரட்டி நாகரிகமில்லாதவர்களை வெளியேற்றவேண்டி ஏற்படும்.
இது விடயமாக கல்வி அமைச்சுச் செயலாளரிடம் எடுத்துக் கூறியுள்ளோம். தக்க தகைமைகளுக்கு ஏற்ப ஒவ்வொருவரும் நடந்துகொள்ள வேண்டும். அவசியமில்லாமல் உண்மையாகத் தொழிற்படும் உத்தியோகத்தர்களை துன்புறுத்தும் நடவடிக்கைகள் தொடருமாக இருந்தால். அவர்கள்மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்விடயத்தில் உயர் அதிகாரிகள் பக்கச்சார்பில்லாமல் நடந்துகொள்ளத் தவறினால் சகல உண்மைகளையும் நாம் வெளியிடவேண்டியிருக்கும். வலிகாமம் வலயத்தினைச் சூறையாட நினைக்கும் சில தீய சக்திகள் இதன் பின்னணியில் தொழிற்படுவதாகவும் அவற்றுக்குத் துணையாக ஓரிரு விசமிகள் சேர்ந்து கொண்டுள்ளதாகவும் ஆதாரபூர்வமாக அறியப்படுகின்றது. இதுபோன்ற செயற்பாடுகள் மற்றைய வலயங்களுக்கும் தொற்று நோயாகப் பரவுவதற்கு முன்னர் இதற்கு வடமாகாணக் கல்வி அமைச்சு நீதியான முறையில் உடனடித் தீர்வுகாணவேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம்.
யாழ். வலிகாமம் கல்வி வலயத்தை அழிக்க முற்படாதீர்? - இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்
Reviewed by Admin
on
October 13, 2013
Rating:

No comments:
Post a Comment