அண்மைய செய்திகள்

recent
-

உலக மீனவ தினத்தில் மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு பேரவையின் இனைப்பாளர் திரு.சுனேஸ் அவர்கள் விடுக்கும் ஊடக அறிக்கை(Video song)

2013 கார்த்திகை 21ம் நாள் சர்வதேச கடற்றொழிலாளர் தினம்
21-11-2013 இன்று உலக மீனவ தினத்தில் அனைத்து கடற் தொழிலாளிகளையும் வாழ்த்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைவதமாக மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு குடும்பம் சார்பாக அதன் இனைப்பாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகத்திற்கு அவர் தெரிவிக்கையில்

வடக்கு மாகாண கடலக மக்கள் கடந்த 30 வருடங்களாக அனுபவித்த துன்பங்கள் துயரங்கள் அவலங்கள் சொல்லொணா கஸ்ரங்கள் அனைத்தும் வேறு எந்த சமூகமும் இதுரை அனுபவித்தது கிடையாது என்பதை யாரும் மறுத்துரைக்க முடியாது.

2009ம் ஆண்டு போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் சமாதானம் ஏற்பட்டுவிட்டதென ஊடகங்கள் யாவும் பறைசாற்றிக் கொண்டிருந்தது. எமது மீனவ மக்களும் இதுவரை நாம் அனுபவித்த கஸ்ரங்களெல்லாம் தீர்ந்தது கடந்த போர்க்காலங்களில் இழந்த சொத்துக்கள், உடமைகள் அனைத்தையும் கடல் தாயின் மடியில் இருந்து மீட்டு மீண்டும் உயர்வோம், வாழ்வோம் என்று எண்ணினார்கள். ஆனால் எமது கடலக மக்களின் எண்ணங்கள் ஈடேறியதா? நல் வாழ்வுதான் கிடைத்ததா? நிம்மதியாக கடற்றொழில் செய்ய முடிகிறதா? தொடர்ந்தும் எமது வாழ்வும் வளமும் அவலம் நிறைந்த சூனிய வாழ்வுதானா? இந்த சமூகம் அனுபவித்த கொடுமைகளிலிருந்து இவர்களுக்கு மீட்சி கிடைக்காதா? கிடைக்க வழிவகை செய்ய மீட்பர்கள் இல்லையா?

இந்த நிலையில் வாழ்விடங்களை மீட்பதற்காக மக்கள் தொடர்ந்தும் போராடிக் கொண்டுதான் இருக்கின்றனர். அண்மையில் இடம் பெற்ற பொதுநலவாய மாநாட்டை ஒட்டி யாழ்ப்பாணம் வலிவடக்கு மக்கள் தமது மீள்குடியமர்வை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியிருந்தார்கள். இவை எல்லாம் அரசாங்கத்திற்கோ, அரச படைகளுக்கோ செவிடன் காதில் ஊதும் சங்காகவே உள்ளது. ஆனால் அரசபடையும் மக்களின் வாழ்விடங்களை ஆக்கிரமிப்பதும் வாழ்வாதாரங்களை அழிப்பதிலும் குறியாக தொடர்ந்து செயற்படுகின்றது.

வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டம், மன்னார்,  வவுனியாஇ முல்லைத்தீவு கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இன்னும் இராணுவத்தினரால் மற்றும் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின் நிலங்களும் மீன்பிடி துறைமுகங்களும் கையளிக்கப்படாமல் இராணுவமும் கடற்படையும் தமது தேவைக்காக பயன்படுத்தி வருகின்றது.

யாழ்ப்பாணம்
தமது சொந்த நிலங்களை மீட்பதற்காக பல போராட்டங்களை மக்கள் இன்றுவரைக்கும் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணம் வலிவடக்கு மக்கள் சட்டரீதியாக தமது காணிகளை மீட்கும் நடவடிக்கையை மேற்கொண்டதன் பிரகாரம் நீதிமன்றத்தீர்ப்பும் மக்களுக்கு சாதகமாக தீர்க்கப்பட்ட போதிலும் அரசபடையினர் அடாத்தான முறையில் மக்கள் நிலங்களை மீள ஒப்படைக்காமல் கையகப்படுத்துவதில் குறியாகவே உள்ளனர்.

