அண்மைய செய்திகள்

recent
-

ஆபிரகாம் லிங்கன் எழுதிய புகழ் பெற்ற கடிதம்

அனைத்து மனிதர்களும் நேர்மையானவர்கள் அல்ல, அனைத்து மனிதர்களும் உண்மையானவர்கள் அல்ல என்பதை எனது மகன் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆனாலும், மனிதர்களில் அயோக்கியர்களுக்கு இடையில் உண்மையான கதாநாயகர்களும் இருக்கிறார்கள் என்பதையும், சுயநல  அரசியல்வாதிகளுக்கு இடையில் அர்ப்பணிப்பு மிக்க தலைவர்களும் இருக்கிறார்கள் என்பதையும் பகைவர்களுக்கு இடையில் நண்பர்களும் இருக்கிறார்கள் என்பதையும் அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.
அவனுக்குப் பொறாமைக் குணம் வந்துவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.
மௌனமாக ரசித்துச் சிரிப்பதன் ரகசியத்தை அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். எதற்கெடுத்தாலும் பயந்து சுருங்கிக்கொள்வது கோழைத்தனம் என்பதைப் புரியவையுங்கள்.
புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்குத் திறந்து காட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.
வானில் பறக்கும் பறவைகளின் புதிர் மிகுந்த அழகையும், சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் வேகத்தையும் பசுமையான மலை அடிவார மலர்களின் வனப்பையும் ரசிப்பதற்கும் அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.
ஏமாற்றுவதைவிடவும் தோல்வியடைவது எவ்வளவோ மேலானது என்பதைப் பள்ளியில் அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். மற்றவர்கள் தவறு என்று விமர்சித்தாலும், தனது சுயசிந்தனை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.
மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டு குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுகுவதற்கு அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.
கும்பலோடு கும்பலாய்க் கரைந்துபோய்விடாமல் எந்தச் சூழ்நிலையிலும் தனது சொந்த நம்பிக்கையின்படி சுயமாகச் செயல்படும் தைரியத்தை அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.
அனைத்து மனிதர்களின் குரலுக்கும் அவன் செவிசாய்க்க வேண்டும். எனினும் உண்மை என்னும் திரையில் வடிகட்டி நல்லவற்றை மட்டும் பிரித்து எடுக்க அவனுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
துயரமான வேளைகளில் சிரிப்பது எப்படி என்று அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். கண்ணீர்விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.
போலியான நடிப்பைக் கண்டால் எள்ளி நகையாடவும், வெற்றுப் புகழுரைகளைக் கண்டால், எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.
தனது செயல்திறனுக்கும், அறிவாற்றலுக்கும் மிக அதிக ஊதியம் கோரும் சாமர்த்தியம் அவனுக்கு வேண்டும். ஆனால், தனது இதயத்திற்கும், தனது ஆன்மாவிற்கும் விலை பேசுபவர்களை அவன் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
பெருங்கும்பல் திரண்டு வந்து கூச்சலிட்டாலும், நியாயம் என்று தான் நினைப்பதை நிலைநாட்ட தொடர்ந்து போராடுவதற்கு அவனுக்கு நம்பிக்கை கொடுங்கள்.
அவனை அன்பாக நடத்துங்கள். ஆனால் அதிக செல்லம்காட்டி சார்ந்திருக்கவைக்க வேண்டாம். ஏனென்றால் கடுமையான தீயில் காட்டப்படும் இரும்பு மட்டும்தான் பயன்மிக்கதாக மாறுகிறது.
தவறு கண்டால் கொதித்து எழும் துணிச்சலை அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். அதே வேளையில் தனது வலிமையை மௌனமாக வெளிப்படுத்தும் பொறுமையை அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.
அவன் தன்மீதே மகத்தான நம்பிக்கை வைக்க வேண்டும். அப்போதுதான் மனித குலத்தின் மீது அவன் மகத்தான நம்பிக்கைகொள்வான்.
இது ஒரு மிகப்பெரிய பட்டியல்தான், இதில் உங்களுக்குச் சாத்தியமானதையெல்லாம் கற்றுக்கொடுங்கள். 
அவன் மிக நல்லவன், எனது அன்பு மகன்.


ஆபிரகாம் லிங்கன் எழுதிய புகழ் பெற்ற கடிதம் Reviewed by NEWMANNAR on July 31, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.