ஐந்தாவது ஆண்டில் தடம் பதிக்கும் மன்னார் இணையத்திற்கு தமிழ் நேசன் அடிகளாரின் ஆசிச் செய்தி
மன்னார் இணையம் 4 வருடங்களை நிறைவு செய்கின்ற இவ்வேளையில் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
இன்று விஞ்ஞானம் விரைந்த வளர்ச்சியைக் கண்டுள்ளது. வீட்டுச் சமயலில் இருந்து விண்வெளிப் பயணம்வரை விஞ்ஞானத்தின் வியக்கவைக்கும் வளர்ச்சி காணப்படுகிறது. கொம்புயூட்டரில் காதல் பண்ணி, இன்ரநெற்றில் கலியாணம் செய்து குளோனிங்கில் குழந்தைபெற்றுக்கொள்கின்ற காலம் இது.!
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தபோது அந்தச் செய்தி ஸ்பெயினுக்கு போய்ச் சேர ஆறு மாதம் ஆகியது. ஆபிரகாம் லிங்கன் சுடப்பட்டபோது அந்தச் செய்தி உலகத்திற்குப் போய்ச் சேர ஒரு வாரம் ஆகியது. ஆனால் இன்று எந்தச் செய்தியும் ஒரு நொடிப்பொழுதில் உலகத்தின் அனைத்து மூலைகளையும் எட்டிவிடுகிறது.
இதுதான் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி!
மன்னாருக்கு கிடைத்த அரும்பெரும் ஊடகம் மன்னார் இணையம்! கடந்த 4ஆண்டுகளில் அதன் வளர்ச்சி மிகவும் விரைவானது, அபரீதமானது. உலகெங்கும் சிதறி வாழும் தமிழ் மக்கள் குறிப்பாக மன்னார் மக்கள் மன்னார்ச் செய்திகளை உடனுக்குடன் - சுடச்சுட அறிந்துகொள்ளுகின்ற ஓரே ஊடகம் மன்னார் இணையமே!
இந்த யுகம் 'ஊடக யுகம்' என்று அழைக்கப்படுகிறது.
'கப்பல் வைத்திருந்தவன் 19ஆம் நூற்றாண்டை வெற்றிகொண்டான். விமானம் வைத்திருந்தவன் 20ஆம் நூற்றாண்டை வெற்றிகொண்டான். ஊடக வளமுள்ளவன் இந்த 21ஆம் நூற்றாண்டை வெற்றிகொள்கிறான்.'
இந்த அடிப்படையில் ஊடகத்தின் வலிமையை உணர்ந்து இதற்காக தம்மை அர்ப்பணித்துள்ள மன்னார் இணையத்தின் உரிமையாளர் மற்றும் பணியாளர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்து நிற்கின்றேன். பல்லின, பல்சமய சமூகங்களைக்கொண்ட மன்னார் மாவட்டத்தின் செய்திகளை நடுநிலையோடு நின்று வெளியிடும் உங்கள் மனப்பாங்கு பாராட்டுக்குரியது.
மாவீரன் நெப்போலியன் சொன்னான், 'முதுகுக்குப் பின் ஒரு காரியம் செய்யலாம் அது முதுகைத் தட்டிக் கொடுப்பதுதான்.' ஆம் மன்னார் இணையத்தளத்தை நான் பாராட்டுகின்றேன். வாழ்த்துகிறேன், இறையாசி கூறுகின்றேன்.
நீங்கள் வளமான ஓர் ஆறு!
மன்னாருக்குக் கிடைத்த பெரும் பேறு!
வாழவேண்டும் வருடங்கள் நூறு!
அருட்திரு தமிழ் நேசன்
ஐந்தாவது ஆண்டில் தடம் பதிக்கும் மன்னார் இணையத்திற்கு தமிழ் நேசன் அடிகளாரின் ஆசிச் செய்தி
Reviewed by NEWMANNAR
on
November 09, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment