முதலமைச்சர் சீ.வீ விக்னேஷ்வரனுக்கும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பிற்குமிடையிலான சந்திப்பு
வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வீ விக்னேஷ்வரனுக்கும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பிற்குமிடையிலான முக்கிய சந்திப்பொன்று யாழ் நூலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.
மேற்படி சந்திப்பில் வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் உட்பட நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை அமீர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் (நளீமி), நீதிக்கும் சமாதானத்துக்குமான முன்னணியின் தலைவர் நஜா முஹம்மத், ஆய்வுக்கும் கலந்துரையாடலுக்குமான மத்திய நிலையத்தின் சார்பாக அதன் மத்திய குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் இவ்வமைப்புகளின் மத்திய குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
மேற்படி சந்திப்பில் வட மாகாண முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. மீள்குடியேறுகின்ற முஸ்லிம்களின் அடையாளம், காணி, வாக்காளர் பதிவு, கல்வி, உட்கட்டமைப்பு வசதிகள் போன்ற அனைத்து துறைகளிலும் எவ்வாறான பாதிப்புகளுக்கு முஸ்லிம்கள் உள்ளாகியிருக்கிறார்கள் மற்றும் இதற்கான உடனடியாக செய்ய வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் கருத்துக்கள் இரு தரப்பினாரிடையேயும் பரிமாறப்பட்டன.
இது மாத்திரமன்றி ஒரு சில அரச உயரதிகாரிகளினால் முஸ்லிம் மக்கள் புறக்கணிப்புக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள் என்ற விடயமும், சில ஊடகங்கள் இனவாத அடிப்படையில் வடக்கு முஸ்லிம்களை வெளிமாவட்ட முஸ்லிம்கள் என அடையாளப்படுத்துவதும் பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவிக்கிறது என்ற விடயமும் முதலமைச்சர் அவர்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கொள்கைகள் சார்ந்து நோக்குகின்ற போது வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அனைவரும் அவர்களது பூர்வீக நிலத்தில் குடியேற வேண்டும். மேற்படி விடயத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அனைத்து மாகாண சபை உறுப்பினர்களும் உடன்பாடு கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம் மக்கள் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் எமக்கு முன்வைக்கப்படுகின்றன. அவற்றின் உண்மைத் தன்மை குறித்து ஆராய வேண்டியிருக்கிறது. எவருக்கும் பக்கசார்பாக நடக்க முடியாது. உரிய முறையில் பிரச்சினைகள் அணுகப்பட்டு தீர்வுகள் முன்வைக்கப்பட வேண்டும்.
இதனடிப்படையில் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய ஆணைக்குழுவொன்றை அமைப்பதனூடாக மக்களின் பிரச்சினைகள் முழுமையாக அறியப்பட்டு நியாயமான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் இவ்விடயம் தொடர்பாக எதிர்வரும் நாட்களில் அமைச்சர்களுடன் கல்ந்துரையாடி ஆலோசனைகளை முன்வைப்பதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
தமிழ் முஸ்லிம் விவகாரங்களை இவ்வாறு பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் சுமூகமாக தீர்த்துக் கொள்ள முன்வந்தமையையிட்டு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியல் கூட்டமைப்புக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் எமது முயற்சிகள் தொடர்ந்தும் சிறப்பாக இடம்பெற பிரார்த்தித்துக் கொள்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
முதலமைச்சர் சீ.வீ விக்னேஷ்வரனுக்கும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பிற்குமிடையிலான சந்திப்பு
Reviewed by NEWMANNAR
on
November 20, 2013
Rating:

No comments:
Post a Comment