அண்மைய செய்திகள்

recent
-

தேசிய அரசாங்கம் அல்ல: அரசியல் பரவலாக்கத்தையே கேட்கிறோம் - கூட்டமைப்பு

இலங்கையில் தேசிய அரசாங்கத்தை நாம் பிடிக்க முடியாது என்பது எமக்கும் தெரியும் எனினும் நாம் ஒருபோதும் அதனைக் கேட்கவுமில்லை. அரசியல் பரவலாக்கத்தினைத் தான் கேட்கின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார். 


திருப்பழுகாமம் இந்து கலா மன்றம் நடாத்திய பொங்கல் விழாவும் இந்து கலாமன்ற அறநெறிப்பாடசாலையின் பரிசளிப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 

மட்டக்களப்பு திருப்பழுகாமம் திரௌபதையம்மன் ஆலய முன்றலில் திருப்பழுகாமம் இந்து கலா மன்றத்தின் தலைவர் எஸ்.குகன் தலைமையில் கடந்த (25) இடம்பெற்ற இந் நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர், 

இக்கால கட்டத்தில் எவரும் பொங்கல் திருநாளின்போது புது அரிசியில் பொங்கல் பொங்கவில்லை. ஏனெனில் உரிய நேரத்தில் அறுவடை பெறப்படவில்லை. உரிய நேரத்தில் அறுவடை பெற வேண்டுமானால் உரிய மழை கிடைக்க வேண்டும். அதுவும் இல்லை ஏனேனில் எமது பிரதேசத்தைப் பொறுத்த மட்டில் பெருமளவில் இருந்த காடுகள் தற்போது இல்லை. இதனாலேயே பருவங்கள் பொய்க்கின்றது. காடுகள் அழிக்கப்படுகின்றன. காடுகள் இருந்தல் அறுவடைகள் உரிய நேரத்தில் கிடைக்கும். 

எமது நாட்டில் தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கின்றர்களோ அங்கெல்லாம் காடுகள் அழிக்கப்படுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் 20 வீதமாக இருந்த காடுகள் தற்போது 08 வீதமாகவே காணப்படுகின்றன. 

எமது பிரதேச காடுகளை அழித்த வெளி மாவட்டத்து மக்கள் அத்துமீறிய குடியேற்றங்ளும் பயிர்ச்செய்கைகளையும் மேற்கொள்கின்றனர். அதனைத் தடுப்பதற்கு அதிகாரிகளோ அரசியல்வாதிகளோ அங்கு செல்ல முடியாத நிலை. இவ்வாறான நிலையின் போது எமது தமிழ் தேசிய கூட்டமைப்பு இதனைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. 

எமது கெவிளியாமடு பிரதேசத்தில் அத்துமீறிய குடியேற்றங்களை அகற்றுவதற்கு சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இன்று எம் தமிழர் வாழ்வில் நடப்பது என்ன கிழக்கு மாகாண சபையில் ஒரு தமிழருக்கு நியமனம் வழங்குவது கூட கடினமாக இருக்கின்றது. 

ஒரு நியமனத்தின் போது திருகோணமலை மாவட்டத்தில் அந்த நியமனத்திற்கு தமிழர்கள் அதிகம் இருக்கின்றார்கள் என்று தெரிவித்து மற்ற இன மக்களுக்கே நேர்முகப் பரீட்சை நடக்கின்றது. தமிழர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இதற்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபையில் பிரேரணை ஒன்றையும் சமர்ப்பிக்க இருக்கின்றோம். 

இதற்கு முடிவு எட்டப்படாதவிடத்து நீதிமன்றம் வரையும் செல்லவும் தயாராக இருக்கின்றோம். எமது தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுவதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இக்காலத்தில் அரசினை ஆதரிக்கும் தமிழ் அரசியல் வாதிகளும் எதனையும் செய்கின்றார்கள் இல்லை. 

வெறுமனே அபிவிருத்தி அபிவிருத்தி என்கிறார்கள் வெறுமனே உட்கட்டமைப்புகளை மாத்திரம் கட்டியெழுப்பிவிட்டு அதனை அபிவிருத்தி என்று கூறுவதில் எதுவித அர்த்தமும் இல்லை. நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல எமது காணிக்குள் அத்துமீறி குடியேறுபவர்களை தடுப்பதும் ஒரு அபிவிருத்தி தான் எமது தமிழ் மக்களை உரிய நியமனத்திற்கு உட்படுத்துவதும் அபிவிருத்திதான். இவ்வாறான உரிமைகளைத் தான் நாம் கேட்கின்றோம். 

