அண்மைய செய்திகள்

recent
-

வலி.வடக்கு மக்கள் விடயத்தில் சுமந்திரனின் துரோகத்தனம் அம்பலம்.

பிரித்தானியப் பிரதமர் டேவிற் கமரூன் வலி.வடக்கில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைச் சந்திக்காமல் சென்றமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனே பிரதான காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டிருக்கின்றது.

டேவிற் கமரூனின் நிகழ்ச்சி நிரலில் குறித்த உண்ணாவிரதப் போராட்ட இடத்திற்குச் செல்வதற்கான நேரம் ஒதுக்கப்பட்டிருக்காத நிலையிலும் அவர் கட்டாயம் அங்கு வருவார் என்று சுமந்திரன் பொய் கூறி மக்களை அங்கு காத்திருக்க வைத்ததாக தெரியவந்துள்ளது.

சுமந்திரன் பெரும்பாலான ஊடகவியலாளர்களையும் அங்கு முடக்கி வைத்திருந்தாகவும் யாழ்.மாவட்ட ஊடகவியலாளர் தரப்பிலும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மாவை சேனாதிராஜா கடும் கொதிப்பில் உள்ளதாகவும் தெரியவருகின்றது.

பிரித்தானியப் பிரதமர் டேவிற் கமரூன் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார். இவர் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமுக்கு செல்வது, உதயன் பணிமனைக்கு செல்வது, யாழ்.பொது நூலகத்தில் வடக்கு மாகாண முதலமைச்சரைச் சந்திப்பது போன்ற நிகழ்ச்சி நிரல்களே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆனால், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலில் உண்ணாவிரதம் இருக்கும் மக்களை சந்திப்பதற்கான நேரம் ஓதுக்கப்பட்டிருக்கவில்லை.

வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்களை மீளக்குடியேற்றுமாறு வலியுறுத்தி கடந்த செவ்வாய்;க்கிழமை தொடக்கம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பிரித்தானியப் பிரதமர் டேவிற் கமரூன் யாழ்ப்பாணத்திற்கு வரும்போது அவரது கவனத்தை ஈர்ப்பதற்காகவே இந்தப் போராட்டம் நான்கு நாட்களாக இடம்பெற்றது. டேவிற் கமரூன் கட்டாயம் வந்து தங்களைச் சந்திப்பார் என்று மக்கள் எதிர்பார்த்திருந்தனர். இவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராஜா, சுரேஸ் பிறேமச்சந்திரன் உள்ளிட்டவர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்களும் காத்திருந்தனர்.

இந்த நிலையில், ஊடக நிறுவனங்களைத் தொடர்பு கொண்ட சுமந்திரன், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு பிரித்தானியப் பிரதமர் வருவார் என்றும் அங்கு வருகை தருமாறும் கேட்டுக்கொண்டிருக்கின்றார். மேலும் மாவிட்டபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜாவுக்கும் தவறான தகவல்களை வழங்கி மக்களை அங்கேயே இருக்குமாறும் கமரூன் கட்டாயம் அங்கு வருவார் என்றும் கூறியிருக்கின்றார்.

ஆனால் மாவிட்டபுரத்திற்கு கமரூன் வருவதற்கான நிகழ்ச்சி நிரல் இல்லை என்று வேறு தரப்பினர் மூலம் அறிந்துகொண்ட மாவை சேனாதிராஜா, சுமந்திரனுடன் தொடர்புகொண்டு கமரூன் மாவிட்டபுரத்திற்கு வரமாட்டார். எனவே மாவிட்டபுரத்தில் உண்ணாவிரதம் இருக்கின்ற மக்களை அவர் வருகின்ற சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமுக்கு அழைத்துச் சென்று அங்கு கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்துவோம் என்று கூறியிருக்கின்றார். ஆனால், கமரூன் கட்டாயம் வருவார் என்று சுமந்திரன் கூறினாராம்.

இதனால், நான்கு நாட்கள் காத்திருந்த மக்களும் இறுதி நாள் திட்டமிட்டு அங்கு காத்திருக்க வைக்கப்பட்ட ஊடகவியலாளர்களும் பிரித்தானியப் பிரதமர் வருகை தராததால் ஏமாற்றத்துடனும் வெறும் கையுடனும் திரும்பிச் சென்றனர்.

ஏற்கனவே தமிழ் மக்களுக்கு எதிராகவும் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகவும் செயற்பட்டு வருகின்ற சுமந்திரன் தற்போது முக்கியமான கட்டத்தில் தமிழ் மக்களை நட்டாற்றில் தவிக்க விட்டிருக்கின்றார்.
வலி.வடக்கு மக்கள் விடயத்தில் சுமந்திரனின் துரோகத்தனம் அம்பலம். Reviewed by NEWMANNAR on November 21, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.