இதனால் யாழ் வலி வடக்கில் 32ற்கு மேற்பட்ட நலன்புரி நிலையங்களில் 10000 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இன்னும் 24புஷளு பிரிவு கிராமங்கள் மீளக்குடியமர முடியாத நிலையை படையினர் ஏற்படுத்தி உள்ளனர். அதாவது காங்கேசன்துறை, மயிலிட்டி, மாவிட்டபுரம், தையிட்டி, வீமன் காமம், வறுத்தலைவிளான், வசாவிளான், பலாலி, ஊறணி, ஆகிய இடங்களாகும்.

அத்துடன் இலங்கையில் இரண்டாவது பெரிய மீன்பிடித்துறைமுகம் என்று சொல்லப்படும் மயிலிட்டி துறைமுகத்தை மக்களிடம் கையளிக்காமல் கடற்படையினரே தங்கள் தேவைக்குப் பயன்படுத்தி வருகின்றது. தமது வாழ்விடங்களையும் வாழ்வாதாரங்களையும், விடுவிக்க கோரி இன்றுவரையும் போராடிக் கொண்டுதான் உள்ளனர். ஆனால் இராணுவம் மக்களின் வீடுகளை இடித்து அழிப்பதிலும் முகாம்களை பலப்படுத்துவதிலும் தீவிரமாக உள்ளது. அத்துடன் மக்களின் விவசாய நிலங்களில் இராணுவத்திற்கு தேவையான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயம், யோக்கற் தொழிற்சாலை மற்றும் உல்லாச விடுதிகள் சினிமாத்திரையரங்குகளை பிரமாண்ட முறையில் மக்கள் நிலங்களை தொடர்ந்தும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது.

கிளிநொச்சி
அத்துடன் கிளிநொச்சி இரணைமடுவில் வடமாகாண விவசாய அபிவிருத்திக்குச் சொந்தமான நிலம் உட்பட விவசாயிகளுக்கு சொந்தமான நிலம் கரும்புத் தொழிற்சாலை உள்ளடங்கலாக 400 ஏக்கர் நிலத்தை இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ளது. இதனால் 30 இற்கு மேற்பட்ட விவசாயிகள் நேரடியாகப் பாதிப்படைந்துள்ளனர்.

இது மட்டுமல்ல. முல்லைத்தீவு மாவட்டத்தில் கோப்பாப்புலவு எனும் பிரதேசத்தில் விமானத்தள விஸ்தரிப்புக்காக மக்களின் வாழ்விடங்களை படைத்தரப்பு கையகப்படுத்தியதால் 225 குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர்.

அது மட்டுமன்றி  கிளிநொச்சி தொண்டமான்நகர் கிராமத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 15 ஏக்கர் காணிகளை இராணுவம் தங்களின் விவசாய நடவடிக்கைகளுக்காக தங்களின் சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களைக் கொண்டு விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் நூற்றுக்கு மேற்பட்ட விவசாய குடும்பங்கள் பாதிப்புக்குள்ளான நிலையில் காணப்பக்கின்றார்கள்.
மன்னார்;
மன்னார் மாவட்டத்தில் முள்ளிக்குளத்தில் 2007ம் ஆண்டு இடம் பெயர்ந்த மக்கள் இன்னும் தமது இடத்திற்கு செல்ல அனுமதிக்கும்படி கோரி பல போராட்டங்களை நடத்திய போதிலும் படைத்தரப்பு அதற்கு இடங்கொடுக்கவில்லை. இதனால் 212 விவசாய மீனவ குடும்பங்கள் நேரடியாக பாதிப்படைந்த நிலையில் தற்போது மலங்காட்டுப்பகுதியில் கொட்டகைக்குள் வாழ்ந்து வருகின்றார்கள். கடற்படை தற்போது மக்களின் குடியேற்ற காணிகளாக 170 ஏக்கர் காணிகளை அபகரித்து வைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். அத்தோடு மக்களின் மொத்த விவசாய காணிகளாக 1200 ஏக்கர் காணப்படுகின்ற போதிலும் மக்களின் பாவனைக்காக தற்போது 650 ஏக்கர் மாத்திரமே விடப்பட்டுள்ள நிலையில் 550ஏக்கர் விவசாய காணிகளையும் கடற்படை அபகரித்து வைத்துள்ளது.