இங்கு என்ன நடக்கின்றது ஒரு தைப்பொங்கல் விழாவினைக் கூட நாம் சுதந்திரமாக மேற்கொள்ள முடியவில்லை இங்கு நாம் என்ன பேசுகின்றோம் என்பதை கேட்பதற்கு அதனை ஒலிப்பதிவு செய்வதற்கு சி.ஐ.டி யினர் குழுமியிருக்கின்றனர். 

இங்கு நாம் வரும் போது கூறப்பட்டது அரசியல் பேச வேண்டாம் என்றனர். இங்கு அரசியல் பேச வரவில்லை எமது கடமையைத் தான் செய்கின்றோம். இக்கடமையைச் செய்வதற்கு தான் எமது மக்கள் எம்மைத் தெரிவு செய்துள்ளனர். 

தமிழர்களின் அபிலாசைகள் தீர்க்கப்படும் வரை தமிழ்மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினை ஆதரித்துக் கொண்டுதான் இருப்பார்கள். 2010ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்ட தமிழர்களை விட வேறு எவரும் வடகிழக்கில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படவில்லை இது போலவே கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலும் எமது தமிழ் தேசிய கூட்டமைப்பில் போடடியிட்டவர்களே தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டனர். 

வடக்கு மாகாணசபைத் தேர்தலிலும் இது போலவே 30க்கும் மேற்பட்ட மாகாணசபை ஆசனங்களைக் கைப்பற்றினர். இது போல் தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினை ஆதரிக்கின்றார்கள் என்றால் தமிழர்களின் அபிலாசைகள் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்றே அர்த்தம் இவ்வாறு ஒரு பொங்கல் விழாவைச் செய்வதற்கு கூட சுதந்திரம் இல்லாமல் சி.ஐ.டியினர் குவிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்றால் எமது நிலைமையை எவ்வாறு சொல்வது. 

இதனை எமது தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். எமக்கும் ஜதார்த்தம் தெரியும் இலங்கையில் தேசிய அரசாங்கத்தை நாம் பிடிக்க முடியாது என்பது எமக்கும் தெரியும் எனினும் நாம் ஒருபோதும் அதனைக் கேட்கவில்லை. அரசியல் பரவலாக்கத்தினைத் தான் கேட்கின்றோம். 

போர் முடிவுற்று 06 வருடங்கள் முடிவுற்றும் எமது மக்களை எமது பிரதிநிதிகளை இந்த அரசாங்கம் மேலும் மேலும் பிரச்சனைகளுக்குள் தள்ளுகின்றது எனவே மக்களாகிய நாம் நன்றாக சிந்திக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பாக்கியசெல்வம் அரியநேத்திரன், சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோரும் மற்றும் ஆன்மீக அதிதியாக போரைதீவு பத்திரகாளியம்மன் ஆலய பிரதம குருக்கள் விஸ்வ பிரம்மம் வை.இ.எஸ்.காந்தன் குருக்களும் ஏனைய அதிதிகளாக தமி;ழ் தேசிய கூடடமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா துரைரெட்ணம் ஞா.கிருஸ்ணபிள்ளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை வேட்பாளர் வி.ஆர்.மகேந்திரன் ஆகியோரும் மற்றும் கிரம பிரமுகர்களும் பொதுமக்களுமாக பலர் கலந்து கொண்டனர். 

இதன் போது திருப்பழுகாமம் இந்து கலாமன்ற அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் மாணவர்களுக்கான பரிசளிப்பும் மற்றும் அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றதுடன் கவியரங்கமும் இடம்பெற்றது. அத்துடன் கலா மன்றத்தின் சிரேஸ்ட உறுப்பினர்கள் மூவருக்கான கௌரவிப்பும் இடம்பெற்றது. 
தேசிய அரசாங்கம் அல்ல: அரசியல் பரவலாக்கத்தையே கேட்கிறோம் - கூட்டமைப்பு Reviewed by Author on January 27, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.