பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கடிதம்
கிளிநொச்சி பொதுச்சந்தையில் கடந்த புதன்கிழமை(26) செய்தி சேகரிப்பதற்காக சென்ற பிராந்திய செய்தியாளர் ஒருவர் மீது கரைச்சி பிரதேச சபை பணியாளர் ஒருவர் தாக்குதல் நடத்தியதுடன் குறித்த செய்தியாளரின் புகைப்படக் கருவிகளையும் அடித்து நொருக்கியமை தொடர்பில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை தலைவர் மற்றும் செயலாளரினால் 'அடிப்படை உரிமை மீறல் தொடர்பானது' என்ற தலைப்பின் கீழ் கடிதம் ஒன்று கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு வியாழக்கிழமை(27) அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
'கடந்த புதன்கிழமை(26) எமது பிரதேச சபைக்குச் சொந்தமான கிளிநொச்சி பொதுச்சந்தையில் 2013ஆம் ஆண்டுக்கான இடவாடகை, மின்சாரக்கட்டணம், வியாபார உரிமைக்கட்டணங்கள் செலுத்தாத கடைகளை மூடும் நடவடிக்கையில் எமது உத்தியோகத்தர்களான பொ.இராஐசிங்கம், செ.அசந்தன், பொ.றஜீஸ் குமார்குமார் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
அவ்வேளை அவர்களின் செயற்பாடுகள் தொடர்பாக இரகசியமான முறையில் ஒருவர் ஒளிப்பதிவு செய்ததை அறிந்த எமது உத்தியோகத்தர்கள் அவரிடம் அவ்விடயம் தொடர்பாக வினவிய போது, குறித்த நபர் தன்னை யாரென அறிமுகம் செய்யாது, 'தாங்கள் யாரிடம் கேட்க வேண்டும்? எதற்கு கேட்க வேண்டும்?' என பல கேள்விகளைத் தொடுத்து அரசியல் ரீதியாக அச்சுறுத்தும் வகையிலும் தகாத வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தினார்கள்.
அதற்கு எமது உத்தியோகத்தர்கள் எமது பிரதேச சபைத் தலைவரிடம் செயலாளரிடம் கடைகளை மூடும் நடவடிக்கை தொடர்பாக கேட்குமாறு கூறியபோதும் அதனைப் பொருட்படுத்தாது தனது செயற்பாட்டை தொடர்ந்த வண்ணம் இருந்த போது எமது ஒரு உத்தியோகத்தர் ஒளிப்பதிவு செய்வதை தனது கையினால் மறைக்க முற்பட்டுள்ளார்.
மேலும் இது இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அடிப்படை மனித உரிமை மீறலான செயல் என்பதுடன் ஆட்புல நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் செயலுமாகும். இது இவ்வாறு நடைபெறும் போது பிறிதொரு நிறுவன ஊடகவியலாளர் தம்மை அடையாளப்படுத்தி தங்கள் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இது ஊடக தர்மத்தின்; நேர்த்தியான செயலாகும்.
தொடர்ந்து குறித்த செய்தியாளருடைய ஊடகம் உண்மைக்கு புறம்பான வகையில் ஊடக தர்மத்தின் நடுவுநிலைமை தவறி எமது பக்க நியாயங்களை தெரிவிக்காது தமது கிளிநொச்சி பிராந்திய செய்தியாளர் கரைச்சிப் பிரதேச சபை உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்டதாகவும் புகைப்படக்கருவி சேதமாக்கப்பட்டதாகவும் தங்கள் ஊடகத்தில் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகின்றமையை செவி வழியாகவும் கண்ணூடாகவும் அறிய முடிகின்றது.
இது எமது உத்தியோகத்தர்களின் சுய கௌரவத்திற்கு பங்கம் விளைவித்ததுடன் பெரும் மன உளைச்சலுக்கும் ஆளாக்கியுள்ளது.
சட்டக்கோவை 314 இன் பிரகாரம் மேற்படி செய்திச் சேவை மீதும் குறித்த நபரின் மீதும் பொருத்தமான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு' அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட செய்தியாளரால் 26 ஆம் திகதியே கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கடிதம்
Reviewed by NEWMANNAR
on
March 29, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
March 29, 2014
Rating:


No comments:
Post a Comment