பிரித்தானிய பிரஜை கொலை வழக்கு; குற்றவாளிக்கு 20 வருட கடூழிய சிறை
பிரித்தானிய பிரஜையான குர்ராம் ஷேய்க் கொலை தொடர்பில் நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக காணப்பட்ட தங்காலை பிரதேச சபையின் தலைவராக செயற்பட்ட சம்பத் விதான பதிரண உட்பட நால்வருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரோஹிணி வல்கம குற்றவாளிகளுக்கு தண்டனையை அறிவித்தார்.
இந்த வழக்கின் 5ஆம் மற்றும் 6ஆம் பிரதிவாதிகளை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்து நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
இதுதவிர பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட ரஷ்ய யுவதிக்கு மூன்று மில்லியன் ரூபா இழப்பீடு செலுத்துமாறும் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
கொலை செய்தமை மற்றும் யுவதியை குழுவாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியமை உள்ளிட்ட 17 குற்றச்சாட்டுகள் பிரதிவாதிகள் மீது சுமத்தப்பட்டிருந்ததுடன், 33 தவணைகளாக இந்த வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
2011 ஆம் ஆண்டில் தங்காலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பிரித்தானிய பிரஜையான குர்ராம் ஷெய்க்கை கொலை செய்தமை மற்றும் அவரின் காதலியான ரஷ்ய யுவதியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியமை தொடர்பில் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தங்காலையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் திகதி பிரித்தானிய பிரஜையான குராம் ஷேய்க் கொலை செய்யப்பட்டு, அவரது காதலியான ரஷ்ய யுவதிக்கு காணம் ஏற்படுத்தியமை தொடர்பில் தங்காலை பிரதேச சபைத் தலைவரும், மற்றுமொருவரும் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததன் பின்னர், 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பில் தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் பிரதிவாதிகள் 8 பேருக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்றது.
இதன்போது இரண்டு பிரதிவாதிகள் விடுதலை செய்யப்பட்டதுடன், 6 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மாஅதிபரின் விசேட அதிகாரங்களின் பிரகாரம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் தங்காலை பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட 6 பிரதிவாதிகளுக்கும் எதிராக 17 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்ததோடு, கொலை குற்றச்சாட்டு தவிர, கொலை செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜையின் காதலியை குழுவாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தங்காலை பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட 6 பேர், 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்ரமசிங்கவினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
பின்னர் பிணை பத்திரத்தில் கையொப்பமிட கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு வருகை தராத காரணத்தினால், தங்காலை பிரதேச சபைத் தலைவராக கடமையாற்றிய விதான பதிரணவை உடனடியாக கைது செய்யுமாறு கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.
பின்னர் கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் திகதி இரவு தங்காலை பிரதேச சபைத் தலைவர் கைது செய்யப்பட்டதுடன், 22 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் மார்ச் 26 ஆம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
குராம் ஷேய்க்கை கொலை செய்து அவரின் காதலியான விக்டோரியாவை குழுவாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக தங்காலை பிரதேச சபைத் தலைவர் சம்பத் விதான பதிரண உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைகள் கடந்த சில மாதங்களாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரோஹினி வல்கம முன்னிலையில் இடம்பெற்று வந்தன.
பிரித்தானிய பிரஜை கொலை வழக்கு; குற்றவாளிக்கு 20 வருட கடூழிய சிறை
Reviewed by NEWMANNAR
on
July 18, 2014
Rating:

No comments:
Post a Comment