சர்வதேசம் காத்திரமான செயற்பாட்டை உடனடியாக முன்னெடுக்க வேண்டும்: சுரேஸ்

13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி தயாரில்லையென அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளமை தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எந்த அதிகாரத்தையும் வழங்கத் தயாராக இல்லையென தமிழ் மக்கள் நீண்ட காலமாகவே தெரிவித்து வந்துள்ளார்கள். இதனை கூட்டமைப்பினராகிய நாமும் பொருத்தமான தருணங்களில் சுட்டிக்காட்ட தவறியிருக்கவில்லை. அதனடிப்படையில் அரசாங்கத்தின் நீண்ட கால நிலைப்பாட்டை அதிலுள்ள அமைச்சர் ஒருவரே வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதியும் அரசாங்கமும் இந்தியாவையும் ஐக்கிய நாடுகள் சபையையும் திருப்திப்படுத்துவதற்காக 13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகவும் அதற்கு மேல் (13பிளஸ்) செல்வதாகவும் வாக்குறுதி அளித்திருக்கின்றனர். ஆனால் அதனை செயற்படுத்துவதற்கு அவர்கள் என்றுமே தயாராகவில்லை. அதற்குரிய ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை.
ஜனாதிபதி என்பவர் அரசியல் சாசனத்தில் காணப்படும் சட்டத்தினையே முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என மறுதலிக்கக் கூடியவராக காணப்படுகின்றார். ஆகவே இவ்வாறான ஒருவரின் தலைமையில் காணப்படும் அரசிடமிருந்து இனப்பிரச்சினைக்கான தீர்வை எதிர்பார்க்க முடியாது.
மாகாண சபை முறைமை என்பது சிறுபான்மை மக்களுக்கான பிரச்சினைகளுக்கோ அல்லது இனப்பிரச்சினைக்கான தீர்வாகவோ என்றுமே அமைந்து விடப்போவதில்லையென நாம் பல தடவைகள் கூறியிருந்தும் சிறுபான்மை மக்களுக்காக எந்தவொரு அதிகாரங்களுமே சென்றுவிடக்கூடாது என்றே அரசாங்கம் கருதுகின்றது.
அவ்வாறான நிலையில் இந்தியாவும் சர்வதேசமும் ஜனாதிபதியும் அரசாங்கமும் விரும்பினால் இப்பிரச்சினை தீர்க்க முடியும். 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தீர்வு குறித்து இரு தரப்பினரும் ஆராய வேண்டும் போன்ற இழுபறியான கருத்துக்களைக் கூறிக்கொண்டிருக்காது காத்திரமான செயற்பாடுகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும். அரசியல் சாசனத்தில் கூறப்பட்டிருக்கும் விடயங்களை நடைமுறைப்படுத்த உடனடியாக அரசாங்கத்தினை வலியுறுத்த வேண்டும்.
இந்தியாவும் சர்வதேசமும் அவ்வாறானதொரு காத்திரமான செயற்பாட்டை முன்னெடுப்பதனூடாகவே தமிழர்கள் தலை நிமிர்ந்து சுதந்திரமாகவும் கௌரவமாகவும் பாதுகாப்பாகவும் தாயாக பிரதேசங்களில் வாழ முடியும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கான நியாய பூர்வமான விடயங்களையே தமிழ் மக்கள் இந்தியா சர்வதேசத்திடமிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேசம் காத்திரமான செயற்பாட்டை உடனடியாக முன்னெடுக்க வேண்டும்: சுரேஸ்
Reviewed by Author
on
February 17, 2014
Rating:

No comments:
Post a Comment