அண்மைய செய்திகள்

recent
-

முதலமைச்சர் விக்னேஸ்வரனை வன்னி உதவி ஆசிரியர் ஒன்றியம் சந்திப்பு

வன்னி ஆசிரிய உதவியாளர்கள் இவ்வருடமே தம்மையும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலைக்கு உள்ளீர்க்குமாறும், தமது சம்பளத்தை அதிகரித்து வழங்க ஆவன செய்யுமாறும்கோரி வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்து மகஜர் கையளித்துள்ளார்கள்.

மேற்படி கோரிக்கைகள் அடங்கிய மகஜரை வன்னி உதவி ஆசிரியர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் உட்பட்டோர் நேற்று முன்தினம் முதலமைச்சரின் நல்லூரிலுள்ள அலுவலகத்திற்குச் சென்று நேரில் சந்தித்து கையளித்துள்ளார்கள்.

வன்னி ஆசிரிய உதவியாளர்களின் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தில் குறிப்பிடப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,

வன்னிப் பகுதி பாடசாலைகளில் எவ்வித கொடுப்பனவும் இன்றி நீண்டகாலமாக சேவையாற்றி ஆசிரியர் நியமனம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த எமக்கு ஆசிரிய உதவியாளர் என்கின்ற நியமனம் கடந்த 01.07.2013 இல் இருந்து கடமையேற்கும் படியாக வழங்கப்பட்டது.

எமக்கு வழங்கப்பட்ட ஆசிரிய உதவியாளர் நியமனக் கடிதத்தில் குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் ஆசிரிய கலாசாலைப் பயிற்சியைப் பூர்த்தி செய்த பின்னரே ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என்றுள்ளது.

ஆசிரிய பயிற்சி கலாசாலையில் 2014ம் ஆண்டில் பயிற்சி பெறுவதற்கு மிக மிக குறைவான ஆசிரியர்கள் (கோப்பாய் ஆசிரிய பயிற்சி கலாசாலையில் 15 பேர் மட்டுமே தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்) காணப்படுகின்ற போதிலும் வன்னி ஆசிரிய உதவியாளர்களாகிய எம்மை ஆசிரிய பயிற்சி கலாசாலைக்கு அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் எவையுமே இதுவரை மேற்கொள்ளப்படாதுள்ளது.

கடந்த 2009 ம் ஆண்டு வடக்கு மாகாணத்தில் உள்ள தொண்டர் ஆசிரியர்களுக்கு ஆசிரிய உதவியாளர் நியமனம் வழங்கப்பட்டபோது கிளிநொச்சி, முல்லைத்தீவு, துணுக்காய், வவுனியா வடக்கு, மடு, வடமராட்சி கிழக்கு ஆகிய ஆறு கல்வி வலயங்களையும் சேர்ந்தவர்களாகிய நாம் மட்டுமேதான் புறக்கணித்து ஒதுக்கப்பட்டிருந்தோம்.

2009 ம் ஆண்டு ஆசிரிய உதவியாளர்களாக நியமனம் பெற்றவர்கள் இப்போது ஆசிரிய பயிற்சிக் கலாசாலைப் பயிற்சிகளை முடித்து ஆசிரியர்களாக நியமனம் பெறவுள்ளார்கள். ஆனால் வன்னி யுத்தத்தாலும் பாதிக்கப்பட்ட நாம் மட்டும்தான் தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றோம்.

நாம் வன்னிப் பகுதியில் உள்ள வசதி வாய்ப்புக்கள் அற்ற பின் தங்கிய பிரதேச பாடசாலைகளில் யுத்தகாலம் உட்பட 13,14 வருடங்களுக்கு மேலாக எவ்வித கொடுப்பனவும் இன்றி தொண்டராசிரியர்களாகச் சேவையாற்றிய நிலையிலும் நீண்ட காலத்தின் பின் ஆசிரிய உதவியாளர் என்னும் நியமனமே வழங்கப்பட்டுள்ளது.

எமது முழுநேர சேவைக்கான சம்பளமாக ரூபா 6000 மட்டுமேதான் வழங்கப்படுகின்றது. குடும்ப பொறுப்புடையவர்களான நாம் இச்சம்பளத்தைப் பெற்று வாழ்க்கைச் செலவுகளை ஈடுசெய்ய முடியாது பெரும் துன்பப் படுகின்றோம்.

எனவே எமது நிலையினை கருத்தில் கொண்டு எம்மையும் இந்த வருடமே ஆசிரிய பயிற்சி கலாசாலையில் பயிற்சி பெறுவதற்கு ஏற்ற நடவடிக்கையை எடுத்து உதவுவதுடன், எமக்கான சம்பளத்தையும் அதிகரித்து வழங்குவதற்கு ஆவன செய்யுமாறு மிகுந்த எதிர்பார்ப்புக்களுடனும் எமக்கும் உதவுவீர்கள் என்ற நம்பிக்கையுடனும் தங்களை கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மகஜரைக் கையளித்த வன்னி ஒன்றியத்தினர் குறிப்பிடுகையில்,

வடமாகாண முதலமைச்சரைச் சந்தித்து தமது கோரிக்கைகள் அடக்கிய மகஜரைக் கையளித்து தமது கோரிக்கைகளை முன்வைத்த போது முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மிகுந்த கவனத்தோடு கேட்டதாகவும் அவர் கூறிய வார்த்தைகள் தமக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தமக்கு உதவுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்கள்.

மேற்படி கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தினை வடமாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, வடமாகாண சபை உறுப்பினர்களான ப.கஜதீபன், ப.அரியரத்தினம், து.ரவிகரன், அன்ரனி ஜெகநாதன், எம்.கே.சிவாஜிலிங்கம், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகின்றது.


முதலமைச்சர் விக்னேஸ்வரனை வன்னி உதவி ஆசிரியர் ஒன்றியம் சந்திப்பு Reviewed by NEWMANNAR on January 26, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.