வட மாகாணத்தில் இடைவிலகும் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு.
நாட்டில் நடைபெற்று முடிந்த யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள வட புலத்தின் எதிர்கால அபிவிருத்திக்குப் பாதகமான விளைவுகளை கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலைகளை பொருளாதார அழுத்தங்களும் எதிர்காலப் பலன்கிட்டாத நிலையும் உருவாக்கிவரும் நிலையில் மேற்படி பிரதேச த்தில் பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்கள் பாடசாலைகளிலிருந்து இடைவிலகி வருவதான அதிகரித்த செய்திகள் குறித்து இலங்கை அரச அதிகாரிகள் கவலை அடைந்திருப்பதாக ஐரின் செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது .
இது குறித்த மேற்படி செய்திச் சேவை மேலும் குறிப்பிட்டுள்ளதாவது , தசாப்த காலமாக இடம்பெற்று வந்த உள்நாட்டு யுத்தம் முடிவுற்று ஏறக்குறைய ஐந்து வருடங்கள் பூர்த்தியாகிய நிலையில் வழங்கப்பட்டுவந்த மனிதாபிமான உதவிகள் குறைந்து வருவதனால் சொல்லொண்ணாத் துயரங்களுக்கு முகம் கொடுத்துவரும் ஏழைக்குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர் சிறுமியரே இவ்வாறு அதிகளவில் இடைவிலகியுள்ளனர் . போதிய வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுமே நிலைமையை இன்னும் மோசமடைய வைத்து வருகின்றது . இது குறித்து வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சிவலிங்கம் சத்தியசீலன் ஐரின் செய்திச் சேவைக்கு தகவல் தருகையில் இத்தகைய நிலைக்கு பிரதான காரணம் வேலை வாய்ப்புக்கள் இன்மையே . இந்தக்குடும்பங்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர் எந்த வேலையையும் செய்யக்கூடிய அவர்களை அற்ப சொற்ப வேலைகளையோ அல்லது விவசாய வேலைகளையோ சுலபமாகச் செய்து கொள்ள முடியும் . ஆயினும் போதிய வேலைவாய்ப்பின்மையால் இந்தக்குடும்பங்களைச் சேர்ந்த சிறார்கள் தங்களின் இளம் பிராயத்திலேயே அழுத்தங்களுக்குள்ளாகி வருவதுடன் அதிகளவில் இடைநிலைப் பாடசாலை மட்டத்தில் உள்ளோர் இத்தகைய இடை விலகலுக்கு உள்ளாகி வருகின்றனர் என தெரிவித்தார் .
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனும் இவ்வாறான இடை விலகல் அதிகரித்து வருவதனை ஒப்புக் கொண்டுள்ளதுடன் 40000 விதவைப் பெண்களை குடும்பத் தலைவிகளாகக் கொண்டுள்ள குடும்பங்கள் அல்லது வலது குறைந்தோர் கொண்டுள்ள குடும்பங்கள் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் சில வேளைகளில் மேற்படி பாடசாலை செல்லும் சிறுவர்கள் குடும்பத்தைக் கவனிக்கவென எவருமேயில்லாத நிலையில் கூலித்தொழில் செய்ய வேண்டிய பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார் .
சர்வதேச தொழில் ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இத்தகைய சிறுவர் சிறுமியர் பொதுவாக கட்டட நிர்மாண செயற்றிட்டங்களின் அல்லது பண்ணைகளில் உள்ள திறன் பெற்றிராத தொழிலாளர்கள் போன்ற தற்காலிக பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இது குறித்து மேற்படி ஸ்தாபன தேசிய செயற்றிட்ட ஒருங்கிணைப்பாளர் இராமலிங்கம் சிவப்பிரகாசம் தெரிவிக்கையில் இத்தகைய சிறுவர்கள் வேலை தேடி அங்குமிங்குமாக அலைந்து திரிவதுடன் அவர்களில் சிலர் நாளொன்றுக்கு 1.25 அமெரிக்க டொலர் சம்பளத்தில்கூட வேலை செய்து வருவதாகவும் கவலையுடன் குறிப்பிட்டார் .
யுனிசெப் நிறுவனத்தில் கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையொன்றின் பிரகாரம் பங்களாதேஷ் , இந்தியா , பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நான்கு நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது இலங்கையில் அனைத்து ஆரம்ப கீழ் மற்றும் இடைநிலைப் பாடசாலைக்குச் செல்லும் வயதுடைய 0.07 சதவீதமானோர் பாடசாலைக்குச் செல்வதில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கது . எவ்வாறாயினும் இறுதி யுத்தம் நடைபெற்ற யாழ்ப்பாணம் , மன்னார் , கிளிநொச்சி , முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்கள் மேற்படி ஆய்வில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது .
வட மாகாணத்தில் இடைவிலகும் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு.
Reviewed by NEWMANNAR
on
February 12, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment