மலேஷிய விமானத்தில் இருந்த 295 பேரும் உயிரிழப்பு
தமது விமானத்தை சுட்டு வீழ்த்தியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென மலேஷிய பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
தமது விமானத்துக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் மலேஷிய பிரதமர் நஜீப் ரசாக் கோரியுள்ளார்
இந்த வருடம் தமது நாட்டுக்கு ஓர் துயரமான வருடமாக அமைந்துள்ள நிலையில் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் இந்த நாளை சோகமான ஒருநாள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்..
இதேவேளை குறித்த விமான விபத்து தொடர்பில் முழுமையான விசாரணை மேற்கொள்ளவுள்ள தமது குழுவிற்கு யுக்ரைன் ஒத்துழைப்புக்களை வழங்க உறுதியளித்துள்ளதாக அமெரிக்க உப ஜனாதிபதி தெரவித்துள்ளார்
நேற்றைய தினம் 280 பயணிகள் மற்றும் 15 ஊழியர்களுடன் பயணித்த எம் எச் 17 என்ற போயிங் 777 ரக மலேஷிய விமானம் யுக்ரைனின் கிழக்குப் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது
அமஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூர் நோக்கி பயணித்த இந்த விமானம் மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மலேஷிய விமானம் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டறையுடனான தொடர்பை இழந்துள்ளதாக அதிகாரிகள் தெரவிக்கின்றனர்
இந்த தாக்குதல் தொடர்பில் யுக்ரைன் கிளர்ச்சியாளர்களும் அரசாங்கமும் பரஸ்பர குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்
விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டமையானது ஒரு தீவிரவாத செயல் என யுக்ரைன் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை எம் எச் 17 விமானம் யுக்ரைன் படையினராலேயே சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டுக் கிளர்ச்சிக்குழுவின் தலைவர் தெரவித்துள்ளார்
இந்த விமானம் மீதான தாக்குதலில் ரஷ்ய உளவாளிகள் இருவருக்கு தொடர்புள்ளதாக யுக்ரைனிய பாதுகாப்பு தலைமை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்
குறித்த விமானத்தில் 154 நெதர்லாந்து நாட்டவர்களும் 27 அவுஸ்திரேலியர்களும் 23 மலேஷியர்களும் 11 இந்தோனிஷியர்களும் பயணித்துள்ளதாக மலேஷிய விமான சேவைகள் நிறுவனம் குறிப்பிடுகின்றது
மேலும் 14 ஐரோப்பியர்கள் 3 பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் மற்றும் ஒரு கனேடிய பிரஜையும் குறித்த விமானத்தில் பயணித்துள்ளதாக தெரவிக்கப்படுகிறது
இந்த விமானத்தில் பயணித்த 295 பேரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரவிக்கின்றன
இதுவரை 100 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக யுக்ரைனிய அதிகாரிகள் தெரவிக்கின்றனர்
யுக்ரைனிய வான்பரப்பில் நிகழ்ந்த இந்த சம்பவத்திற்கு அந்த நாட்டு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டுமென ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரவித்துள்ளார்
இதேவேளை ரஷ்யா மீது மேலதிக தடைகளை விதிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா குறிப்பிட்டுள்ளார்
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐநாவின் பாதுகாப்பு பேரவை கூடவுள்ளதாக ஐநா செயலாளர் நாயகம் பான்கீ மூன் தெரவித்துள்ளார்
கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி காணாமல்போன எம் எச் 370 விமானத்திற்கு என்ன நேர்ந்தது என்பது புதிராக தொடரும் நிலையில் மற்றுமொரு மலேஷிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மலேஷிய விமானத்தில் இருந்த 295 பேரும் உயிரிழப்பு
Reviewed by NEWMANNAR
on
July 18, 2014
Rating:

No comments:
Post a Comment