முல்லையில் நிலக்கொள்ளை உச்சக்கட்டம்; வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன்
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் உச்சக்கட்ட வேகத்தில் நில அபகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணி பிள்ளையார் கோயிலிலிருந்து சுமார் 1.5 கிலோ மீற்றர் தூரத்திலேயே இவ்வாறான நிலக்கொள்ளை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 அவர் மேலும் தெரிவிக்கையில், பிரதேச மக்களின் தகவலை அடுத்து இன்று குறித்த பகுதிக்குச் சென்று சம்பவத்தை நேரடியாக பார்வையிட்டேன். அதன்போது இரண்டு கொட்டில்களில் இருந்த தென்பகுதியைச் சேர்ந்தவர்களால் கனரக இயந்திரங்களின் உதவியோடு காடழிப்பு இடம்பெற்றுக்கொண்டிருந்தது. இதையடுத்து இக்காடழிப்பு தொடர்பில் அவர்களிடம் நேரில் அவர் விசாரித்தேன் . 
அப்போது அவர்கள் மிகவும் பயந்த சுபாவத்தோடு , தாங்கள் ஒப்பந்த அடிப்படையில் காடு அழிப்பதாகவும் ,மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இது நடைபெறுவதாகவும் தெரிவித்தனர். அத்துடன் இத்திட்டத்தில் 22 சிங்களவர்களுக்கு தலா 25 ஏக்கர் வீதம் மாங்கன்றுகளை நடுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், நடவேண்டிய மாங்கன்றுகளை தாம் கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவித்தனர். தங்களின் முதலாளி வேலைக்கு அமர்த்தியதால் தாம் இதைச் செய்கிறோம் என்றும் கூறினர். இதேவேளை தொடர்ந்தும் குறித்த பகுதியை பார்வையிட்டுக் கொண்டு நிற்கும் போது இராணுவப் புலனாய்வாளர் ஒருவர் பின்தொடர்ந்த வண்ணம் இருந்ததை அவதானித்தேன்.
 குறித்த நபரை அழைத்து என்னை எதற்காக பின்தொடர்கிரீர்கள் என்று கேட்டேன். ஒருவாறாக சமாளித்துக்கொண்டு தன்னை இராணுவப் புலனாய்வாளர் என அடையாளப்படுத்திக் கொண்டார். அப்போது நான்  அவரிடம் இங்கு இடம்பெறும் மோசமான நிலக்கொள்ளையை உலகறியச் செய்யவே நான் வந்துள்ளேன். என்னைப்பின்தொடர வேண்டிய அவசியம் உங்களுக்கில்லை என்று தெரிவித்தேன்.    மேலும் இங்கு எங்கள் மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளை பறித்துக் கொடுப்பது , ஒரு புறம் நடைபெறுகையில் , மறுபுறம் தோட்டச் செய்கை எனும் பெயரில் தற்போது சுமார் 600 ஏக்கர் நிலம் இப்போது அபகரிக்கப்படுகிறது. 
எமது மக்கள் எங்களின் பூர்விக நிலத்தில் குடியிருப்பதற்கே காணிகள் இல்லாத நிலையில், எங்கள் தாயகத்தில் சிங்களவர்களுக்கு குடியிருப்புக்கள், தோட்டச் செய்கைகள் என்கிற பெயரில் நிலம் வழங்கப்படுகிறது. இது ஒரு திட்டமிட்ட நிலக்கொள்ளையாகும். தமிழரின் தாயகமான வடகிழக்கை நிரந்தரமாக துண்டாடும் நோக்கிலேயே வடக்கை கிழக்குடன் இணைக்கிற முல்லைத்தீவில் இவ்வாறு நிலம் கொள்ளையடிக்கப்படுகிறது. யார் நிலத்தை யார் , யாருக்கு தாரை வார்ப்பது? இம்மண்ணின் காவலர்கள் இங்கே இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா? என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 
முல்லையில் நிலக்கொள்ளை உச்சக்கட்டம்; வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன்
 
        Reviewed by Author
        on 
        
November 26, 2013
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
November 26, 2013
 
        Rating: 


No comments:
Post a Comment