அத்தோடு மன்னாhர் பள்ளிமுனை 25 வீட்டுத்திட்டத்தில் 2ஏக்கர் காணியினை 1990ம் ஆண்டு தொடக்கம் இராணுவம் மற்றும் காவல் துறையினர் ஆக்கிரமித்து வைத்து தற்போது கடற்படை அதனை அபகரித்து வைத்தள்ளது. மக்கள் தங்கள் நாளாந்த வாழ்நாட்களை தங்களின் உறவினர்கள் வீட்டிலும் நண்பர்கள் வீட்டிலும் கழித்துக்கொண்டு வருக்கின்ற வேளை இக் காணியினை பெற்றுக்கொள்ளுவதற்காக தற்போது நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் நேரடியாக 22 மீனவ  குடும்பங்கள் நேரடியாக பாதிப்படைகின்றனர். இப் பிரதேசத்தில்  குறிப்பாக 06 வீடுகளை இராணுவம் உடைத்துள்ளதுடன் 7 வீடுகளை அவர்களின் பாவனைக்காகவும் 9 வெற்றுக்காணிகளை அவர்களின் முகாம் பாவனைக்காக பயன்படுத்தி வருக்கின்றார்கள்.

மன்னார் முசலி பிரதேசத்தில் சிலாவத்துறை கிராமத்தை 2007ம் ஆண்டு யுத்தத்திற்கு பிற்பாடு 50 ஏக்கர் முஸ்ஸிம்; மக்களின் காணிகளை கடற்படை அபகரித்து வைத்துள்ளனர். குறிப்பாக 220 குடும்பங்கள் தங்களின் இல்லிடங்களை இழந்து தவிக்கின்றனர்.

சிறுத்தோப்பு ஆலயத்திற்கு சொந்தமான 11ஏக்கர் காணிகளை கடற்படையினர் அபகரித்து வைத்துள்ளதோடு அவர்களின் படை முகாம்களையும் அமைத்துள்ளனர்.

முசலி பிரதேசத்தில் கொண்டச்சிக்குடா கொக்குப்படையான் மற்றும் கொண்டச்சி மீனவ சழூகத்  தின் மீனவ துறைமுகத்தினை கைபற்றி வைத்துள்ளமை.

இன்றைய நாள் மீனவர்களின் வாழ்நாளில் ஒரு பொன்னான நாளாக ஏற்றுக்கொண்டு 2013 கார்த்திகை 21 சர்வதேச மீனவர் தினத்திலே எமது மக்களின் கோரிக்கைகளை சமர்ப்பிக்கின்றோம்.

1. இவ்வளவு காலமும் அகதி என்ற பெயருடன் அவதிப்பட்டு இடம் பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றம் செய்யப்பட்டதா? இவர்களது வாழ்வாதாரம் சிறக்க வழிவகை செய்யப்பட்டதா?. ஓலைக் குடிசைகளானாலும் வண்ணமாக அமைத்து வாழ்ந்த மீனவ இனம். இன்றோ தரப்பாளின் கீழும் மரநிழல்களின் கீழும் வாழும் நிலை தான் மீள்குடியேற்றமா?

2. இதுவரை தமது சொந்த இடங்களைப் பார்க்க முடியாத அந்த இடங்களுக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்ட மக்கள் தற்போதும் முகாம்களிலேயே வாழ்ந்து வருகின்றார்களே!
   இவர்களின் எதிர்காலம் முகாம் வாழ்க்கை தானா?

3. வடக்கு மாகாணத்திலேயுள்ள யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் எமது மக்களின் பூர்வீக வாழ்விடங்கள் எல்லாம் அபகரிக்கப்பட்டு அதில் வாழ்ந்தவர்கள் அகதிகளாக எதிலிகளாக வாழ்கிறார்களே! இவர்களின் வாழ்வியலில் மாறுதல் ஏற்படுமா?

4. எமது கடலிலே தொழில் செய்ய முடியாதளவிற்கு இந்தியன் இழுவைப் படகுகள் வகை வகையாக, தொகை தொகையாக எமது கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து அடாத்தான தொழில் வகை மூலம் எமது கடல் வளங்களை, எல்லாம் கொள்ளையிட்டு செல்கின்றார்களே! இவர்களை தடுப்பதற்கும் பிடிப்பதற்கும் தயக்கம் காட்டுவது ஏன்?

