அண்மைய செய்திகள்

recent
-

எனது மூத்த மகனை வெள்ளை வானில் கடத்திய இராணுவம் இரண்டாவது மகனை பிடித்து சித்திரவதை செய்தனர். தாய் சாட்சியம்.

எனது 14 வயதுடைய மூத்த மகனை வெள்ளை வானில் வந்தவர்கள் வீட்டில் வைத்து கடத்திச் சென்ற நிலையில் என்னிடம் 20 இலட்சம் ரூபா பணம் தருமாறும் இல்லையேல் மகனை சுட்டு கொலை செய்து சடலமாக வீட்டிற்கு முன் போடுவோம் என்று தொலைபேசியில் சிங்களத்தில் ஒருவர் கூறினார்.

அவ்வளவு தொகைப்பணம் என்னிடம் இல்லை என்று கூறியதினால் சில தினங்களில் எனது இரண்டாவது 10 வயதுடைய மகனை வீதியில் வைத்து கடத்தி சித்திரவதை செய்யப்பட்டு பின்னர் பின் விடுதலை செய்யப்பட்டார் என தாய் ஒருவர் காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் இன்று(11) சாட்சியமளித்தார். 

மடு பிரதேச செயலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம் பெற்ற காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரனைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியப்பதிவுகள் இடம் பெற்ற போது தாய் ஒருவர் இவ்வாறு சாட்சியமளித்தார். 

அவர் மேலும் சாட்சியமளிக்கையில்,

இரணை இலுப்பைக்குளம் மாங்கண்டி கிராமத்தில் உள்ள தனது வீட்டில் வைத்து கடந்த 04.04.2008 அன்று இரவு   14 வயது மகனை வெள்ளை வானில் வந்தவர்கள் கடத்தி சென்றனர்.

நாங்கள்  உடனடியாக இரணை இலுப்பைக்குளத்தில் உள்ள இராணுவத்திடம் சென்று கேட்டோம்.

ஆனால் அவர்கள்  தாம் பிடிக்கவில்லை எனத் தெரிவித்தனர். பின்னர்  3 நாட்களுக்கு பின்னர் 20  இலட்சம் ரூபாய் பணம்  தந்தால் மகனை விடுதலை செய்வோம்.பணம் தராது விட்டால் மகனை கொலை செய்து சடலமாக வீட்டில் கொண்டு வந்து போடுவோம் என்று சிங்களத்தில் கூறினர். 

எங்களுக்கு சிங்களம் தெரியாது என்பதினால் பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் தொலைபேசியை கொண்டு போய் கொடுத்து விபரத்தை கேட்டோம்.

அதற்கு எங்களால் முடியாது என்றும் சுட்டுக் கொண்டு வந்து வீட்டிற்கு முன் போடுமாறும் கூறினோம். 

அதன் பின்னர் சில நாட்களில் எனது 10 வயது மகன் வீதியால் வந்து கொண்டிருக்கும் போது இராணுவ ரக்கில் வந்தவர்களால் எனது மகன் கடத்தப்பட்டார். 

மாலை 4 மணியாகியும் வீட்டுக்கு மகன் வராததன் காரணத்தினால் இரணை இலுப்பைக் குளத்தில் உள்ள இராணுவ முகாமிற்குச் சென்று  கேட்ட போது தாங்கள் மகனை பிடிக்கவில்லை என்று கூறி அனுப்பினார்கள்.

 தொடர்ந்தும்  நாங்கள்  இரணை இலுப்பைக்குளத்தில் உள்ள குறித்த இராணுவ முகாமிற்கு சென்று கேட்கும் போது பிடித்தவரை அடையாளம் காட்டுமாறு இராணுவ அதிகாரி எங்களிடம் கூறினார். 

அப்போது நாங்கள்  ஒருவரை அடையாளம் காட்டினோம். பின்னர் 6 நாட்களின் பின்னர் 10 வயது மகன் கண்கள் கட்டப்பட்ட நிலையில் கை, முகம் போன்ற இடங்களில் பிளேட்ரால் வெட்டி காயப்படுத்தி சித்திரவதை செய்த பின்னர் வீதியில் இறக்கி விட்டுச் சென்றனர்.

அந்த வேளை வீட்டில் வைத்து வெள்ளை வானில் கடத்தப்பட்ட எனது அண்ணாவை இராணுவம் சுட்டு விட்டதாக தன்னை வைத்திருந்த முகாமில் கூறினார்கள் என்றும் தன்னை சித்திரவதை செய்தார்கள் என்றும்  எங்களிடம் மகன் கூறினார். 

ஆனால் எனது மூத்த மகன்  குறித்து எதுவும் தெரியவில்லை. ஆனால் இராணுவம் கடத்தியது என்று நான் உறுதியாக கூறுகின்றேன் என குறித்த தாய் ஆணைக்குழு முன் மேலும் தெரிவித்தார். 




எனது மூத்த மகனை வெள்ளை வானில் கடத்திய இராணுவம் இரண்டாவது மகனை பிடித்து சித்திரவதை செய்தனர். தாய் சாட்சியம். Reviewed by NEWMANNAR on August 11, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.