'எமது மண்ணில் சொந்தப் பிரதேசங்களை பார்வையிடும் உரிமை மறுக்கப்படுகிறது' இதுவா நல்லாட்சி? சுரேஷ் எம்.பி.
பாராளுமன்றத்தை முன் அறிவிப்பு இல்லாமல் அனைவரும் பார்வையிடுவதற்குஅனுமதியளிக்கப்பட்டுள்ளது . ஆனால் எமது மண்ணில் எமது சொந்தப் பிரதேசங்களை பார்வையிடும் உரிமை மறுக்கப்படுகின்றது . இதுவா நல்லாட்சி என சபையில் நேற்று முன்தினம் கேள்வியெழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள வடக்கிற்கு அரசியல் பின்னணியிலேயே போதைவஸ்து கொண்டு வரப்படுகிறது என்றும் குற்றம்சாட்டினார் .
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தெரிவுக்குழு அறிக்கை கலந்தாலோசித்தல் வரவு - செலவு திட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே கூட்டமைப்பு எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனை தெரிவித்தார் .
சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ,
இது வரைக்காலமும் பொதுமக்கள் பாராளுமன்றத்தை மற்றும் சபை நடவடிக்கைகளை பார்வையிட வேண்டுமானால் முன் அனுமதி பெற வேண்டும் .
இல்லாவிட்டால் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அனுமதிக்கடிதம் பெற வேண்டும் . இல்லாவிடில் பாராளுமன்றத்திற்குள் உள்ளிட முடியாது .
அதுமட்டுமல்லாது பாதுகாப்பு கெடுபிடிகளும் கடுமையாக இருந்தது .
ஆனால் இந்த நடைமுறைகள் அனைத்தையும் அண்மையில் நீக்கிய சபாநாயகர் முன் அனுமதியின்றி அனைவரும் பாராளுமன்றத்தை பார்வையிட முடியும் என்றும் பாதுகாப்பு கெடுபிடிகளையும் நீக்குவதாக சபாநாயகர் சபையில் தெரிவித்தார் .
பாராளுமன்றத்திற்கான முன்அனுமதி நீக்கப்பட்டுள்ளது . ஆனால் எமது மண்ணில் , எமது சொந்தப்பிரதேசங்களை பார்வையிடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இராணுவம் அனுமதியளிப்பதற்கு மறுக்கின்றது .
வலி . வடக்கில் 6800 ஏக்கர் மக்கள் வாழ்ந்த நிலங்களை ஆக்கிரமித்துள்ளது .
இது ஏறத்தாழ 35,000 மேல் மக்கள் வாழ்ந்த பிரதேசமாகும் .
இதனை ஆக்கிரமித்துள்ள இராணுவம் அங்கு மக்கள் வாழ்ந்த வீடுகளையும் , கோவில்களையும் , பாடசாலைகளையும் இடித்து தரைமட்டமாக்கியுள்ளது .
இதனை பார்வையிட நான் சென்றேன் . பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியி லேனும் அங்கு சென்று பார்வையிட இராணுவம் எனக்கு அணுமதி வழங்கவில்லை .
எனக்கு மட்டுமல்ல கூட்டமைப்பின் எந்தவொரு உறுப்பினரும் அங்கு செல்ல முடியாது .
அது மட்டுமல்ல வடமாகாண சபைக்கும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர் அங்கு சென்றார் . அவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது . இது தான் உண்மையான நிலை .
பாராளுமன்றத்தை பார்வையிடுவதற்கு உள்ள சுதந்திரம் கூட மக்கள் பிரதிநிதிகளான எமக்கு மறுக்கப்படுகிறது .
வடமாகாணத்தில் என்றும் இல்லாதவாறு போதைவஸ்துக்கள் வருவது அதிகரித்துள்ளன . அங்கு பாதுகாப்பு கடமைகளில் 150,000 இராணுவம் மற்றும் பொலிஸார் உட்பட உளவு பிரிவினர் பாதுகாப்பை வழங்குகின்றனர் .
இவ்வாறானதொரு நிலையில் அங்கு எப்படி போதை வஸ்துக்கள் வருகின்றன . இதன் பின்னணியில் அரசியல் உள்ளது எனவே அரசு இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் .
எமது கடற் பிரதேசத்தில் மீன் பிடிப்பதற்கு ஜப்பான் , சீனா உட்பட நாடுகளுக்கு அனுமதி பத்திரம் வழங்க அரசு தயாராக உள்ளதாம் . ஆனால் மயிலிட்டி மீனவர்கள் அங்கு இருந்து வேறு இடங்களில் குடியேற்றப்பட்டுள்ளனர் . தமது சொந்த இடத்தில் மீன் பிடிப்பது மறுக்கப்படுகின்றது .
மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் . சுதந்திரம் , ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் . தேர்தல்கள் , நீதிச் சேவை , அரச சேவை பொலிஸ் தேர்தல்கள் ஆணையகம் போன்றவற்றுக்கான சுயாதீன ஆணைக்குழுக்கள் இலங்கையில் நிறுவப்படவேண்டும் என வெளிநாடுகள் ஆலோசனைகளை வழங்குகின்றன . ஆனால் இவை அனைத்தும் அரசியல் மயப்படுத்தப்பட்டு ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது .
யுத்தத்தின் போது காணாமல் போனோர் சரணடைந்தோர் , வெள்ளை வேன்களில் கடத்தப்பட்டோர் தொடர்பிலும் தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டுமென்றும் கனடா , அமெரிக்கா , பிரிட்டன் உட்பட பல்வேறு நாடுகள் வலியுறுத்துகின்றன . ஆனால் இது வரையிலும் எதுவுமே இடம்பெறவில்லை .
யுத்தம் முடிந்து நான்கு வருடங்கள் கழிந்த பின்னர் வடக்கில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டது . இதில் 83 வீதமான வாக்குகளை தமிழ் மக்கள் கூட்டமைப்பு வழங்கி வெற்றி பெற செய்ததோடு 30 ஆசனங்களும் கைப்பற்றப்பட்டன . முதலமைச்சரும் பதவியேற்றார் ஆனால் அரசியல் அமைப்பின் பிரகாரம் பிரதம செயலாளரும் அம்மாகாணத்திற்கான சிரேஷ்்ட பொலிஸ் அத்தியட்சகரும் முதலமைச்சரின் இணக்கப்பாட்டுடனேயே அப்பதவிகளுக்கு நியமிக்கப்படவேண்டும் .
ஆனால் அரசியல் அமைப்பு மீறி சட்டங்கள் மீறி இப்பதவி நியமனங்கள் இடம்பெற்றன . யுத்தத்தில் இடம்பெயர்ந்த அனைவரும் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர் என அரசாங்கம் பிரசாரம் செய்கிறது . ஆனால் இன்றும் மக்கள் அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர் . இவ்வாறான சூழ்நிலைகளில் நாட்டில் நல்லாட்சி நிகழ்வதாக எப்படி கூற முடியும் என்றார் .
'எமது மண்ணில் சொந்தப் பிரதேசங்களை பார்வையிடும் உரிமை மறுக்கப்படுகிறது' இதுவா நல்லாட்சி? சுரேஷ் எம்.பி.
Reviewed by Admin
on
December 20, 2013
Rating:
Reviewed by Admin
on
December 20, 2013
Rating:


No comments:
Post a Comment