5. அயல் நாடாம் இந்தியா! இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலே எல்லை என்று ஒன்று உள்ளது. இந்த எல்லைகளைப் பாதுகாப்பது பாதுகாப்பு படையினரின் முக்கிய கடமை. இது இவ்வாறு இருக்கும் போது எல்லை மீறி உட்புகுந்து பல மில்லியன் ரூபா பெறுமதியான கடல்படு திரவியங்களை அள்ளிச் செல்லும்போது பாதுகாப்பது படையினரின் நடவடிக்கைகள் தான் என்ன?

6. வடபுலத்து மீனவர்கள் கடன்பட்டு தேடிய வலை உபகரணங்கள் எல்லாம் இந்திய இழுவைப் படகுகள் மூலம் அழிக்கப்பட்டு கோடிக்கணக்கான பெறுமதி வாய்ந்த தொழில் வகை எல்லாம் அழிவுற்ற போதிலும் மீண்டும் கடலிலே தொழில் செய்ய உதவுவது யார் தான்?

7. இதுமட்டுமா? தென்னிலங்கை மீனவர்கள் தாம் தாம் நினைத்த தொழில்களை எமது கடற்பரப்பில் செய்து வருகிறார்களே. இதனை தட்டிக் கேட்பது யார்?

8. குறித்த வடபுலத்து நான்கு மாவட்டங்களிலும் கரையோர இடங்களை எல்லாம் அபகரித்து கொட்டில்கள் அமைத்து தொழில் செய்து வருகிறார்களே! இதை எல்லாம் மறிப்பதற்கோ தட்டிக் கேட்பதற்கோ யார் இருக்கிறார்கள்?

9. இவ்வகையான நிலையிலே எமது மக்கள் தொழில் செய்வது எப்படி? இவர்களின் வாழ்வாதாரம் உயர உழைத்து சொந்தக் காலில் நிற்கும் நிலை எப்போது ஏற்படும்? கடலை நம்பி வாழும் கடலக மக்கள் கூலித்தொழில் செய்து வாழும் நிலை ஏற்பட்டுள்ளது இது ஞாயமா? இதுதான் மீனவனின் வாழ்வுரிமையா?

10. இந்த நிலையில் எமது கடல் வள மந்திரி அன்புக்குரியவர் மாண்புமிகு ராஜித சேனரத்தினா அவர்கள். எமது கடல் வளம் காப்பாற்றப்பட வேண்டும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நல்லெண்ண நோக்கில் எமது கடல் வளங்களை அழிக்கும் தொழில்கள் யாவையும் தடை செய்துள்ளார்.
1. முக்கூட்டு வலை
2. தங்கூசி வலை
3. சுருக்கு வலை
4. டைனமற் வைத்து மீன் பிடித்தல்
5. ஒளிபாச்சி மீன் பிடித்தல்.
6. இழுவைப்படகு மூலம் தொழில் செய்தல்.
7. இலை குழைகள் கட்டி கணவாய் அள்ளுதல்
     8. சிலிண்டர் பாவித்து மீன்பிடித்தல்.
 போன்ற தொழில் வகைகள் எல்லாம் எமது வளங்களைக் காப்பாற்றுவதற்காக தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கான சுற்று நிருபமும் வெளி வந்துள்ளது. கௌரவ அமைச்சர் அவர்களின் நல்லெண்ண நடவடிக்கையை உறுதியுடன் செயற்படுத்தும் ஆற்றல் திணைக்கள அதிகாரிகளிடத்தில் இல்லையே என்பதை எண்ணும் போது மிகவும் வேதனைப்படுகின்றோம்.

2014ம் ஆண்டு உலக மீனவ தினம் கொண்டாடும் போது எமது வடமாகாண கடற்பரப்பில் இரத்த வாடை வீசாத நாளை உருவாக்கி கவலையை களைந்து கண்ணீர் இல்லாத ஆண்டாக மலர
இன்றைய நாளில் எமது மக்களின் குறைகளை தீர்ப்பதற்கு கௌரவ ஜனாதிபதி அவர்களும் அமைச்சர்கள் மற்றும் பாராள மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளும் உறுதியான நடவடிக்கை எடுத்து கடலக மக்கள் நிம்மதியாக வாழ உழைத்து வாழ அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு பேரவையின் இனைப்பாளர் அ.சுனேஸ்.சோசை அன்போடு கேட்டு நிற்கின்றார்.  
உலக மீனவ தினத்தில் மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு பேரவையின் இனைப்பாளர் திரு.சுனேஸ் அவர்கள் விடுக்கும் ஊடக அறிக்கை(Video song) Reviewed by NEWMANNAR on November 21, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.